12 August 2020

யசோதைக்கு விஸ்வரூப தரிசனம்..

 



ஒரு நாள் கிருஷ்ணன் தன் நண்பர்களோடு வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். 

திடீரென்று பலராமன் யசோதையிடம் சென்று, "அம்மா, அம்மா! கிருஷ்ணன் மண்ணைத் தின்றுவிட்டான்" என்று சொன்னார். 

யசோதை இதை நம்பவில்லை. 

ஆனால் மற்ற சிறுவர்களும், "ஆமாம், அம்மா! நாங்கள் தடுத்தும் கேளாமல் அவன் எங்கள் எல்லோருக்கும் எதிரில் மண்ணை தின்றான்" என்று சொன்னார்கள்.

இதை கேட்டு யசோதை கோபம் கொண்டாள். 

வீட்டில் எத்தனையோ தின்பண்டங்கள் இருக்க, அவன் எதற்காக மண்ணை தின்ன வேண்டும்? அவள் ஓடிப் போய், இடக்கையினால் கிருஷ்ணனை பிடித்துக்கொண்டு வல கையினால் அவனை அடிக்கப் போனாள்... "குறும்புக்காரப் பயலே! எதற்காக மண்ணை தின்றாய்! உன் நண்பர்களும், பலராமனும் நீ மண் தின்னதாகச் சொல்லுகிறார்களே! என்று கேட்டாள்.



 



"இல்லை, அம்மா நான் மண் தின்னவில்லை. அவர்கள், எல்லோரும் பொய் சொல்லுகிறார்கள். நீ வேண்டுமானால் என் வாயைப் பார்" என்றான் கிருஷ்ணன். 

ஆனால் அன்னை யசோதை அவன் வாயில் என்ன பார்த்தாள்! அவனுடைய சிறு வாயினுள் அவள் அண்டம் முழுவதையும் பார்த்தாள்.

 பூமி, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், எல்லாம் அங்கு இருந்தன! 

எல்லாத் தேவர்களும் தேவதைகளும் அங்கே காணப்பட்டார்கள். 

ஓர் அபூர்வமான ஒளி வாயில் இருந்தது. 

உள்ளே கோகுலத்தைக் கண்டாள். 

கோகுலத்தில் தான் கிருஷ்ணன் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். 

தன் மகனின் சிறு வாயினுள் இத்தனை பொருள்கள் இருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை!  ஆனால் எல்லாம் அங்கு இருக்கின்றனவே! அவள் ஆச்சரியமும் பயமும் அடைந்தாள். 

"இது என்ன கனவா? அல்லது ஆண்டவனின் செய்கையா! அல்லது என்னுடைய கற்பனைதானா? அல்லது இந்தச் சிறுவனுக்குத்தான் ஏதோ அதிசிய சக்தி இருக்கிறதா!" என்று பலவாறு நினைத்துப் பார்த்தாள்.


அதற்குப் பிறகு, "இது கனவல்ல. நான் தான் என் கண்களாலேயே பார்த்துக் கொண்டியிருக்கிறேனே! கர்க்க மகரிஷி சொன்னது போல, என் மகனுக்கு ஏதோ தெய்வீக சக்தி இருக்க வேண்டும்" என்று தீர்மானித்தாள்.

 கடைசியில் அவள் இறைவனைச் சரண் அடைந்தாள். 

தன் குழந்தையைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள். 

தீர்வு காண முடியாத பிரச்சனைகள் நம்மைத் தாக்கும் போது, பகவானிடம் சரண் அடைந்து, அவரை வேண்டிக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன இருக்கிறது? அறிவிற் சிறந்த யசோதை இந்த வழியைதான் பின்பற்றினாள். 

பகவான் கிருஷ்ணர் மாயை என்னும் வலையை அவள்மீது வீசிவிட்டு, தாம் மீண்டும் பழைய குழந்தையைப் போல அவள்முன் தோற்றமளித்தார்.

 கனவு உடனே மறைந்துவிடுவது போல நடந்த விசயங்கள்  அத்தனையும் யசோதைக்கு மறைந்துவிட்டன. தாய்ப்பாசம் மேலிடவே குழந்தையைத் தன் மடியில் கிடத்தி, அவனை  கொஞ்ச ஆரம்பித்தாள்.

(படித்ததில் பிடித்தது  )







பெரியாழ்வார் திருமொழி
மூன்றாம்பத்து
மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை 

கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்


சீலைக்குதம்பை ஒருகாது ஒருகாதுசெந்நிறமேல் தோன்றிப்பூ *
கோலப்பணைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் *
காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை  வந்துகாணீர் *
ஞாலத்துப்புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை. (2)

1 244


கன்னிநன்மா மதிள்சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்னரங்கம் *
மன்னியசீர் மதுசூதனா! கேசவா! பாவியேன்வாழ்வுகந்து *
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன் *
என்னின்மனம்வலியாள் ஒருபெண்இல்லை என்குட்டனே! முத்தம்தா.

2 245





காடுகளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி * கார்க்கோடல்பூச் 
சூடிவரிகின்ற தாமோதரா! கற்றுத்தூளிகாண் உன்னுடம்பு *
பேடைமயிற்சாயல்பின்னை மணாளா! நீராட்டமைத்து வைத்தேன் *
ஆடிஅமுதுசெய் அப்பனுமுண்டிலன் உன்னோடு உடனேயுண்பான். 

3 246


கடியார்பொழிலணி வேங்கடவா! கரும்போரேறே! * நீயுகக்கும் 
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய்மாலே! * 
கடிய வெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல 
அடியும்வெதும்பி * உன்கண்கள்சிவந்தாய் அசைந்திட்டாய் நீஎம்பிரான். 

4 247





பற்றார்நடுங்க முன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே! * 
எஞ்சிற்றாயர் சிங்கமே! சீதைமணாளா! சிறுக்குட்டச் செங்கண்மாலே! * 
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின்மேல் வைத்துப்போய் *
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய்போலும். 

5 248


அஞ்சுடராழி உன்கையகத்தேந்தும் அழகா! நீபொய்கைபுக்கு *
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன் *
என்செய்ய என்னைவயிறு மறுக்கினாய் ஏதுமோரச்சமில்லை *
கஞ்சன்மனத்துக்கு உகப்பனவேசெய்தாய் காயாம்பூ வண்ணம்கொண்டாய். 

6 249






பன்றியும்ஆமையும் மீனமுமாகிய பாற்கடல்வண்ணா! * உன்மேல் 
கன்றினுருவாகி மேய்புலத்தே வந்த கள்ளஅசுரன் தன்னை *
சென்றுபிடித்துச் சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும் *
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமாவர்களே.

7 250


கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா! கோவலர் இந்திரற்கு *
காட்டியசோறும் கறியும்தயிரும் கலந்துடன் உண்டாய்போலும் *
ஊட்டமுதலிலேன் உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது *
வாட்டமிலாப் புகழ்வாசுதேவா! உன்னைஅஞ்சுவன் இன்று தொட்டும்.

8 251






திண்ணார் வெண்சங்குடையாய் திருநாள் திருவோணமின்றேழுநாள் * முன் 
பண்ணேர் மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன் *
கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும் ஆக்கிவைத்தேன் *
கண்ணா! நீநாளைத் தொட்டுக் கன்றின்பின்போகேல்  கோலம்செய்திங்கேயிரு.

9 252


புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி தன்புத்திரன் கோவிந்தனை *
கற்றினம் மேய்த்துவரக்கண்டுகந்து அவள் கற்பித்த மாற்றமெல்லாம் *
செற்றமிலாதவர் வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல் *
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன் கழலிணைகாண்பார்களே. (2) 

10 253






கிருஷ்ணா!!!!! ......    கண்ணா!!!!! .......     கோவிந்தா !!!!! .........







ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 

4 comments:

  1. என்ன தவம் செய்தனை - யசோதா
    எங்கும் நிறை பரப்ரம்மம்
    அம்மா என்ற ழைக்க
    என்ன தவம் செய்தனை...

    இனிய தரிசனம்...
    கிருஷ்ணா சரணம்...

    ReplyDelete
  2. படங்கள் எல்லாமே கொள்ளையழகு. எங்கிருந்துதான் கலெக்ட் செய்தீர்களோ. ஓவியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

    கோகுலம், ஆய்ப்பாடி.... அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. ஆனால் படித்த கதைகள், நிகழ்வுகள் எல்லாம் மனதில் ஓடினாலும் தற்போதைய இடங்கள் அதனை ரிஃப்லெக்ட் செய்யவில்லை.

    ப்ரபந்தம் அருமை. நல்ல தரிசனம்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் இருக்கிறது. கதையும் அருமை. பிரபந்தங்களும் அருமை. கண்ணனின் விளையாட்டுகள் எப்போது படித்தாலும் புதிதுதான். அவனுடன் ஜனித்து அவனை நேரில் பார்க்கும் பாக்கியத்தை பெற்றிருக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் எப்போதும் உண்டு. கிருஷ்ணர் திருவடிகளே போற்றி.. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. பர்பந்த பாடல்கள், படங்கள், படித்த பகிர்வு எல்லாம் மிக அருமை.
    கண்ணன் படங்கள் எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம்.பேரன் கிருஷ்ணா கார்ட்டூன் கதை காட்டிக் கொண்டு இருக்கிறான் படங்களும் கண்ண்னின் குறும்புகளும் நம்மை வேறு உலகம் அழைத்துச் செல்லும்.

    ReplyDelete