அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந்துள்ளது.
பராய் மரக் காட்டில் இறைவன் எழுந்தருளி இருப்பதால் ‘பராய்த்துறை நாதர்’ என்றழைக்கப்படுகிறார்.
சமஸ்கிரதத்தில் ‘தாருகா வனம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த இடம் பராய் மரங்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. எனவே தான் ‘தாடுகாவனம்’ என்று வடமொழியில் அழைக்கிறார்கள்.
இறைவன் பராய்த்துறை நாதர் என்றும், தாருகாவன ஈசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவர்:பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்)
அம்மன்/தாயார்:பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பாள்
தல விருட்சம்:பராய் மரம்
தீர்த்தம்:அகண்ட காவேரி
ஆகமம்/பூஜை :சிவாமம்
புராண பெயர்:அகண்ட காவேரி
ஊர்:திருப்பராய்த்துறை
பாடியவர்கள்:திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்
கோவிலின் சிறப்பு:
இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு நோக்கியும், இறைவி பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பிகை என்ற திருநாமங்களுடன் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன் இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கபள்ளி நடைபெறுகின்றது.
நேரே இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் உள்ளது.
முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார்.
இராஜகோபுர வழி உள் நுழைந்தால் நேரே செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்த்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.
அடுத்துள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உள்ளே நுழைந்ததும் நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி தெரிகின்றது. உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், அறுபத்தி மூவரும் உள்ளனர்.
அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வதை முதல் முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம் இறைவன் ரிஷப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி காவிரிக் கரையில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுவார்.
திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் -
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.
திருப்பராய்த்துறையில், கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர், திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத்தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர்.
பாடல் எண் : 2
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல வடிகளே.
பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய இறைவர், மணங்கமழும் சிறந்த மலர்களும், கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.
நாங்கள் கடந்த ஜனவரி மாதம் இங்கு செல்லும் பாக்கியம் பெற்றோம். பலமுறை இவ்வழியாக சென்றாலும் இது தான் முதல் முறை இங்கு செல்வது.
நாங்கள் சென்ற பொழுது கரு மேகங்கள் சூழ , இதமான காற்றும், சிறு தூறலும் என மிக அருமையான நேரமாக இருந்தது .
மிக அமைதியான மனதிற்கு நிறைவும் , அமைதியும் தரும் அற்புத திருத்தலம் .
அன்புடன்
அனுபிரேம்
அழகான திருக்கோவில். இந்த ஊரில் என் நெருங்கிய உறவினர் இருப்பதால், இக்கோவிலுக்கு நிறைய முறை சென்றதுண்டு. அமைதியான கோவில். திருவிழா நாட்களில் அங்கே தங்கி விழாவில் கலந்து கொண்டதுண்டு. எனது பக்கத்திலும் கோவில் குறித்த செய்திகள், படங்கள், தகவல்கள் உண்டு.
ReplyDeleteமிக அழகான படங்கள். கோவில் வரலாறு என்று பதிவு அருமை.
ReplyDeleteபார்த்து பல வருடம் ஆகிவிட்டது.
மீண்டும் தரிசனம் செய்தேன், நன்றி.