25 September 2021

அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்

  அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்

108 திவ்ய தேசங்களில் ஐந்தாவது  திவ்யதேசம், திருஅன்பில். இந்தத் திருக்கோயில் திருச்சி கல்லணை கும்பகோணம் செல்லும் வழியில்  இருக்கிறது. லால்குடிக்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.



       
       மூலவர்     : சுந்தர்ராஜப்பெருமாள்
  உற்சவர்  :  வடிவழகிய நம்பி
  தாயார்     : சுந்தரவல்லி நாச்சியார் 
  தல விருட்சம் : தாழம்பூ
         விமானம்  : தாரக விமானம் 
  தீர்த்தம் : மண்டுக தீர்த்தம்









தல வரலாறு:

ஒரு முறை படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு உலக உயிர்களின் அழகுக்குத் தாமே காரணம் என்ற அகந்தை பிறந்தது. 

பெருமாள் அறிவுரைத்தும் பிரம்மனுக்கு ஆணவம் அழியவில்லை. பூமியில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படிச் சபிக்கிறார் திருமால். பூமியில் தன் தவறுக்குக் பிராயச்சித்தம் தேடி பிரம்மன் ஒவ்வொரு தலமாக வழிபட்டு இங்கு வருகிறார்.

பேரழகு பொருந்திய மனிதர் ஒருவரைக் காண்கிறார். இவ்வளவு அழகுமிகுந்த ஒருவரைக் கண்டதில்லை என்கிறார். அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டையும் பெற்றவர் சிறப்பான வாழ்வைப் பெறுவதில்லை என்ற உண்மையை உணர்த்தி அவருக்குப் பள்ளிகொண்ட கோலத்தில் எழிலான காட்சியை அருள்கிறார். 

பிரம்மன் ஆணவம் அழியப் பெறுகிறார். பிரம்மன் மீது அன்பு கொண்டு திருமால் காட்சி தந்ததால் இத்தலம் அன்பில் என அழைக்கப்படுகிறது.








தலபெருமை:

சுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும், நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார். மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்தபோது, அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். 

சுதபா தவத்தில் இருந்ததால், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை.

 நீண்டநேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். 

இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர் (மண்டுகம் – தவளை) என்ற பெயர் ஏற்பட்டது. 

துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார்.

 துர்வாசர் அவரிடம், “உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாப விமோசனம் பெறுவாய்," என்றார். 

அதன்படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுகதீர்த்தம்) சுவாமியை எண்ணி தவம் செய்து வந்தார். 

மகாவிஷ்ணு அவருக்கு சுந்தர்ராஜராக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.











சுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார். 

உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன், இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்.








அமர்ந்த நிலையில் ஆண்டாள்: 

முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம். 

தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள். 












மங்களாசாசனம்:
திருமழிசை ஆழ்வாரால் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.






மிக அழகிய நந்தவனம் சூழ, அமைதியான இடத்தில்  இருந்து   இங்கு பெருமாள் காட்சி  அளிக்கிறார்.  







நாகத்து அணைக் குடந்தை, வெஃகா, திரு எவ்வுள்,
நாகத்து அணை அரங்கம் பேர்  அன்பில், - நாகத்து 
அணைப் பாற்கடல் கிடக்கும்,  ஆதி நெடுமால்,
அணைப்பார் கருத்தன்  ஆவான் (2417)








சுந்தர்ராஜப் பெருமாள் திருவடிகளே சரணம் ...

சுந்தரவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம் ...

அன்புடன்,

அனுபிரேம்


5 comments:

  1. பதிவு மிக அருமை.


    சுந்தர்ராஜப் பெருமாள் திருவடிகளே சரணம்.
    சுந்திரவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. அனு , படங்கள் விவரம் எல்லாம் அருமை.

    கீதா

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அழகிய திருஅன்பில் சுந்தர ராஜ பெருமாள் கோவில் படங்கள், விபரங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. அழகான கோபுர தரிசனங்களுடன், ஸ்ரீமன்நாராயணனின் படங்களின் திவ்ய தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. அனுப்ரேம்.... இரு நாட்கள் முன்பு இந்தத் திவ்யதேசத்திற்குச் சென்றிருந்தேன். இங்கு, பெருமாள் (மூலவர்) முகம் மிக அழகாக நம்மையே பார்ப்பதுபோல இருக்கும். இந்தப் பெருமாள் பாதத்தின் இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீதேவி பூதேவி இருப்பதால், அவர்கள் மடியில் பெருமாள் பாதங்கள் இருப்பதால், பாதசேவை இந்தத் தலத்தில் கிடைக்காது. அதனால் நீங்கள் போட்டிருக்கும் மூலவர் படம், இந்தத் தலத்தைச் சேர்ந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் கவனிக்கவில்லை.தற்பொழுது மூலவர் படத்தை மாற்றிவிட்டேன் .

      நாங்களும் காசி பயணத்தில் இருந்ததால் இந்த தாமதமான மறுமொழி ...

      Delete