15 December 2021

நம்பெருமாள் ரத்தினங்கியில் ...

 நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...

இராப்பத்து ஒன்றாம் நாள் - நம்பெருமாள்  ரத்தினங்கியில்  எழுந்தருளி ஆயிரம் கால்  மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.




முந்தைய பதிவுகள்  ..நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...1

நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா .. 2

நம்பெருமாள்  நாச்சியார் திருக்கோலம் 




 நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, அதிகாலையில் புறப்பாடு கண்டருளி, சந்நிதிக்கு வெளியில் வந்து, சிம்ம கதி, ஒய்யார நடை ஆன பிறகு, ஸ்தலத்தார் மற்றும் தீர்த்தகாரர் களுக்கான மரியாதைகள் நடைபெறும்.

அதன்பிறகு மேலப்படிக்கு கீழே நிற்கும், உத்தமநம்பி ஆலய ஸ்தாநீகரால் அழைக்கப்படுவார். அவர் நம்பெருமாள் பக்கத்தில் சென்றதும், பட்டுத்தொங்கு பரியட்டம் கட்டி, நம்பெருமாளுடைய பட்டிலிருந்து, எடுக்கப்பட்ட ஒரு சிறிய பட்டுத்துண்டு அவர் தலையில் வைக்கப்படும்.

இதன்பிறகு நம்பெருமாள், மேலைப்படியில் இருந்து, கீழே எழுந்தருளி நாலடி இட்டபிறகு, கைகளில் தங்கத்தடி ஏந்திக்கொண்டு வரும், அரங்கனின் வேத்ர பாணிகளாகிய, சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள், தலையிலும், பட்டுத்துண்டுகள் வைக்கப்படும்.

"எழுமினென்று இருமருங்கிசைத்தனர் முனிவர்கள் வழியிதுவைகுந்தற்கென்று வந்தெதிரே" (திருவாய்மொழி பாசுரப்படி,

இந்தத் திருவிழா, ஆழ்வார்கள் அருளிச் செய்த, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்,

எம்பெருமானை எவ்வாறு சரணடைவது என்பதையும், இந்த உடலை விட்டு ஜீவன் மேலுலகம் நோக்கி போகும்போது, ஒரு ஜீவன் எவ்வாறு , எம்பெருமானை அடைகிறது, அந்த ஜீவன் செல்லும் பாதை, அந்த ஜீவனை பரமபதத்தின் அருகில் அழைத்துச் செல்பவர்கள், பரமபதத்தில் எம்பெருமானோடு இருப்பவர்கள், அங்கே நடைபெறும் நிகழ்வுகள், ஜீவன் முக்தி பெரும்விதம் என இயல் இசை நாடகம் என்ற தமிழ் மொழியின் முத்தமிழ் மூலம், நம் கண்முன்னே நடத்திக்காட்டும் ஒரு மேடைநாடகம் போல் நடக்கும் வைபவம் இந்த வைகுண்ட ஏகாதசி. இதில் பரமபதம் தந்தருளும் பரமபத நாதனே நம்பெருமாள் என்பதை உணர்த்தவே இந்த 20 நாட்கள் திருவிழா .

பிறகு நம்பெருமாள்,புறப்பட்டு சிறிது தூரம் சென்று, யாகசாலையின் அருகில், கிழக்கு நோக்கி திரும்பி சேவை சாதிப்பார். அங்கே "திருப்பணி செய்வார்" என்பவர்கள்,( கோயிலின் தீர்த்த கைங்கர்யம் செய்பவர்கள்) ஒரு பாத்திரத்தில் தீர்த்தத்தை கொண்டு வந்து, நம்பெருமாள் முன்பு சேர்ப்பார்கள்.

நம்பெருமாளுக்கு திருவடி விலக்கம் ஆகும்.

நம்மாழ்வார் இதைப்பற்றி, தன்னுடைய திருவாய் மொழியில்"பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்" என்று பாடியுள்ளார். சேனை முதலியாருக்கு மாலை சாற்றி, அங்கிருந்து, ஒய்யார நடையுடன்,"நாழிகேட்டான்" வாசலைச் சென்றடைவார்.

அங்கே கோயிலின் மணியகாரர் ஆணையிட்டவுடன், "நாழிகேட்டான்" வாசல் கதவுகள் திறக்கப்படும். நம்பெருமாள் ஒய்யார நடையிட்டுக் கொண்டே,"பரமபத வாசல்" செல்லும் வழியான, துரைப்பிரதக்ஷிணத்தில், உள்ள துரை மண்டபம் சென்றடைவார்.

அங்கு முறைக்கார பட்டருக்கு, அருளப்பாடு ஆகி,

"கிருஷ்ண யஜூர்"வேதம் 8 ஆம் பிரஸ்னம் சாற்றுமறை ஆகும். இன்றிலிருந்து, இந்த இராப்பத்து உற்சவத்தின் அனைத்து நாட்களிலும், முறைக்கார பட்டருக்கு மட்டுமே, துரை மண்டபத்தில் "பரியட்டம்"கட்டப்படும்.

மற்ற வேதங்களை சாற்றுமறை செய்வோருக்கு, பரியட்டம் கட்டப்படுவது இல்லை. அனைவருக்கும் தீர்த்தம் ,சந்தனம், விடாய்ப்பருப்பு வழங்கப்படும்.

பரமபதத்துக்கு முன், எப்படி 'விரஜை' என்னும் பெயரில் ஒரு நதி இருக்கிறதோ, அதேபோல் இங்கு அரங்கத்திலும், இந்த பரமபத வாசலின் அருகில் விரஜாநதியின் ஸ்தானத்தில், ஒரு கிணறு இருக்கிறது. இங்கே இருக்கும்  நாலுகால் மண்டபத்தில், நம்பெருமாளுக்கு வேத விண்ணப்பங்கள் ஆகி, நம்பெருமாள், பரமபத வாசலுக்குப் போனவுடன், 

நம்பெருமாள் அதுவரையில், தான் சாற்றிக்கொண்டு வந்த போர்வை போன்ற வஸ்த்ரம், களையப்பட்டு, புதிய மாலைகள், நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

அரங்கத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபமே பரமபதம். ஆயிரங்கால் மண்டபத்தின் முன்னே உள்ள கொட்டகையே, பரம பதத்துக்கு வெளியே உள்ள விண்வெளி. அரங்கன் ஆலயத்தில் உள்ள துரைமண்டபம், பரமபதத்திற்கும், பிரக்ருதி மண்டலத்திற்கும் இடையே உள்ள, விரஜா நதி மண்டலம் போன்றது ஆகும்.

துரைமண்டபத்தில், வேதசாற்றுமறை ஆகி, நம்பெருமாள் புறப்பட்டு, பரமபத வாசலுக்கு எதிரில்(உள்புறம்) சென்று, வடக்கு முகமாய் நின்று, அந்த"பரமபதவாசல்" கதவுகளைத் திறக்கும் படி, நியமித்தவுடன் , பரமபதவாசல் கதவுகள் திறக்கப்படும்.

நம்பெருமாள் பரமபதவாசல், திறந்து , கடந்து வருவதைக் காணவே அரங்கன் அடியார்கள் "ரங்கா" "ரங்கா" கோஷத்துடன் விடிய விடியக் காத்திருப்பார்கள் .

அசுரர்களை வடக்கு திசை வழியாக, பரமபதத்திற்கு சேர்த்ததால் இந்த வாசலுக்கு"பரமபத வாசல்" என்ற பெயர் வழங்கப்படுகிறது.

தேவர்களை எதிர்க்கும் அசுரர்களையே,

வடக்கு திசை வழியாக, தன்னுடைய பரமபதத்தில், சேர்த்துக் கொண்டு, தன்னருகிலேயே வைத்துக் கொண்ட எம்பெருமான், தமது அடியார்களை நிச்சயம் பரமபதத்தில் சேர்த்துக் கொள்ளாமல் விடுவானா என்ன!!

அசுரர்களுக்கு நம்பெருமாள், ரத்னமயமானவன் என்பதைக் காட்டவே, இன்று தம்முடைய திவ்யமங்கள விக்ரஹத்ததில் நம்பெருமாள், "ரத்னங்கி"யோடு,  நமக்கும் சேவை சாதிக்கிறார்.

(நன்றி - சுவாமி  பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
















நான்காம் பாசுரம் - இதில் ஆத்மானுபவத்தை ஆசைப்படும் கைவல்யார்த்தியை அழைக்கிறார். பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்களை அழைத்த பிறகு, த்ருப்தி ஏற்படாமல், உலக இன்பங்களை ஆசைப்படும் ஐச்வர்யார்த்தியையும், தன்னைத் தானே அனுபவிக்கும் கைவல்யார்த்தியையும் பார்த்து, இவர்கள் இருவரில் உலக இன்பத்தை ஆசைப்படுபவன் என்றாவது பகவத் விஷயத்தில் ஆசை கொள்வான், ஆனால் கைவல்யார்த்தி, கைவல்ய மோக்ஷத்தைப் பெற்றுவிட்டான் என்றால் அவனுக்கு மீட்சியே இல்லை என்பதை உணர்ந்து, கைவல்யார்த்தியை இங்கே அழைக்கிறார்.


ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து

கூடு மனம் உடையீர்கள்! வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று

பாடு மனம் உடைப் பத்தர் உள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே


சரீரத்தை முழுவதுமாக ஒழித்துவிடுவதற்கு முன் எங்கள் கூட்டத்தில் வந்து புகுந்து, எங்களுடன் கூடுவோம் என்ற ஆசை மட்டும் இருப்பீர்களாகில், ஆத்மாவை மட்டும் அனுபவிப்பது என்கிற வரம்பை விட்டொழித்து, எங்களுடன் கூடுங்கள். க்ராமத்தவர்களான ஸாமாந்யர்களும், நகரத்தவர்களான அறிவாளிகளும் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி, திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை அனுஸந்தித்துப் பாடக் கூடிய பக்தியை உடையர்களானீர்கள் என்றால், நீங்களும் வந்து எங்களுடன் சேர்ந்து பல்லாண்டு பாடுங்கள்.

நம்பெருமாள் திருவடிகளே சரணம் ....

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன் 
அனுபிரேம் 


1 comment:

  1. நம்பெருமாள் தரிசனம் மிக நன்று அனு

    கீதா

    ReplyDelete