01 January 2021

17. அம்பரமேதண்ணீரே

 அம்பரமே


கதவை திறந்ததும் கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலராமரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்




நந்தகோபனின் மாளிகைக்கு தோழிகளுடன் சென்ற ஆண்டாள், ஒருவழியாக வாயில் காவலனை சமாதானப் படுத்திவிட்டு, மாளிகைக்குள் செல்கிறாள். 

அந்த மாளிகை பல கட்டுகளைக் கொண்ட விசாலமான மாளிகை.

 முதல் கட்டில் நந்தகோபன் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பி அனுமதி கேட்ட பிறகுதான், அடுத்த கட்டுக்குப் போக முடியும். 

எனவே முதலில் ஆண்டாள் நந்தகோபனை எழுப்பி அனுமதி கேட்கிறாள். 






அம்பரமேதண்ணீரே சோறே அறஞ்செய்யும் *

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் *

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! * 

எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய் *

அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த *

உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் *

செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா! * 

உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய்.


பொருள் -

மனிதர்களுக்குத் தேவையான உணவு, உடை, தண்ணீர் எதற்கும் நந்தகோபனின் கோகுலத்தில் பஞ்சமே இல்லை. அப்படி இருக்கும்போது, ஆண்டாள் எப்படி அவற்றையெல்லாம் தர்மம் செய்பவராக நந்தகோபனை அழைக்கிறாள்? காரணம், கோகுலத்தில் முன் சொன்ன மூன்று மட்டுமல்லாமல் அனைத்து வளங்களும் நிறைந்தே இருக்கின்றன. 


வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கெல்லாம் உடை, உணவு, தண்ணீர் ஆகியவற்றை நந்தகோபன் கொடுப்பதால்தான், இந்த மூன்றையும் தர்மம் செய்வதாக நந்தகோபனைப் புகழ்கிறாள். அனைத்து செல்வங்களுக்கும் மேலான செல்வமாக, செல்வங்களை எல்லாம் தட்டாமல் தரும் கிருஷ்ணனை அல்லவா பிள்ளைச் செல்வமாகப் பெற்றிருக்கிறார் நந்தகோபன்?! எனவே, நந்தகோபனை எம்பெருமான் என்று போற்றுகிறாள். 

அதுமட்டுமல்ல, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறாள்.அதாவது, நீங்கள் தானம் கொடுப்பதில் சிறந்தவர். ஆனால், தானம் கொடுப்பவர்க்கும், தானம் பெறுபவர்க்கும் அளவற்ற புண்ணியத்தைத் தரக்கூடிய தானம் ஒன்று உண்டு. அதுதான், எங்களுக்கெல்லாம் அருள்செய்ய நீர் வழங்கவேண்டிய தானம் நாராயணமூர்த்தி தானம்தான். அந்த நாராயணமூர்த்திதான் தங்களிடம் கிருஷ்ணனாகத் தோன்றி இருக்கிறார். அவருடைய அருளையே நாங்கள் வேண்டி விரும்பி வந்திருக்கிறோம். 

தட்டாமல் அவரை எங்களுடன் வர அனுமதிக்கவேண்டும் என்று ஆண்டாள் வேண்டுகிறாள். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருப்பதாகச் சொன்னதும் நந்தகோபனுக்கு மறுக்க முடியவில்லை. 

ஆனால், பாவம் அவரால் என்ன செய்யமுடியும்? கிருஷ்ணன் யசோதையின் செல்லப் பிள்ளை ஆயிற்றே. அவளுடைய அனுமதி அல்லவா வேண்டும்? எனவே நந்தகோபர் அவர்களிடம், யசோதையைப் பார்க்கும்படி சொல்லி அனுப்புகிறார்.


ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் அடுத்த அறைக்குச் செல்கின்றனர். 

அங்கே யசோதை உறங்கிக் கொண்டு இருக்கிறாள். அவளுடைய மனதைக் குளிர்வித்தால்தான் கிருஷ்ணனை தங்களுடன் அழைத்துச் செல்லமுடியும். எனவே, யசோதையைப் பலவாறாகப் புகழ்கிறாள்.

 வஞ்சிக்கொடி போன்ற பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே! பிறந்த குலத்துக்குப் பெருமை சேர்க்கும் குலவிளக்கே! எங்களுக்கெல்லாம் தெய்வம் போன்றவளே! யசோதை பிராட்டியே! நாங்கள் கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருக்கிறோம். அவனை யமுனைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம். 

நீ எப்படிப்பட்ட பாக்கியசாலி?! பகவான் வைகுந்தவாசனாம் நாராயணமூர்த்தியின் மனக் குறையைப் போக்கியவள். ஆம், தனக்கொரு தாய் இல்லையே என்ற குறை பகவானுக்கு இருந்தது. அவனைப் பிள்ளையாகப் பெற்றதால், அவனுக்கு ஒரு தாய் இல்லை என்ற குறை இல்லாதபடி செய்துவிட்டாய். உன்னை விடவும் இந்த உலகத்தில் பாக்கியசாலி வேறு யார் இருக்கிறார்கள்? 

கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருக்கும் நாங்கள் அவனை யமுனைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம். தடை சொல்லாமல் கிருஷ்ணனை எங்களுடன் அனுப்ப சம்மதம் தெரிவிக்கவேண்டும் என்று ஆண்டாள் கேட்டதுமே,  யசோதையின் மனம் குளிர்ந்துவிடுகிறது. ஆண்டாளையும் அவளுடைய தோழிகளையும் அடுத்த கட்டத்துக்கு அனுப்புகிறாள்.


அந்தக் கட்டில் அடுத்தடுத்து இரண்டு அறைகள் காணப்படுகின்றன. ஒரு அறையில் கிருஷ்ணனும் அடுத்த அறையில் பலதேவனும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டுக்குச் சென்ற ஆண்டாள்,


முதலில் கிருஷ்ணனை எழுப்புகிறாள். ஆகாயத்தை ஊடுருவும்படி அறுத்து, உன் திருவடியால் ஓங்கி உலகத்தை அளந்த உத்தமனே! தேவர்களுக்கெல்லாம் தலைவனே! உன்னுடைய அருள் வேண்டி நாங்கள் வந்திருக்கிறோம். உடனே எழுந்து எங்களுடன் யமுனைக்கு வரவேண்டும் என்கிறாள். ஆனால், கிருஷ்ணன் அண்ணனைப் பிரியமாட்டான் என்பதால், பலராமனையும் எழுப்புகிறாள். செம்பொன்னால் ஆன வீரக் கழல்களை அணிந்த திருவடிகளை உடையவனே! பலதேவா! உன் தம்பியும், அவனுடைய சொல்படி நடக்கும் நீயும் சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும் என்கிறாள்.

(இணையத்திலிருந்து )


திருக்குடந்தை - ஸ்ரீ கோமளவல்லி தாயார்.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. தங்களனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. எங்கும் மகிழ்ச்சியே நிறைவதற்கு வேண்டிக் கொள்வோம்...

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete