13 January 2021

30.வங்கக்கடல்

 வங்கக்கடல்

திருப்பாவை முப்பது பாடல்களையும் பாடுவோர் திருமால் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்





இப்படி ஆண்டாள் நமக்கு அருளிய இந்த திருப்பாவை பாசுரங்களை பக்தியுடன் பாராயணம் செய்தால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றியும் ஆண்டாள் திருப்பாவையின் நிறைவு பாசுரத்தில் அருளி இருக்கிறாள்.



வங்கக்கடல்கடைந்த மாதவனைக் கேசவனை *

திங்கள்திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி *

அங்கப்பறைகொண்டவாற்றை * அணிபுதுவைப் 

பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன *

சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே *

இங்குப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள் *

செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால் *

எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய். (2)


பொருள் -


திருப்பாற்கடலை அமுதம் வேண்டி கடைந்தபோது, பகவான் நாராயணன்தான் மந்தரமலையைத் தாங்கும் கூர்மமாக அவதரித்தார். அதனால்தான் பகவானை வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறாள். 

அறிவு பிரகாசிக்கும்படியான முகத்தை உடைய கோகுலத்து சிறுமியர்கள், கிருஷ்ணனாக அவதரித்த கிருஷ்ணனிடம் சென்று, அவன் திருவருளைப் பெறவேண்டி, திருவில்லிபுத்தூரில் பட்டர்பிரான் (பெரியாழ்வார்) மகளாக துளசி வனத்தில் தோன்றிய கோதை (ஆண்டாள்) சொன்ன இந்தத் தமிழ்மாலை முப்பதையும் நாள் தவறாமல் பாராயணம் செய்பவர்கள்,  செல்வத்தின் இருப்பிடமான திருமகளைத் தன் மார்பில் குடியிருக்கப் பெற்ற திருமாலின் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்று இன்பமுடன் வாழ்வார்கள் என்கிறாள். 

தேனினும் இனிய பாசுரங்களால் பரந்தாமனின் புகழ் பாடி நம்மையும் பகவானிடத்தே ஆற்றுப்படுத்திய சுடர்க்கொடி ஆண்டாளின் திருவடிகளைப் பணிவோம்.


(இணையத்திலிருந்து )

திருவரங்கம் - வெளி ஆண்டாள் சந்நிதி



ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்


2 comments:

  1. வணக்கம் சகோதரி

    தெய்வீக படங்கள் அருமை. தரிசித்துக் கொண்டேன். இன்றைய பாசுரத்தின் பொருளுணர்ந்து மகிழ்ந்தேன்.

    கோதை நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 30-ன் பாடல்களின் விளக்கங்களையும் இத்தனை நாளும் அமுதமாக எங்களுக்கு பகிர்ந்து தந்தமைக்கு மிக்க நன்றிகள். நேற்று என்னால் வர இயலவில்லை. மேலும் நான் தவற விட்டவைகளையும் படிக்கிறேன்.

    உங்களுக்கு போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. படங்கள் அனைத்தும் அழகு. மாதம் முழுவதும் சிறப்பான பதிவுகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete