11 January 2021

27.கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா 

"நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்" 

திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களில் மிகவும் விசேஷமான பாசுரம் 27-வது பாசுரம். 

 மார்கழி நீராடி பாவை நோன்பு இருக்க விரும்பிய ஆண்டாள், நோன்பு இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளை இரண்டாவது பாசுரத்தில், 'மையிட்டு நாம் எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; நெய்யுண்ணோம்; பாலுண்ணோம் என்றெல்லாம் கூறும் ஆண்டாள், 27-வது பாசுரத்தில் விரதம் பூர்த்தியான மகிழ்ச்சியில் தங்களுடைய கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்று விவரிக்கிறாள்.கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! * உன்தன்னைப் 

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் *

நாடு புகழும் பரிசினால் நன்றாக *

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே *

பாடகமேயென்றனைய பல்கலனும்யா மணிவோம் *

ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு *

மூடநெய்பெய்து முழங்கைவழிவார *

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (2)

பொருள் -

கிருஷ்ணன் ஆண்டாள் கேட்கும் சங்குகள், பறைகள் அனைத்தையும் தந்துவிட்ட பிறகு, வேறு ஏதேனும் வேண்டுமா என்று கேட்கிறான்.

ஆண்டாளும் அவளுடைய தோழிகளும், கிருஷ்ணனைப் பலவாறாகப் புகழ்கிறார்கள். பின்னர் நோன்பை பூர்த்தி செய்த பிறகு தாங்கள் அனுபவிக்கப்போகும் சுக சௌகர்யங்களைப் பட்டியல் இடுகிறாள். அந்த சுக சௌகர்யங்களும்கூட கிருஷ்ணன்தான் அருளக்கூடியவன் என்றும் ஆண்டாள் கூறுகிறாள்.


'கூடாதாரை வெல்லும் சீர்கோவிந்தா' என்று ஆண்டாள் கிருஷ்ணனின் பிரபாவத்தைப் புகழ்கிறாள். கூடாரை என்பதற்கு பகைவர்கள் என்று அர்த்தம் இல்லை. பகைவர்களை வெல்வது என்பது கிருஷ்ணனுக்கு சர்வசகஜம் என்பதால், ஆண்டாள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. தன்னை விரும்பாதவர்களையும் விரும்பும்படி அவர்களுடைய மனதை வெற்றிகொண்டு விடுவானாம். ஆனால், அவனை விரும்பாதவர்கள் பரம உத்தமர்களாக இருக்கவேண்டும். அப்படி உத்தமமான குணம் கொண்டவர்களின் மனங்களை கிருஷ்ணனே ஆட்கொண்டுவிடுவான். எனவேதான் அவன் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன் என்கிறாள் ஆண்டாள்.தாங்கள் அவனைப் பாடித் துதிப்பதனால் பெறப்போகும் பயன்களை அடுத்தடுத்த வரிகளில் பட்டியல் இடுகிறாள் ஆண்டாள்.ஆண்டாள்

'கிருஷ்ணா, உன்னைப் புகழ்ந்து பாடி, உன்னுடைய அருளால் நாங்கள் பெற இருக்கும் பரிசுகள் என்னென்ன தெரியுமா? நாடே புகழும்படியாக நீ அருளும் கைவளைகளையும், தோள்களுக்குத் தகுந்த தோள்வளைகளையும் அணிந்துகொள்வோம். மேலும் உன்னுடைய புகழைப் பாடக்கேட்ட எங்கள் காதுகளுக்கு நீ அருளும் தங்க வைரத்தோடுகளையும் அணிந்துகொள்வோம். அதற்கு பிறகு வண்ணமயமான பட்டாடைகளை உடுத்திக்கொள்வோம். இத்தனையையும் நாங்களாக அணிந்துகொள்ளமாட்டோம். நீயும் நப்பின்னையும்தான் எங்களுக்கு அணிவிக்கவேண்டும். மேலும் எங்களுடன் நீயும் நப்பின்னையும் சேர்ந்து, பால் சோறு முழுகும்படி நெய் சேர்த்து, பாலும் நெய்யும் முழங்கை வரை வழிய வழிய உண்ணவேண்டும்' என்கிறாள்.

கிருஷ்ணனின் அனுக்கிரகத்தினால் அவனுடனே சேர்ந்துவிட்டதைக் குறிக்கும்படி கிருஷ்ணனுடனும் நப்பின்னையுடனும் என்று கூடியிருந்து சுக சௌகர்யங்களை அனுபவிப்போம் என்கிறாள் ஆண்டாள். 

திருப்பாவையில் இந்த பாசுரமானது கூடிவராத நற்காரியங்களையும், கூடி வரச்செய்வது. அதன் காரணமாகவே இந்த பாசுரத்துக்கு உரிய நாளில் ஆலயங்களில் கூடாரவல்லி வைபவம் நடைபெறுகிறது.


திருப்பாவையில் மிகவும் விசேஷமான இந்தப் பாசுரத்தைப் பாராயணம் செய்தால், திருமணம் கூடி வராதவர்களுக்கு திருமணம் கூடி வருவதாக தொன்றுதொட்டு நிலவிவரும் பக்திபூர்வமான நம்பிக்கை. மேலும் நமக்கு எதிரிகள் என்று யாருமே இருக்கமாட்டார்கள்.


(இணையத்திலிருந்து )

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் மற்றும் திவ்ய அலங்கார சேவை-
முத்தங்கி அலங்கார சேவையில் 
திருவெள்ளக்குளம் - ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயார்.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.அன்புடன்
அனுபிரேம்1 comment:

  1. ரொம்ப நல்லா எழுதறீங்க..... இன்று சர்க்கரைப் பொங்கல் செய்தீர்களா? நான் நேற்று செய்தது கொஞ்சம் சொதப்பிடுச்சு.

    ReplyDelete