09 March 2025

ஸ்ரீ குலசேகர ஆழ்வார்

  இன்று ஸ்ரீ  குலசேகராழ்வார் அவதார திருநட்சத்திரம் ..... மாசி - புனர்பூசம்





குலசேகராழ்வார்  வாழி திருநாமம்!

அஞ்சனமாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம்   தன்னில் வாழ வந்தோன் வாழியே
மாசிதனில்  புனர்பூசம் வந்து உதித்தான் வாழியே
அஞ்சலெனக்   குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே
அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே





"குலசேகர ஆழ்வார் வரலாறு" --


குலசேகராழ்வார்

பிறந்த காலம் - 9ம் நூற்றாண்டு

பிறந்த இடம்   - திருவஞ்சிக்களம்

பிறந்த மாதம்  - மாசி

திருநட்சத்திரம் - புனர்பூசம்

வேறு பெயர்கள் - கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

சிறப்பு - ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்

பிரபந்தங்கள்- முகுந்தமாலா, பெருமாள் திருமொழி

பரமபதம் அடைந்த இடம் -  திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்


திருநக்ஷத்திர தனியன் :

கும்பே புனர்வஸௌஜாதம் கேரஸே சோளபட்டனே |

கௌஸ்துபாம்சம் தராதீசம் குலசேகரமாஸ்ரயே ||


சேரநாட்டில் கோழிக்கூட்டரசரான திருடவிரதன் பிள்ளைப் பேறு வேண்டி, திருமால் அருளால் கலி பிறந்த 28ஆம் ஆண்டு மாசி மத சுக்கிலபக்ஷத்து துவாதசி திதி வியாழக்கிழமைகூடிய புனர்வஸு நக்ஷத்திரத்தில் கௌஸ்துப அம்சமாகத் திருவஞ்சிக்களத்தில் (கேரள தேசம்) தன் பட்டத்து அரசியிடத்தில் ஓர் ஆண்மகனைப் பெற்றான்.


கௌஸ்துப அம்சமாகத் தோன்றி அந்தக் குழந்தை தன் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று அரசன்,  அதற்குக் குலசேகரன் என்று பெயரிட்டான்.  

குலசேகரன் அரசர்கள் கற்கவேண்டிய போர்த்துறையிலும், மற்ற கல்வித்துறைகளிலும் உரியகாலத்தில் நன்கு தேர்ச்சி பெற்றான்.  இளவரசனாகப் பட்டம் பெற்று அண்டை நாடுகளான சோழ பாண்டிய நாடுகளைப் போரில் வென்று பெற்றான்.

பிறகு அரசன் குலசேகரனுக்கு முடிசூட்டிவிட்டு, தான் தவம் செய்யச் சென்றான்.  நன்கு அரசாண்டு வந்த குலசேகரன், திருமணம் செய்துகொண்டு, இளையென்னும் மகளையும், திருடவிரதன் என்று பாட்டனின் (தாத்தா) பெயர் சூட்டப்பட்ட மகனையும் பெற்றான்.

குலசேகரன் உண்மையான வஸ்து (பொருள்) எது என்று மிகவும் ஆராய்ந்து, திருமாலே முழுமுதற்கடவுள் என்று அறிந்தான்.  இராமன், கிருஷ்ணன் என்ற திருமாலின் தோற்றங்களிலும், இந்தத் தோற்றங்களின் அம்சமாய், அருள்செய்ய அர்ச்சை மூர்த்தியாய் பல தலங்களில் கோயில் கொண்டிருக்கும் பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டான்.  இராமாயண கதையைக் கேட்டு அனுபவிக்க சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தான்.


ஒருநாள் சூர்ப்பணகை மூக்கு அறுப்புண்டதைக் கேட்டு, கரன், தூஷணன் முதலிய அரக்கர்கள் பெரும் படையுடன் இராமனைத் தாக்கவந்தபோது, இராமன் ஒருவனாகவே போரிட்டான் என்று இராமாயண கதை சொல்பவர் கூற, அதை மெய்மறந்து கேட்ட குலசேகரன், என்றோ நடந்த விஷயத்தை அப்போது நடப்பதுபோல் நினைத்து,  "இராமனுக்குப் பின் (துணை) செல்வார் எவருமில்லையே" என்று வருத்தப்பட்டு, உடனே தனது நான்குவகைப் படைகளையும் திரட்ட ஆணையிட்டு, போருக்குச் செல்ல விரைந்தான்.


குலசேகரனின் மன நிலையைப் புரிந்துகொண்ட இராமாயண கதை சொல்பவர், இராமன் ஒருவனாகவே அரக்கர்கள் அனைவரையும் அழித்தான் என்பதை விளக்க, குலசேகரன் மிகுந்த மகிழ்ச்சிகொண்டு, தன் பயணத்தை நிறுத்தினான்.  பின்னர் ஒருநாள், சீதையை இராவணன் கவர்ந்த வரலாறு கூறப்படும்போது, குலசேகரன் இலங்கையை நோக்கிப் படைகளோடு சென்று, கடலை நீந்தியே கடக்க எண்ணி இறங்கினான்.


மக்கள் அரசனுக்கு என்னாகுமோ என்று அஞ்சும்போது, சக்கரவர்த்தித் திருமகனான இராமனே சீதையின் கைப்பிடித்த கோலமாய் இலக்குவனோடு காட்சி தந்து, சீதையை மீட்டுவிட்டேன்; போரில் வெற்றிபெற்றுவிட்டேன் என்று கூறி, குலசேகரனை ஊர் திரும்பச் செய்துவிட்டு மறைந்தார்.


அமைச்சர்கள் அரசனுடைய உணர்ச்சிவசப்பட்ட திருமால் பக்தி அரசு ஆள்வதற்கு இடையூறாக (தடையாக) இல்லாமல் இருக்க, பல வழிகளைக் கையாண்டனர்.  திருமாலைக் காட்டிலும், திருமால் அடியார்களிடம் அரசன் மிகுந்த அன்பு வைத்திருப்பதைக் கண்டு, அரசன் திருவரங்கப் பயணமாகச் செல்ல நினைத்தபோது,  திருவரங்கம் சென்றவர்கள், அந்தப் பெருமானிடம் ஈடுபாடுகொண்டு, அங்கேயே தங்கிவிடுவார்கள் என்பதால், அரசன் அங்கு சென்றால் திரும்பி வரமாட்டார் என்று கூறி, திருமால் அடியார்களை அரண்மனைக்கு வரவழைத்து, அவர்களைப் பூஜிப்பதில் அரசனை ஈடுபடச் செய்து, பயணத்தைத் தடை செய்தார்கள்.


இதன்பின் அரண்மனையில் திருமால் அடியார்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. அரசவைக்கு இது இழுக்காகும் என்று எண்ணி, அமைச்சர்கள் அரண்மனையில் இருந்த இராமபிரான் திருமூர்த்தியின் ஆரம் ஒன்றை ஒளித்துவைத்து, திருமால் அடியார்களில் ஒருவர்தான் அதைத் திருடியிருப்பார் என்று அரசனிடம் அரசனிடம் கூறினர்.  


அரசன் இதற்கு மறுப்பாக, திருமால் அடியார்கள் ஆரத்தைத் தொடமாட்டார்கள் என்று உறுதி கூறி, அதை உணர்த்தும் வண்ணம் ஒரு குடம் நிறைய நச்சுப்பாம்புகளை விட்டு, பின்னர் தான் அந்தக் குடத்தில் கைவிட்டான். ஆனால் அவன் அப்படிக் குடத்தில் கையை விட்டபோது, அதில் இருந்த ஒரு பாம்புகூட அவரைக் கடிக்கவில்லை; இன்னும் சொல்லப்போனால், அவர் விரலைக்கூட தொடவில்லை. இதனால் திருமால் அடியார்கள் திருடர்கள் அல்லர்; அவர்கள் உத்தமர்களே என்று கூறி உண்மையை நிலைநாட்டினான்.  அமைச்சர்களையும் திருமால் அடியார்களைப் பூஜிக்கும்படி ஆணையிட்டார்.


குலசேகரன் பின்னர் அரசாள்வதில் விருப்பமில்லாமல், தன் மகன் திருடவிரதனை அரசனாக்கி திருமால் உகந்த திருப்பதிகளான திருவரங்கம், திருமலை போன்ற முக்கிய திவ்யதேசங்களுக்குச் சென்று சேவிக்கப் புறப்பட்டார்.  திருவரங்கனையே திருமணம் செய்துகொள்ள எண்ணிய தன் மகள் இளையை, "குலசேகரவல்லி" என்ற நாமத்துடன் நம்பெருமாளுக்கு மணம் செய்வித்தார்.  பெரியாழ்வாரின் மகளாகிய ஆண்டாள் நாச்சியார் விருப்பம்கொண்டு ரங்கமன்னாரை திருமணம் செய்துகொள்ள விரும்ப பெருமானும் அவளை விரும்பி மணம் புரிந்தது போல.


திருமாலிடம் அன்பு மிகுதியால், குலசேகரன் அருளிய பாடல்கள் மக்கள் மதிப்பைப் பெற்று, அரசன் "குலசேகராழ்வார்" என்று போற்றப்படலாயினான். பெருமாள் என்பது வைணவ சமயத்தில் குறிக்கப்படும் வார்த்தையாகும்.   இராமபிரானின்பால் உணர்ச்சி உந்திய அன்புப் பேராறு பூண்டமையின், இவ்வாழ்வாரை "குலசேகரப் பெருமாள்" என்று சிறப்பாக வழங்கலாயினர்.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

என்று, அழியாத இளமையாகிற செல்வத்தையுடைய ரம்பை முதலிய தேவமாதர்கள் தன்னைச் சூழ்ந்து நிற்க, மேலுலகத்தை அரசாளுகின்ற செல்வத்தையும், இப்பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும் நான் விரும்பமாட்டேன் என்று நிலையற்ற இந்த ஆசைகளைத் துறந்து, 


"குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே |

தமஹம் ஸிரஸா வந்தே ராஜாநம் குலஸேகரம் ||"


என்று, தமக்கு  அந்தரங்கரான ஸ்ரீவைஷ்ணவ ஸஹவாசத்துடனே "நல்லார்கள் வாழும்    நளிரரங்கத்தை (திருவரங்கம்) நோக்கி எழுந்தருளி, தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே "உறங்குவான்போல் யோகுசெய்கிற" அணியரங்கத்தம்மானை, நித்ய தரித்ரன்     நிதியைக் கண்டாற்போலே, கண்ணாரக் கண்டு, வாயார வாழ்த்தி அனுபவித்து, அந்த        அனுபவத்திலேயே ஆழ்ந்து, பகவத் பாகவத வைபவத்தை எல்லோரும் அறிந்து                உஜ்ஜீவிக்கும்படி, “பெருமாள் திருமொழி" என்கிற திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து லோகத்தை  வாழ்வித்து அருளினார். 

பகவத் வைபவம் - பெருமாளின் சரித்திரங்கள். 

 பாகவத வைபவம் - பெருமாளுக்குத் தொண்டு செய்பவர்களின் சரித்திரங்கள். 

இவர் அருளிய இப்ப்ரபந்தம் பத்து பதிகங்கள் (மொத்தம் 105 பாடல்கள்) கொண்டதாக அமைந்துள்ளது பெருமாள் திருமொழி.  

இராமாவதார கிருஷ்ணாவதாரங்களில் ஈடுபட்ட இவ்வாழ்வார் தனது பிரபந்தத்தில்,முதல் திருமொழியில் திருவரங்கப்பெருமாளைக் கண்டுகளித்து, வணங்கும்                     விருப்பத்தைத் தெரிவித்து, கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்பு கூடியுள்ள                    "திருவரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவுகண்டு யானும் இசைந்துடனே என்றுகொலோ இருக்குநாளே" என்று கூவிக்கொண்டு அரங்கனுக்கு அடியவர்களாக இருப்பவர்களோடு சேர்ந்து,  தானும் அக்குழுவில் ஒருவனாக இருக்க விரும்புகிறார்.  

அதனால், இரண்டாம் பதிகத்தில் திருவரங்கன் மெய்யடியார் நிலையை வர்ணித்து, 

மூன்றாம் பதிகத்தில் அடியவர்கள் அல்லாத உலகத்தவர்களோடு, பகவானுக்கு அடிமைப்படாதவர்கள் கூட்டத்தோடு, தனக்குத் தொடர்பின்மையைத் தெரிவிக்கிறார்.  அடியார்களிடம் ஈடுபட்ட நிலையில்,

தனக்கு இம்மண்ணரசிலும், வானாளும் செல்வத்திலும் பற்றில்லாததை வானோர்க்கும்    (நித்யசூரிகள்) மண்ணோர்க்கும் (இந்தப் பூமண்டலத்தில் வாழ்பவர்கள்) வைப்பாக திருமலையில் வந்து நிற்கும் திருவேங்கடமுடையானிடம்   அறிவித்து, அவ்வெம்பெருமான் பொன்மலைமேல்  எதேனுமாகி, படியாய் கிடந்து பவளவாய் காண வேணும் என்ற ஆசையை வெளிப்படுத்துகிறார் நான்காவது பதிகமான    "ஊனேறு செல்வம்" பதிகத்தில்.  

அப்படியும், பேறு (பலன்) கிட்டாததால் எம்பெருமானைத் தவிர வேறு புகலிடம் தமக்கு இல்லை என்பதைப் பலப்பல உவமைகள் மூலம்  கேரளா தேசத்தில் எழுந்தருளியுள்ள பகவான் "வித்துவக்கோட்டம்மானிடம்" தெளிவுபடுத்துகிறார்.  

ஆழ்வாரின் பக்தி மேலோங்கி,நாயகி பாவத்தை அடைந்தது.  முதலில் (ஆறாவது பதிகம்) "கிருஷ்ணாவதாரத்தில்" கோபிகை நிலையில் பல பாசுரங்கள் பாடி, 

அடுத்த  (ஏழாவது)  பதிகத்தில், பெற்றவுடனேயே கண்ணனைக் கம்சனிடமிருந்து காக்கும் பொருட்டு, தேவகியை விட்டு வசுதேவர் கண்ணனை யசோதையிடம் சென்று கொடுக்க, அதனால் தன் வயிற்றில் பிறந்த கிருஷ்ணனின் லீலைகளைத் தான் அனுபவிக்கமுடியாமல் போன இழப்பை தேவகி பாவனையில் பாடுகிறார்.  

பின்னர், தேவகி இழந்த இழப்பை ஈடுகட்ட,   8ஆம் பதிகத்தில் கௌசலை பெற்ற பேற்றை, கௌசலை பாவனையில் திருக்கண்ணபுரத்தில் எழுதருளியுள்ள ராமனுக்குத் தாலாட்டு பாடுகிறார் 

பின்னர், கைகேயின் சூழ்ச்சியால் இராமபிரானை வனவாசம் போகச்செய்து, இராமனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டு, தசரதன் இழப்புத் துயரத்தை நினைத்து, தானே தனயனைக் காடுபுகச் செய்தபாவி என்று புலம்பும் தசரதரின் புலம்பலை ஒன்பதாம் திருமொழியில் (பதிகம்)              பாடுகிறார்.  

கடைசியாக, ஆழ்வாரின் நிலையை அறிந்த திருச்சித்ரகூடம் என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், இராமாவதார நிகழ்ச்சிகளையெல்லாம்                    ஆழ்வாருக்குக் காட்ட, கடைசிப் பதிகமான "அங்கணெடு" திருமொழியில் , இராமனாய் அவதரித்து, அந்த அவதாரக் காரணம் முடிந்தபின் பெருமான் தன்னடிச்சோதியான (தான் வசிக்கும் நித்ய இருப்பிடமான) பரமபதத்திற்குச் சென்றது வரை இராமாவதாரத்தை சமகாலத்திலே பேசி அனுபவிப்பது போல பத்துப் பாசுரங்களில் இராமாயண நிகழ்ச்சிகளை அனுபவித்து, அவ்வெம்பெருமான் திருச்சித்ரகூடத்திலே "என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே!" - விஷ்ணு வேறல்ல; திருச்சித்ரகூடத்தில் கோயில் கொண்டுள்ள அர்ச்சாமூர்த்தி வேறல்ல; இராமபிரான் வேறல்ல - அனைவரும் ஒருவரே! என்று கொண்டு, மூவரையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டாம் என்று கூறி, பகவானைத் துதித்து வணங்கி, அவனுக்கு அடியவர்களானவர்களே! நீங்கள் தினந்தோறும் இடைவிடாதே துதித்து நற்கதி அடையுங்கள்! என்று உபதேசம் செய்து பிரபந்தத்தை நிறைவு செய்கிறார்.  

ஆழ்வார் இராமாயாணத்தின் ஆழ்பொருளை நன்குணர்ந்தவர் ஆதலால் பிரபந்தம்            ஆரம்பம் முதல் முடிவு வரை பகவதனுபவத்தோடு, பாகவத வைபவத்தையும்                   அனுபவித்து, பகவானுக்குத் தொண்டு செய்வதும் அவன் அடியவர்களுக்குத் தொண்டு   செய்வதும் சமமானதே - அதாவது, இரண்டுமே நமக்கு நல்லது செய்யக்கூடிய விஷயங்களாகும் என்று உணர்த்துகிறார்.  "தில்லைநகர் திருச்சித்ரகூடந்தன்னுள்             அரசமர்ந்தான் அடிசூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்றரசுதானே" - அதாவது, தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் தனது மேன்மை தோன்ற எழுந்தருளியிருப்பவனுமான இராமபிரானது திருவடிகளைத் தலைமேல் தரிக்கையாகிற அரசாட்சியை   ஒழிய, அதற்கு மாறுபட்ட அரசாட்சியை ஒரு பொருளாக நினைக்கமாட்டேன் என்று   கோடிட்டுக் காட்டி, அதனால் "முடிவேந்தர் சிகாமணி" என்ற பட்டத்தைப் பெற்றார் இவ்வாழ்வார். 

"படியாய்க் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே" என்று சுருக்கமாக இவ்வாழ்வார் திருமலையில் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடவன் கோயிலின் வாசற்ப் படியாகக் கிடந்து, அவன் பவளவாய் காண விரும்பியதால், பெருமாள் திருக்கோயில்களில் கர்ப்பக்ருஹத்தின் உள் வாசல் படியானது, "குலசேகரன் படி" என்றே வழங்கப்படுகிறது. 



மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர் 

தேசு இத்திவசத்துக்கு ஏது என்னில் - பேசுகின்றேன் 

கொல்லிநகர்கோன் குலசேகரன் பிறப்பால் 

நல்லவர்கள் கொண்டாடும் நாள்

   

என்று குலசேகர ஆழ்வாரது அவதாரச் சிறப்பைப் போற்றிப் பாடியுள்ளார் மணவாள மாமுனிகள் (உபதேச இரத்தினமாலை, பாசுரம் 13)

பாசுர விளக்கம் : பூ மண்டலத்தில் உள்ளவர்களே! இன்றைய தினம் மாசி புனர்வசு நக்ஷத்திரம் அன்றோ!  இந்த நாளுக்கு என்ன மதிப்பு என்றால் சொல்லுகிறேன் கேளுங்கள்: கொல்லி என்னும் நகருக்குத் தலைவரான குலசேகர ஆழ்வாருடைய திரு அவதாரம் காரணமாக, ஸாத்வீகர்கள் கொண்டாடும் நாளாக இருக்கிறது.


குலசேகர ஆழ்வாரைப் பணிந்த இராமானுசரைப் போற்றி, 


"கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம் 

கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை அற்றேன் - கொல்லி காவலன் சொல் 

பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே 

துதிக்கும் பரமன் இராமானுசன் என்னைச் சோர்விலனே"

    என்று பாடியுள்ளார் திருவரங்கத்தமுதனார் (இராமானுச நூற்றந்தாதி, பாசுரம் 14)


பாசுர விளக்கம் : குலசேகரப் பெருமாளாலே அருளிச் செய்யப்பட்டதால், சாஸ்திரச் சொற்கள் அமையப் பெற்றதான "பெருமாள் திருமொழி" என்னும் பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களைப் பாடுகின்ற பெரியோர்களது திருவடிகளையே ஸ்தோத்ரம் செய்பவராய் எம்பெருமானார் (இராமானுசர்) என்னைவிட்டு நீங்குகிறாரில்லை. எனவே ஏதோ ஒரு இலாபத்துக்காக விரைந்து ஓடி மிகுந்த உஷ்ணம் பரவியுள்ள காடுகளிலும் மலைகளிலும் கடல்களிலும் நின்றுகொண்டு, எல்லா அவயங்களும் (உறுப்புகளும்) கொதிக்கும்படியாக தவம் செய்யும் கொள்கையை விட்டொழிந்தேன்.









பெருமாள் திருமொழி 

 4.  ஊன் ஏறு  செல்வத்து

திருவேங்கடத்தில் பிறந்திட விரும்புதல் 

677

ஊன் ஏறு செல்வத்து*  உடற்பிறவி யான் வேண்டேன்*

ஆனேறு ஏழ் வென்றான்*  அடிமைத் திறம் அல்லால்*

கூன் ஏறு சங்கம் இடத்தான்*  தன் வேங்கடத்துக்*

கோனேரி வாழும்*  குருகாய்ப் பிறப்பேனே (2)


          678

ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*

வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*

தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*

மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே


679

பின் இட்ட சடையானும்*  பிரமனும் இந்திரனும்*

துன்னிட்டுப் புகல் அரிய*  வைகுந்த நீள் வாசல்*

மின் வட்டச் சுடர்-ஆழி*  வேங்கடக்கோன் தான் உமிழும்* 

பொன்-வட்டில் பிடித்து உடனே*  புகப் பெறுவேன் ஆவேனே


680 

ஒண் பவள வேலை*  உலவு தன் பாற்கடலுள்*

கண் துயிலும் மாயோன்*  கழலிணைகள் காண்பதற்கு*

பண் பகரும் வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துச்*

செண்பகமாய் நிற்கும்*  திரு உடையேன் ஆவேனே


681  

கம்ப மத யானைக்*  கழுத்தகத்தின்மேல் இருந்து*

இன்பு அமரும் செல்வமும்*  இவ் அரசும் யான் வேண்டேன்*

 எம்பெருமான் ஈசன்*  எழில் வேங்கட மலைமேல்*

தம்பகமாய் நிற்கும்*  தவம் உடையேன் ஆவேனே




No comments:

Post a Comment