02 November 2019

கந்தன் அருள்


ஓம் சரவணபவ







ஆதியும் அந்தமும் இல்லாத ஆண்டவனாம் சிவபெருமானுக்கு 64 வடிவங்கள். அவர் திருக்குமாரனான முருகப்பெருமானுக்கு 18  திருவடிவங்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன.






 திருக்கச்சியப்ப முனிவர் எழுதிய தணிகைப்புராணம் முருகனின் 16 திருக்கோலங்களை விவரிக்கிறது. அதோடு இன்னும் சிலவகை அருட்கோலங்களையும் புராணங்கள் கூறுகின்றன.


1. பாலமுருகன்


 ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றி, கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட பாலமுருகன், அழகிய வடிவம் கொண்டவர். பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாத பிரம்மனை சிறையில் அடைத்தது பாலமுருகனே.

 தந்தைக்கு பிரணவ மந்திரம் சொல்லி சிவகுருவாகக் காட்சி தந்ததும் பாலமுருகன்தான். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாலமுருகனை இடுப்பில் ஏந்திய அம்பாளைத் தரிசிக்கலாம். ரத்தினகிரி உள்ளிட்ட பல தலங்களில் பாலமுருகனைத் தரிசிக்கலாம்.







2. சக்திதரன்

 அன்னை பார்வதியிடம் சக்திவேலைப் பெற்று சூரனை வதம் செய்தார் முருகன். அன்னை சக்தியின் வடிவமான வேலைத் தாங்கியதால் சக்திவேலன் என்றும், சக்திதரன் என்றும் முருகனை வணங்குகிறார்கள். ஒரு முகம், இரு கரங்கள் கொண்ட இந்தப் முருகப்பெருமான் அநேக ஆலயங்களில் காட்சி தருகிறார்.





3. பிரம்ம சாந்த மூர்த்தி

நான்முகனை சிறையில் அடைத்துவிட்டு படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்ட முருகனை சாந்தப்படுத்த சிவன் எண்ணினார். பிரம்மனை சிறைமீட்டு அவரை முருகனை வழிபட அனுப்பினார்.

தணிகை மலையில் பிரம்மன் தவமிருந்து முருகரை சாந்தமூர்த்தியாக்கி தமது படைப்புத் தொழிலை மீண்டும் பெற்றார். இதனால் அங்கு முருகப்பெருமான் பிரம்ம சாந்த மூர்த்தியாக அருள் செய்கிறார்.




4. தேவசேனாபதி

வேல் தாங்கி தேவர் படைகளுக்கு தலைமை தாங்கிய முருகப்பெருமான் தேவசேனாபதியாகக் காட்சி தந்தார். இவரை திருச்செந்தூரில் தரிசிக்கலாம்.




5. கஜ வாகன மூர்த்தி  

முருகனின் வாகனமாக மயில் இருக்கிறது.

மிக அரிதாக, முருகனது வாகனம் யானை என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. இதனால் முருகப்பெருமான் கஜவாகன மூர்த்தியாகவும் காட்சி தருகிறார்.




6. சண்முகநாதர்

ஆறு குழந்தைகளாகச் சரவணப்பொய்கையில் தோன்றி வளர்ந்த முருகப்பெருமான், அன்னை சக்தியின் அணைப்பால் ஒரே உடலாகி ஆறு திருமுகங்களுடன் காட்சி தந்தார்.

பன்னிரண்டு கரங்களும் ஆறு முகமும் கொண்ட இவர் சண்முக நாதராக வணங்கப்படுகிறார்.

ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் கொண்டு மயில்மீது அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார். பல கோயில்களில் இவரைத் தரிசிக்கலாம். .






7. தாரகாரி

தாரகனை வதம் செய்ததால் ஸேநானி ஸ்வாமி என்றும் தாரகாரி ஸ்வாமி என்றும் முருகனை புராணங்கள் போற்றுகின்றன.

விராலிமலை முருகனை இந்தக் கோலத்தில் தரிசிக்கலாம்.

12 கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய கோலம்.







8. கிரவுஞ்சபேதன நாதர்

 கிரவுஞ்சன் என்ற அசுரனை வேலெறிந்து சம்ஹரித்த வேலவன், கிரவுஞ்சபேதன நாதராகக் கட்சி அளித்தார்.

ராமேஸ்வர ராமநாதர் ஆலயத்து சோடச சுப்ரமணியர் தூணில், இவரைத் தரிசிக்கலாம்.




9. மயில்வாகனன்

மரமாகி நின்ற சூரபத்மனை சம்ஹரித்தபோது அவன் உடல் இரண்டாகப் பிளந்து ஒரு பகுதி சேவலாகவும் மற்றொரு பகுதி மயிலாகவும் மாறியது.

அசுரனின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய முருகன் சேவலைக் கொடியாகவும் மயிலை வாகனமாகவும் கொண்டார். இதனால் முருகப்பெருமான் சிகி வாகனன், அதாவது மயில் வாகனன் என்ற பெயரையும் கொண்டார். சிக்கல் சிங்காரவேலவன், சிகி வாகனன் என்றே வணங்கப்படுகிறார்.




10. வேடன்

வள்ளியை மணமுடிக்க மானைத் தேடி வந்த வேடனாக முருகப்பெருமான் உருவம் கொண்டார். வள்ளியிடம் வம்பு பேசி அவளின் மனம் கவர்ந்தார். வள்ளிமலை வேலவன் வேடவடிவ பெருமானாகவே வணங்கப்படுகிறார்.




11. வேங்கைநாதன்

வள்ளியை ஆட்கொள்ள வந்த முருகப்பெருமானை வேடுவர் கூட்டம் விரட்டிச் சென்றது. அப்போது வேடனான முருகப்பெருமான்  வேங்கை மரமாக மாறி நின்றார்.

நாகர்கோவில் வேளிமலைச் சாரலில் உள்ள குமாரகோயில் ஸ்தலமரமான வேங்கை மரம் முருகப்பெருமானின் அம்சமாகவே வழிபடப்படுகிறது.




12. குமாரசுவாமி

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகும் இளமையும் கொண்ட முருகன் குமாரஸ்வாமியாகத் தனித்து பல ஆலயங்களில் காட்சி தருகிறார். நான்கு கரங்களுடன் மயில்மீது காட்சித் தருபவர்.





13. சுப்ரமணியர்

 சச்சிதானந்த பூரணப் பரப்பிரம்மமாக சித்தர்களுக்கும் ஞானியர்களுக்கும் காட்சி  தந்து அருள் செய்த உருவமே சுப்ரமணிய வடிவம். ருத்ர மந்திரம் உள்ளிட்ட பல உபநிஷதங்கள் சுப்ரமணியரைப் போற்றுகின்றன. ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்ட அபய வர மூர்த்தி இவர்.








14. சரவணபவன் 

சர வனம் எனும் நாணல் புதரில் தோன்றிய முருகப்பெருமானின் வடிவத்தைக் குறிப்பிடுவது. பன்னிரு கரங்கள் , ஒரு முகம் கொண்ட முருகப்பெருமானின் எல்லா திருவுருவம் சரவணபவ வடிவம் என்கிறது தணிகைப்புராணம்.








15. கந்தன்

 ஸ்கந்த என்றால், 'வெளிப்படுவது' என்று பொருள். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ருத்ர ஜோதி, முருகனாக அவதரித்ததால், கந்தன் என்று போற்றப்பட்டார்.


 பழநி மலை முருகன் கந்த வடிவமாக வணங்கப்படுகிறார்.




16.கல்யாண சுந்தர மூர்த்தி

 வள்ளிக் குறமகளை விரும்பி மணந்த வடிவமே வள்ளி கல்யாண சுந்தர மூர்த்தி என்று போற்றப்படுகிறது. வள்ளிமலை, திருத்தணிகை முருகனை இவ்வடிவில் தரிசிக்கலாம்.





17. காங்கேயன் 

காங்கேயன் என்றால் கங்கைக்கு நிகரான சரவணப்பொய்கையில் தோன்றி கங்கையின் அன்பினைப் பெற்றவன் என்று பொருள். காங்கேயநல்லூர் உள்ளிட்ட பல தலங்களில் இவ்வடிவில் முருகனைத் தரிசிக்கலாம்.






18. சோமாஸ்கந்தன் 

இந்த வடிவம் முருகப்பெருமானின் வடிவங்களில் முக்கியமானது.

சிவனுக்கும் சக்திக்கும் இடையே குழந்தை உருவில் அமர்ந்திருக்கும் கோலமே சோமாஸஅமர்ந்திருக்கும் கோலமே சோமாஸ்கந்தன் வடிவம். எல்லா சிவாலயங்களிலும் இந்த மூர்த்தியைத் தரிசிக்கலாம்.




மேலும் கார்த்திகேயன், சேனாளி, அக்கினி ஜாதன், சாரபேயன், தேசிகன் ஆகிய வடிவங்களையும் முருகப்பெருமான் கொண்டார் என்கிறது புராணம். அதுமட்டுமின்றி பழந்தமிழ் இலக்கியம் கடம்பன், சேயோன், முத்தையன் என்றெல்லாம் முருகப்பெருமானின் பழமையான வடிவங்களைப் போற்றி வணங்குகின்றன.









அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)





கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, 

நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி,
ஆறுமுகப்பெருமானை போற்றி வணங்கி மகிழ்வோம்.

குழந்தை கடவுள் முருகரை துதிப்போம்.

அருள் முகமாம் முருகனின் அருள் மழை
 அனைவருக்கும்  பரி பூரணமாக கிடைக்கட்டும்....

வேல் வேல்!
சக்தி வேல் வேல்!
வெற்றி வேல் வேல்!
ஞான வேல் வேல்!


அன்புடன்,
அனுபிரேம்


7 comments:

  1. முருகனின் பதினெண் திருவடிவங்களையும் விரிவாக கந்தசட்டிசூரசம்காரநாளில் கண்டுகளிப்புற்றோம்.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு.
    படங்களும் , பாடல்களும் மிக அருமை.
    வேல் வேல்!
    சக்தி வேல் வேல்!
    வெற்றி வேல் வேல்!
    ஞான வேல் வேல்!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    கந்தசஷ்டி சிறப்பு பதிவு அருமையாக உள்ளது. முருகனின் பதினெட்டு வடிவங்களையும், விரிவாக கூறி, முருகப் பெருமானின் லீலைகளையும் அற்புதமாக விளக்கி, இனிய இந்நாளில் குமரனின் அற்புத தரிசனத்தை பெற வைத்து விட்டீர்கள். பக்தி பரவசத்தோடு இந்த பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. முருகப் பெருமானின் பல வடிவங்கள் கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. முருகனின் பதினெட்டு வடிவங்களையும் விரிவாக ,அழகான முருகனின் படங்களுடன் இந்த கந்த ஷஷ்டி நாளில் தந்தமை சிறப்பு.

    ReplyDelete
  6. May i use this picture for my youtube channel mam. I started a channel for lord murugan. its small tribute to lard murugan.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்....

      இந்த படங்களை நானும் இணையத்திலிருந்தே பகிர்ந்தேன்...

      அதனால் நீங்கள் பயன்படுத்துவதில் எனக்கும் மகிழ்ச்சியே...

      தங்களின் சேனல் நன்கு வளர வாழ்த்துக்களும்.

      Delete