கறவைகள்
'கூடாரை வெல்லும்' பாசுரத்தில் கிருஷ்ணனின் அருளால் தாங்கள் பெற்ற பரிசுகளை பட்டியலிடும் ஆண்டாள், தாங்கள் கிருஷ்ணனுடனும் நப்பின்னையுடனும் கூடி இருந்து, நெய்கலந்த பால்சோற்றை சாப்பிடப்போவதாகச் சொல்கிறாள். பின்னர், இப்போதுதான் நினைவுக்கு வந்ததுபோல், கிருஷ்ணனை ஆயர்குலச் சிறுவன் என்று நினைத்து, ஒருமையில் அழைத்ததை எல்லாம் பொருட்படுத்தாமல், மிக்க அன்புடனே வேண்டியதைத் தந்த கிருஷ்ணனின் அன்பைப் போற்றுகிறாள்.
பொருள் -
'பசுக்களை மேய்வதற்காக காட்டுக்கு அழைத்துச் சென்று, பசுக்களை மேயவிட்டு, அங்கேயே மற்றவர்களுடன் கூடி உண்ணும் ஆயர்குலத்தில் பிறந்த அறியாத சிறுமிகள் நாங்கள்.
திருமாலின் அவதாரமான உன்னை நாங்கள் பெற்றது எங்களுடைய பூர்வபுண்ணியம்தான்.
நாங்கள் உன்னிடம் கேட்ட கைவளையும், தோள்வளையும், தோடும் எல்லாம் எங்களுக்குப் பெரிதல்ல. குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் நீ என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்' என்கிறாள். ஆண்டாள் திருப்பாவையின் அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் கோவிந்த நாமத்தைக் கூறுகிறாள்.
27-வது பாடலில் 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்றும்; இந்தப் பாசுரத்தில் 'குறைவொன்றும் இல்லாத கோவிந்தன்' என்றும்; அடுத்த பாடலில் 'இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா' என்றும் மூன்று பாசுரங்களில் தொடர்ந்து கோவிந்த நாமத்தைக் கூறுகிறாள்.
கோவிந்தன் என்றால் பசுக்களைக் காப்பவன் என்று பொருள். இங்கே பசுக்கள் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களாகிய நம்மைத்தான். ஆக, பசுக்களாகிய நம்மையெல்லாம் கடைத்தேற்றுவதற்காகவே, பகவான் கிருஷ்ணனாக அவதரித்தான்.
'அப்படி ஆயர்குலத்தில் பிறந்த எங்களைக் காப்பாற்றுவதற்காக வைகுந்தத்தில் இருந்து இறங்கி எங்கள் கோகுலத்தில் எங்கள் மத்தியில் ஆடியும் பாடியும் திரிந்த உன்னை, அறியாத சிறுவன் என்று நினைத்த நாங்கள், உன்னை ஒருமையில் அழைத்தும், நீ எங்களிடம் துவேஷம் கொள்ளாமல், எங்களிடம் அன்பு கொண்டு நாங்கள் கேட்டதையெல்லாம் அருள் செய்தாய். இப்படியான பிரேமையை எங்களிடம் வைத்திருக்கும் உன்னை நாங்கள் இந்த கோகுலத்தில் பெறுவதற்கு புண்ணியம்தான் செய்திருக்கவேண்டும்.
'ஆனால், நாங்கள் முன் பாசுரத்தில் உன் அருளால் பெற்ற பரிசுகள் எல்லாம் பரிசுகளே இல்லை' என்று சொல்லும் ஆண்டாள், மார்கழி நீராடி கிருஷ்ணனின் அருளால் பெறக்கூடிய மேன்மையான பரிசு என்று எதைச் சொல்கிறாள் என்றால், கிருஷ்ணனுடனே ஐக்கியமாகிவிடும் பேரானந்த நிலையைத்தான்.
இந்தப் பிறவி என்பது முடிந்துவிடக்கூடியது.
கிருஷ்ணனும் அவதாரக் காலம் முடிந்ததும் உடலைத் துறந்து வைகுந்தத்துக்குச் செல்லவேண்டியவன்தான். அப்படி கிருஷ்ணன் வைகுந்தம் செல்லும்போது, அவனுடனே தாங்களும் வைகுந்தத்துக்குச் சென்று பகவானுடைய திருவடி நிழலிலேயே இருக்கவேண்டும் என்பதைத்தான் ஆண்டாள், மார்கழி நீராடி தாங்கள் கடைப்பிடிக்கும் பாவை நோன்புக்கு உரிய பரிசு என்று கூறுகிறாள்.
ஆண்டாளின் இந்தப் பாசுரத்தில் உள்ள குறைவொன்றும் இல்லாத கோவிந்தா என்ற வரிக்கு, அகோபிலம் மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் வெகு அழகாக ஒரு விளக்கம் அருளி இருக்கிறார்.
'கிருஷ்ணன் ஶ்ரீவைகுந்தத்தில் இருக்கும்போது குறைவொன்றும் இல்லாதவனாக இருந்தாயோ அப்படியே ஆயர்குலத்தில் உதித்தபோதும் குறைவொன்றும் இல்லாதவனாக இருக்கிறாய். உலகத்தில் உள்ள ஆயர்குலத்தைக் காட்டிலும், கோகுலத்தில் உள்ள ஆயர்குலம் மிகவும் மேன்மை பெற்றது. உன்னுடைய திருவடிகளில் சஞ்சலமற்ற பக்தியை உடைய ஆயர்குலப் பெண்களைப் பெற்றெடுத்த குலம் அல்லவா கோகுலத்து ஆயர்குலம்?! இந்த ஆயர்குலத்தில் வந்து தோன்றியதால் எந்த ஒரு குறைவும் உனக்கு வராது' என்று ஆண்டாள் கூறுகிறாள்.
ஆண்டாள் தன்னை கோகுலத்து ஆயர்குலப் பெண்ணாக பாவித்துக்கொண்டதால், கோகுலத்தைப் பெருமைப்படுத்திக் கூறுகிறாள்.
(இணையத்திலிருந்து )
திருமயிலை (மயிலாப்பூர்)- ஸ்ரீ மயூரவல்லி தாயார் |
அன்புடன்
அனுபிரேம்
No comments:
Post a Comment