09 March 2016

யோக நரசிம்மர் ஆலயம் ..மேல்கோட்டை பயணம் 5

அனைவருக்கும் வணக்கம் ...

முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...

திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 

செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...

சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..

அடுத்தாக நாம் தரிசிக்க இருப்பது யோக நரசிம்மரை ....

மலை உச்சியில் இருக்கும் இவரை 400 படிக்கட்டுக்கள் ஏறி  சென்றே நாம் பார்க்க இயலும் .... 

அங்கு சுவாமி  ஸ்ரீ நரசிம்மர்    யோக  கோலத்தில் உள்ளர் .







இணையத்தில் இருந்து 


இணையத்தில் இருந்து 
 மிகவும் அருமையான யோக நரசிம்மர்   தரிசனம் ...




கோவிலுக்கு  செல்லும் வழி 




படிகள் 






மேலிருந்து கல்யாணி தீர்த்தம் 



படிகளில்  அமர்ந்து மோர்  விற்பனை எல்லாம் நடக்கிறது ...எல்லா இடத்திலும் ஆஞ்சிநேயர்  அமர்ந்து பயம் காட்டுகிறார் ....

படிகள் சரியாக இல்லை என்றாலும் ..குழந்தைகளுடன் சென்று தரிசிக்க  சிறப்பான   இடம் ...



தொடரும் ....

ஆடியாடி யகம்கரைந்து, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்

நாடிநாடி நரசிங்காவென்று,

வாடிவாடு மிவ்வாணுதலெ.



 -நம்மாழ்வார்


திருவாய்மொழி (3042)


அன்புடன்
 அனுபிரேம்





04 March 2016

சுவாமி இராமானுசரின் தமர் உகந்த திருமேனி - மேல்கோட்டை பயணம் 4

மேல்கோட்டையில் செல்லுவ நாராயண சுவாமி     மற்றும்  செல்ல பிள்ளை யின்  பெருமைகளை தரிசித்தோம் .... 

மேலும் இங்கு உள்ள  மற்றொரு சிறப்பு .... சுவாமி இராமானுசரின் தமர் உகந்த திருமேனி.



சுவாமி இராமானுசரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும்.

அவை:

1.தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
2.தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
3.தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)





1.தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம்)


            தமர்   உகந்த  திருமேனியே  முதல்   திருமேனி (இராமானுசர் சிலை).  சுவாமி இராமானுசர்   இங்கு  12   ஆண்டுகள்  தங்கி கைங்கர்யங்கள் செய்தார்.  இது   இராமனுசரின் அபிமான  தலம் ஆகும். தாழ்த்தப்பட்டவர்களைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில்தான். இராமானுசர் தன் 80 ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள்.

           இது கண்டு துயருற்ற இராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார். இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்திகளைப் பாயச்செய்தார்.

           பின்பு சக்தியூட்டிய சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். விடைபெறும்போது 'நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.' என்று அவர்களை அமைதிப்படுத்தினார். இந்தச்சிலை தமர் உகந்த திருமேனி என்றழைக்கப்படுகிறது. இன்றும் மேல்கோட்டையில் இச்சிலை வழிபடப்படுகிறது.





2.தானுகந்த திருமேனி (ஸ்ரீ பெரும்புதூர்)


            தமர் உகந்த திருமேனி இரண்டம் திருமேனி (இராமானுசர் சிலை) ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட்டது. இராமானுசர் தம் 120 ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார்.

           அப்போது இராமானுசரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுசர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார்.

             திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.
              
           பின்பு இராமானுசர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள். இராமானுசர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனிஎன்று பெயர் பெற்றது.

          இதன் பொருள் இராமானுசரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட இராமானுசரின் 120 வயது தோற்றத்தினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.





3.தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)


          தானான திருமேனி மூன்றாவது திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுசர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.

          இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

          உயிர் பிரிந்த உடனே:
                         தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள்.


                       நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

              உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.


              இதன் பின்பு இராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி  திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.


                    ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது:

தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.
தொடர்ந்து அரங்கன்:
இராமானுசன் என்தன் மாநிதி
என்றும்
இராமனுசன் என்தன் சேமவைப்பு
என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்.

              எனவே இராமனுசரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.


                பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர்.



(சில தகவல்கள் அறிந்து இருந்தாலும் ... மேலும் பல தகவல்கள் விக்கிபீடியாவில் கிடைத்தது....)

வாங்க ...மேல்கோட்டை கல்யாணி  தீர்த்தத்தை தரிசிப்போம் ...






மிக பெரிய அழகான குளம் ....


இக்குளம் பல படங்களில் இடம் பெற்றுள்ளது ....


தொடரும்....







பூமன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன் * பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழ * நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
(இராமானுச நூற்றந்தாதி - 1)


அருளியவர்: திருவரங்கத்தமுதனார்




அன்புடன்
அனுபிரேம்


29 February 2016

மேல்கோட்டை பயணம் 3 ...செல்ல பிள்ளை - வைரமுடி சேவை

செல்வ நாராயண சுவாமி திருக்கோவில் மூலவரை  தரிசித்தோம் ....இன்று ஊற்சவரின் பெருமைகள் ....






செல்ல பிள்ளை  ...


          சில காலம்  முன்பு  முகம்மதிய படையெடுப்பின் போது  டில்லி   சுல்தான்   கோயிலை   இடித்து விக்ரகங்களையும்,  பொன்   பொருள் எல்லாவற்றையும்   கொள்ளையடித்துச்   சென்றான் என்றும், திருநாராயணனின்   உற்சவமூர்த்தியும் சுல்தானிடம்   தான்   இருக்கிறதென்றும்   அவ்வூர் மக்கள்   மூலம்   அறிந்தார்  இராமானுஜர்  .   
                 
              
              எனவே .. இராமானுஜர்     சில சீடர்களை உடன்   அழைத்துக்   கொண்டு   டில்லி   சுல்தானை   நேரில்  கண்டு   உற்சவ   மூர்த்தியைத்   திரும்பத்   தருமாறு  கேட்டுக்   கொண்டார்.   சுல்தானுக்கு இராமானுஜரைக்    கண்டு   வியப்பும்   ஆச்சரியமும் ஏற்பட்டது.   அவரைப்   பற்றி   முன்னரே கேள்விப்பட்டிருந்தான்.   தன்   மகள்   ஆசைப்பட்டாள்   என்பதற்காக   அந்த   விக்ரகத்தை அவளுக்கு  விளையாடக்   கொடுத்திருந்தான். எனவே அதைத்   திரும்பப்   பெறுவதென்பது   அவ்வளவு எளிதல்ல.   அதனால்   ஒரு   நிபந்தனையுடன் அ தை எடுத்துச் செல்லலாம் என்றான். 

            நிபந்தனை   இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை   அழைக்க   வேண்டும்   விக்ரகம் தானாகவே   அவரிடம்   வந்து   சேரவேண்டும் என்றான். 
           உடனே    இராமானுஜர்    ஒரு     குழந்தையை அழைப்பதுபோல்      '' என் செல்லப் பிள்ளாய் வருக ''   என்று குழைவாக அழைத்தார். 

         ஆச்சரியம் ............!   

                      சிலைவடிவில் இருந்த இராமப்பிரியன்   விக்ரகம்    ஒரு   குழந்தை வடிவில்  மாறி   சலங்கை  சல்  சல்  என்று  ஒலிக்க   அனைவரும்   வியந்து நோக்க   நடந்து   வந்து   அவர்    மடியில்   அமர்ந்து கொண்டு   மீண்டும்   சிலையாயிற்று.  


               சுல்தான்       மலைத்துப்     போனான். நிபந்தனைப்படியே     உற்சவ      மூர்த்தியை எடுத்துப்போக     அனுமதித்து    அத்துடன்   பொன்னும் பொருளும்    தந்து   அனுப்பி   வைத்தான்.   எனவே     மேல்கோட்டை        உற்சவமூர்த்தி    'செல்லப்பிள்ளை'   என்றும் "யதிராஜ சம்பத்குமாரன்"    என்றும் அழைக்கப்படுகின்றார்.  

              செல்வப்பிள்ளை   திருநாராயணபுரம்  வந்த நாளான  மாசி   கேட்டை "டில்லி உத்சவம்" என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.


             சுல்தானின்     மகள்   சிலையைப்   பிரிந்திருக்க   முடியாமல்   மேல்கோட்டையைத் தேடி   ஓடி    வந்து     உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக்   கொண்டாள்.    அடுத்த    நிமிடம்   அந்த சிலையுடன்    ஐக்கியமாகி   விட்டாள். அவள் அன்பைப்     பாராட்டி   அவளைப்   போலவே   ஒரு சிலை  செய்த    'பீபீ நாச்சியார்'         என்ற பெயரில் நாராயணனுக்கருகில்   அமர்த்தி விட்டார் இராமானுஜர்.









         டில்லி       சுல்தானிடமிருந்து       சிலையைக் கொண்டு     வரும்      வழியில்      வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்    அவரை          எதிர்த்து சிலையையும்,  சுல்தான்   கொடுத்த   பொன் பொருள்    ஆகியவற்றையும்   கவர்ந்து   கொள்ள முயன்ற   போது   ...உடன்   வந்தவர்கள்   அலற, இராமானுஜர்  '' அவனைக்   காப்பாற்றிக்   கொள்ள அவனுக்குத்   தெரியும் '' என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.     அருகிலிருந்த   சேரிமக்கள் இவர்கள்  அலறல்   கேட்டு   திரளாக   ஓடிவந்து கொள்ளைக்காரர்களை   விரட்டி, இராமானுஜரையும்   மற்றவர்களையும்  ஊரின் எல்லை   வரைக்கும்   கொண்டு   வந்து   சேர்த்தனர். 

                 அவர்கள்  கோயிலுக்குள்   நுழைய   தங்களுக்கு அனுமதியில்லை என்று   சொல்லி   விடை பெற்றுக்கொள்ள   முயன்ற   போது,   இராமானுஜர் இறைவனைக்   காப்பாற்றிய   அவர்களுக்குத்தான்  உண்மையிலேயே   அதிக   உரிமை   உண்டு   என்று சொல்லி   அவர்களையும்   கோயிலுக்குள் அழைத்துச்   சென்றார். 

                 ஆயிரம்   ஆண்டுகளுக்கு  முன்னரே   சேரி மக்கள்   என்று   தாழ்த்தப்பட்ட   நிலையில்   ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை   ஆலயப்   பிரவேசம் செய்து   இராமானுர்   அக்காலத்திலேயே   ஒரு புரட்சியை   செய்துள்ளார்.


'வைரமுடி கருட சேவை'


        மேல்கோட்டை நாராயணபுரத்தில்   பங்குனி மாதத்தில்   நடைபெறும்   கருடன்   கொண்டு வந்த 'வைரமுடி சேவை'   விழா   தனிச்சிறப்புடையது. இராமானுஜர்   சந்நிதிக்கு  முன்னாள்   உற்சவ மூர்த்தியை    நாச்சியாருடன்   எழுந்தருளச்   செய்து வைரமுடி   அணிவித்து  விழா கொண்டாடுகின்றனர். 




           இராமன்   முடிசூட்டு  விழாவைக்   காண தசரதருக்குக்   கிடைக்காத   பேறு   இராமானுஜருக்கு   கிடைத்தது. வைர முடி சேவை பங்குனி  மாதம்   புஷ்ய நக்ஷத்ரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது.   பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.



               முதலில்    கருடாழ்வார்   கோயிலைச்    சுற்றி   வலம்   வருகின்றார்.  பிறகு வைரமுடி   என்று   அழைக்கப்படும்   கிரீடம்  பல்லக்கில்   ஏற்றப்பட்டு கோயிலைச்  சுற்றி  வருகின்றது. இந்த வைரமுடி என்ற வைரம்   பதிக்கப்பட்ட   கிரீடத்தை        மாண்டயா      கஜானாவிலிருந்து   சகல    மரியாதையுடன்   கலெக்டர்   கொண்டு  வருவார்.       வருடத்துக்கு     ஒரு   முறை  மட்டுமே இந்த   கிரீடம்   பெருமாளுக்கு   அணிவிக்கப்படுகிறது.

            கருடன்   கொண்டு   வந்த  அற்புத   வைரமுடியை  அணிந்து கொண்டு   பல்லக்கில்   வெளியே  வருகிறார்   சம்பத  குமாரர்.   தாயார்களுடன் பெருமாள்   கருட   சேவை   சாதிப்பது   இங்கு   ஒரு   தனி சிறப்பு.


           எல்லாத்  திசைகளிலும்   பெருமாளை   அழைத்து    செல்லுகிறார்கள்.  விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழட்டப்பட்டு ... பிறகு ராஜ முடி அணிந்து  சேவை   சாதிக்கின்றார்   செல்லப்பிள்ளை.












இராஜமுடி (கிருஷ்ணராஜ முடி) சேவை

       மைசூர் அரச        பரம்பரையில்   வந்த   மன்னர்களில்   கிருஷ்ணராஜ  உடையார்   வைரமுடியைப்   போலவே    மற்றொரு   கிரீடத்தை  அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்றும்   அழைக்கிறார்கள் .       ராஜ முடி     அணிந்துக்கொண்டு   நிஜமாகவே அவர் இளவரசன்    போல  நடந்து   செல்கிறார்    டெல்லியிலிருந்து       இராமானுர் கூப்பிடக்குரலுக்காக    ஒடி   வந்த   இராமப்பிரியர்.

         நம்மாழ்வார் சொன்ன "கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்" என்றபடி இளமையிலேயே வைர முடி, ராஜமுடி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.



வருகிற மார்ச் மாதம் 19 ம் தேதி இங்கு வைர முடி  கருட சேவை நடை பெறள்ளது ...


   (அனைத்து படங்களும் இணையத்தில் கிடைத்தவை ....பகிர்ந்த பக்தர்களுக்கு மிகவும் நன்றி )                        



         எண்பெருக் கந்நலத்து - ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன் - திண்கழல் சேரே.



- நம்மாழ்வார்

அன்புடன்

அனுபிரேம்