04 January 2021

20. முப்பத்து மூவர்

முப்பத்து மூவர்


"பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!"






கிருஷ்ணனும் எழுந்திருக்கவில்லை; நப்பின்னையும் எழுந்திருக்கவில்லை. 

நப்பின்னை தான் எழுந்திருக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கிருஷ்ணனையும் எழுந்திருக்க விடவில்லை. இத்தனைக்கும் முதலில் ஆண்டாள் நப்பின்னையைத்தான் பலவாறாக புகழ்ந்து, கிருஷ்ணனை எழுப்பி அனுப்பச் சொன்னாள். 

என்னதான் அவளைப் புகழ்ந்தும் கெஞ்சியும் கேட்டும், கிருஷ்ணனை எழுந்திருக்க விடவில்லை. ஒருவேளை கிருஷ்ணனைப் புகழாமல் நப்பின்னையை மட்டும் புகழ்ந்ததால், அவள் இப்படி நடந்துகொள்கிறாளோ என்று எண்ணிய ஆண்டாள், இந்தப் பாடலில் இருவரையுமே புகழ்ந்து பாடுகிறாள்.


 


முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று *

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் *

செப்பமுடையாய்! திறலுடையாய்! * செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் *

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் *

நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய் *

உக்கமும்தட்டொளியும் தந்துஉன்மணாளனை *

இப்போதே எம்மைநீராட்டேலோரெம்பாவாய்.


பொருள் - 

'கோடானு கோடி தேவர்களுக்கும் நித்யசூரிகளுக்கும் முதல்வனாக இருப்பவனே! கிருஷ்ணா! தேவர்களுக்கு ஒரு துன்பம் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் உன்னை நினைத்த மாத்திரத்தில் அவர்களுக்கு முன்பாகச் சென்று அவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பவனே! கம்பீரமும் மிடுக்கும் கொண்டவனே! உறக்கத்தில் இருந்து எழுந்து வருவாயாக' என்கிறாள் ஆண்டாள்.


'முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே' என்பதற்கு, தேவர்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களுடைய இடத்தில் இருக்கும் பாரிஜாத விருட்சத்தைப் பெற்று வந்ததையும் குறிப்பிடலாம்.


தேவர்களுக்கு ஒரு துன்பம் வராமல் பாதுகாக்கும் முதல்வன் அல்லவா கிருஷ்ணன்! அவன் ஏன் தேவர்களுக்குச் சொந்தமான ஒரு விருட்சத்துக்காக அவர்களை எதிர்க்கவேண்டும்?

நாரதர் ஒருமுறை தேவலோகத்தில் இருந்து வரும்போது, ஒரு பாரிஜாத மலரைக் கொண்டு வந்து கிருஷ்ணனிடம் தருகிறார். கிருஷ்ணன் அந்த மலரை அருகில் இருந்த ருக்மிணிக்குத் தருகிறார். உடனே நாரதர் சத்யபாமாவிடம் சென்று, ''தேவி, நான் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலரைக் கொண்டு வந்தேன். அதை கிருஷ்ணர் ருக்மிணி தேவிக்குக் கொடுத்துவிட்டார். உங்கள் மீது கிருஷ்ணருக்கு அவ்வளவுதான் பிரியம் போலிருக்கிறது'' என்றார். 

அதே நேரம் கிருஷ்ணர் அங்கு வரவே, சத்யபாமா தனக்கு பாரிஜாத மரம் வேண்டும் என்று வற்புறுத்தினாள். 

சத்யபாமா இப்படிச் செய்வாள் என்பது நாரதருக்குத் தெரியாதா? அவர் உடனே தேவேந்திரனிடன் சென்று பாரிஜாத மரத்துக்காக கிருஷ்ணன் வரப்போகும் செய்தியை தேவேந்திரனிடம் சொல்லிவிடுகிறார்.


கிருஷ்ணன் தேவலோகத்துக்கு வந்ததுமே, இந்திரன் கிருஷ்ணனை பணிந்து வணங்கி, தேவலோகத்து பாரிஜாத விருட்சத்தைக் கப்பமாகச் செலுத்தினான். அதாவது தேவலோகத்தில் இருந்த பாரிஜாத விருட்சத்தைக் கப்பமாகப் பெற்று, தேவலோகத்தில் பாரிஜாத விருட்சம் இல்லாதபடி தவிர்த்துவிட்டார் என்றும் சொல்லலாம்.


அந்த கிருஷ்ணன், தன்னைச் சரண் அடைந்தவர்களை எல்லாம் உடனுக்குடன் காப்பாற்றும் கருணை மிகக் கொண்டவனாம். அதேசமயம் தன்னிடமும் தன்னுடைய பக்தர்களிடமும் விரோதம் பாராட்டுபவர்களுக்கு துன்பத்தை உடனே கொடுக்கும் விமலனாம். 

அதாவது குழந்தையின் உள்ளத்தைப் போலவே பரிசுத்தமானவனாம்! இப்படி போற்றும் ஆண்டாள், கிருஷ்ணனிடம், 'பொழுது விடிந்துகொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? சீக்கிரம் எழுந்து வா கிருஷ்ணா! உன்னுடைய அருள் வேண்டி, நாங்கள் எவ்வளவு நேரம்தான் இங்கே காத்துக்கொண்டு இருப்பது? சீக்கிரம் எழுந்திரு' என்று ஆண்டாள் கிருஷ்ணனை எழுப்புகிறாள்.


தான் இத்தனை சொல்லியும் கிருஷ்ணன் எழுந்திருக்கவில்லையே என்று நினைத்த ஆண்டாள், திரும்பவும் நப்பின்னையை துணைக்கு அழைக்கிறாள். 'நப்பின்னை நங்கையே, பெண்மையின் பூரணத்துவம் கொண்டவளே!' என்றெல்லாம் போற்றும் ஆண்டாள், இப்போது அவளை நீளா தேவியாகப் பார்க்காமல், சாட்சாத மகாலக்ஷ்மியாகவே பாவித்து, 'மகாலக்ஷ்மியான பெரிய பிராட்டியே! உன்னுடைய கருணை எங்களுக்குக் கிடைக்காதா? உன்னுடைய கருணை மட்டும் எங்களுக்கு இருந்துவிட்டால், கிருஷ்ணனின் கருணை எங்களுக்கு தானாகவே கிடைத்துவிடுமே. 

எங்களிடம் கருணை கொண்டு, எங்கள் நோன்புக்குத் தேவையான விசிறியும், கண்ணாடியும் தருவதுடன், கிருஷ்ணனையும் எழுப்பி எங்களுடன் அனுப்பி வைப்பாய்' என்று வேண்டுகிறாள்.

(இணையத்திலிருந்து )


திருத்தண்கா (தூப்புல்) - ஸ்ரீ மரகதவல்லித்தாயார் - 


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய திருப்பாவை பாடலும் அதன் விளக்கங்களும் நன்றாக இருந்தது. பாடலை பாடி அதன் விளக்கத்தை படித்து ரசித்தேன். இந்த மார்கழியில் தினமும் ஒரு பாடலாக திருப்பாவை பாடல்களை பாடி எம்பிரானை மனதாற நினைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறீர்கள். காலையில் வர முடியாவினும் இரவுக்குள் வந்து விடுகிறேன். ஆனாலும் தாமதத்திற்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete