13 January 2021

29.சிற்றஞ் சிறுகாலே

சிற்றஞ் சிறுகாலே 

"கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!"






கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்த பரமாத்மாவுடன் ஜீவாத்மாவாகிய தான் ஐக்கியமாகிவிடவேண்டும் என்று விரும்பிய ஆண்டாள், அதற்காக புனிதமான மார்கழி மாதத்தில் நீராடி, திருப்பாவை பாடி கிருஷ்ணனை வழிபட விரும்புகிறாள். 

அவன் அருள் இருந்தால்தானே அவன் தாள் பணியமுடியும். 

மார்கழி நீராடி அவனைப் பணிய வேண்டுமானால், அவனும் தங்களுக்கு அருகில் இருந்தால்தானே முடியும்? எனவே கிருஷ்ணனையும் எழுப்பி தங்களுடன் யமுனைக்கு வருமாறு அழைக்கிறாள். அதற்கும் முன்பாக தான் பெறப்போகும் பேரின்பம் தன்னுடைய தோழியர்களும் பெறவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடலாகப் பாடி அவர்களை எழுப்பி தன்னுடன் அழைத்து வருகிறாள். நிறைவாக கிருஷ்ணனையும் எழுப்பி விட்டாள். கிருஷ்ணனும் அவர்களுக்கு அருள்புரிந்துவிட்டான். மேலும் தன்னை விரும்பி வணங்குவதன் காரணம் என்ன என்றும் கேட்கிறான். அதற்கு ஆண்டாள் சொல்கிறாள்:



சிற்றஞ் சிறுகாலே வந்துஉன்னைச் சேவித்து * உன் 

பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய் *

பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து * நீ 

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது *

இற்றைப்பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா! * 

எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் * உன்தன்னோடு 

உற்றோமேயாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் *

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (2)


பொருள் -

விடிந்தும் விடியாத இந்தக் காலைப் பொழுதில் நாங்கள் உன்னை வந்து எழுப்பி, பொன்போல் பிரகாசிக்கும் உன்னுடைய திருவடிகளை எதற்குப் பணிந்து வணங்குகிறோம் தெரியுமா?


கோகுலத்து பசுக்களை அவற்றின் பசி நீங்கும்வரை மேய்த்து, அதன் பிறகே உண்ணும் உயர்ந்த குணம் கொண்ட குலத்தில் பிறந்த நீ, எங்களை ஆட்கொள்ளவேண்டும். நாங்கள் உன் திருவடியில் இருந்து சதா காலமும் உன்னை பூஜித்துக் கொண்டு இருக்கவேண்டும்.

இன்று மட்டும் நீ எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்பதற்காக நாங்கள் மார்கழி நீராடி உன்னை வழிபடவில்லை; என்றென்றும் ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உன்னுடனே இருக்கவேண்டும்; உனக்கே நாங்கள் ஆட்படவேண்டும். இதைத் தவிர வேறு எந்த விருப்பமும் எங்களுக்கு இல்லை. அப்படி உன்னில் இருந்து மாறுபட்ட ஒன்றின்மேல் எங்கள் விருப்பம் சென்றால், அந்த விருப்பதைப் போக்கி, என்றும் உன்னிடமே எங்கள் மனம் லயித்திருக்கும்படிச் செய்யவேண்டும் என்று ஆண்டாள் பிரார்த்திக்கிறாள்.

கிருஷ்ணன் பரமாத்மா; பூமிதேவியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் ஜீவாத்மா. உலகத்தில் மனிதர்களாகப் பிறக்கும் நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள். நம்மை நம்முடைய புண்ணிய காரியங்களால் ஆட்கொண்டு, நமக்கு மீண்டும் பிறவாத வரம் அருளி, நம்மைத் தன்னுடனே சேர்த்துக்கொள்ளும் இறைவன் பரமாத்மா.


அந்த பரமாத்மாதான் நாமெல்லாம் உய்யும்படி கிருஷ்ணனாக அவதரித்தார். நம்மையெல்லாம் இறைவனிடம் ஆற்றுப்படுத்த விரும்பி பூமிதேவி ஆண்டாளாக திருவில்லிபுத்தூரில் அவதரித்து, தன்னுடைய பாசுரங்களால் நம்மை பகவானிடம் ஆற்றுப்படுத்துகிறாள்.


(இணையத்திலிருந்து )

 

திருக்கண்ணபுரம் - ஸ்ரீ கண்ணபுரநாயகி தாயார்.

         


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்


No comments:

Post a Comment