07 March 2021

1. மரங்களின் தாய் - "சாலுமர திம்மக்கா"

வாழ்க வளமுடன் 




"சாலுமர திம்மக்கா" (கன்னடத்தில் 'சாலு' என்றால் 'வரிசை' என்று பொருள் வரிசையாக மரம் நட்ட திம்மக்கா) - இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் மரியாதையுடன் உச்சரிக்கப்பட்ட பெயர்.  

இந்தியாவில் மர வளர்ப்புக்காகவும் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்காகவும் அதிக விருதுகளைப் பெற்ற, 108 வயதான, ஒரு அதிசயமான பாட்டி. 

  மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெறும் பொட்டல் காடாக இருந்த கூதூர் என்ற கிராமத்தையும் அக்கம்பக்கத்து கிராமங்களையும் இன்று பச்சைப் பசேலென பசுமை போர்த்திய பூஞ்சோலையாக மாற்றியவர். 

ஆயிரக்கணக்கான ஆலமரங்களை வளர்த்ததற்காக இதுவரைக்கும் 5 குடியரசுத் தலைவர்கள், 4 பிரதமர்கள், கர்நாடகத்தின் பல முதல்வர்கள் எனப் பலரின் கைகளால் ஏகப்பட்ட விருதுகளை வாங்கியவர்.

2018 ல் பத்மஸ்ரீ விருது வழங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திம்மக்கா விடம் ஆசிர்வாதம் பெற்றது நாட்டையே நெகிழவைத்தது. 






அந்த திம்மக்கா கூறுகிறார்(கன்னடத்தில்).....

  "அடுத்த வேளை கஞ்சிக்கே அல்லாடும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். அதுவும் ஜாதியில் ஒடுக்கப்பட்ட ஒரு தலித் குடும்பத்தில். வீட்டில் எந்த கஷ்டமாக இருந்தாலும், முதலில் சுமக்கவேண்டிய மூத்த மகளாக வளர்ந்தேன். எனக்கு 15 வயசு இருந்தப்போ என் எஜமான் (கணவரை அப்படித்தான் அழைக்கிறார்) பிக்கல் சிக்கையா கையில் பிடிச்சுக் கொடுத்துட்டாங்க. நானும் அவரும் காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் கல் உடைச்சாதான் ராத்திரி வயித்துக்குக் கஞ்சி. பகலெல்லாம் கடும் வெயில்ல குவாரியில கல் உடைப்போம். 

இதனால் கை கால் எல்லாம் கடுமையா வலி எடுக்கும். கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகியும் என் வயித்துல ஒரு புழு பூச்சி கூட உருவாகலை. ஊரும் உறவும் 'மலடி..மலடி'ன்னு மனசுல ஈரம் இல்லாமல் பேசுன பேச்சு கொஞ்ச நஞ்சம் இல்லே. 

  அத நெனச்சு நெனச்சு ராத்திரியெல்லாம் அழுது அழுது தலகாணி நனஞ்சதுதான் மிச்சம். ஆறுதல் சொல்லத் தெரியாமல் அந்த ஆம்பளையும் கூட அழுவாரு. சில சமயங்கல்ல, ஒரு பிடி சோறு கூட இறங்காது. ஊரு வாயில் விழுந்து உசிரே போயிடுச்சு. 

நிம்மதி இல்லாம, தூக்கமும் வந்து தொலையாம, ஒரு கட்டத்தில, ஊரு வார்த்தைகளின் கொடுமையைத் தாங்க முடியாம தூக்கு மாட்டிக்கவே போயிட்டேன்.(கண்கள் கலங்கி கண்ணீர் வழிகிறது). அந்தத் தூக்குக் கயித்த பிடுங்கித் தூர எறிஞ்சாரு என் எஜமானரு.


 'வயித்துல சுமந்து பெத்தாதான் பிள்ளையா..? மரம் செடி கொடி கூடத்தான் பிள்ளை. 

இப்படி எந்நேரமும் கண்ணை கசக்கிட்டே இருக்காம, இந்த பொட்டல் காட்டுல நாலு பேருக்கு நிழல் கொடுக்குற மரத்தை நடலாமே. பெத்த புள்ளைங்க கூட வயசான காலத்தில பெத்தவங்கள பராமரிக்கிறதில்ல. சோறு போடறதில்ல. ஆனா ஊரு உறவுக்கு மட்டுமில்லாம யாருன்னே தெரியாத வழிப்போக்கனுக்குக் கூட மரம் நிழல் கொடுக்கும். காக்கா குருவிக்கு கூடு கொடுக்கும். வாடுன பயிருக்கும், நம்மள மாதிரி உசுருக்கும் மழை கொடுக்கும். இருக்குற வரைக்கும் பலன் கொடுக்கும். செத்த பின்னாடி அடுப்பெரிக்க தன்னையே விறகாக் கொடுக்கும். இப்படியான பிள்ளைகளை நட்டுப்  புண்ணியம் தேடிக்கொள்ளலாம்னு' என் எஜமான் எனக்கு புத்திமதி சொன்னாரு.


  அதுக்கு அப்புறம்தான் ஒரு வெறி புடுச்ச மாதிரி மரம் நட ஆரம்பிச்சேன். காடு கரை எல்லாம் அலைஞ்சு திரிஞ்சி ஆலமரக் கன்றா பார்த்துக் கொண்டுவந்து வழி நெடுக நடுவேன். 

முதல் வருஷம் 15 மரம் நட்டேன். அடுத்த வருஷம் 20 மரங்கள் நட்டேன். 

அதுக்கு அப்புறம் பாதி நாள் வேலை. மீதி நாள் மரமா நட்டுக் கொண்டிருந்தேன். 

என் எஜமானும் என்னுடன் சேர்ந்து மரம் நடுவார். வேலி போடுவார்; தண்ணி ஊத்துவார். வெயில் காலத்துல அஞ்சு மைல் நடந்து போயி பானையில தண்ணீர் தூக்கி வருவோம். அப்பல்லாம் ஊர்க்காரங்க 'பொழப்பில்லாம மரத்தை நட்டுக்கிட்டுக்குக் கிடக்குதுங்க'ன்னு ஜாடைமாடையாக் கிண்டல் பேசுவாங்க.


  ஆனாலும் விடாமல் மரத்தை நட்டுக்கிட்டுக்குக் தான் இருந்தேன். வெயில் தாங்க முடியாமல் மரக்கன்னுங்க பொறிஞ்சு போயிரும். ஆடு மாடு மேய்ஞ்சிரும். என்னை அறியாமலே கண்ணுல குபுகுபுன்னு கண்ணீராக் கொட்டும். அதன்பிறகு நிறைய ஆலமரங்களை பதியம் போட்டு கொஞ்சம் பெருசா ஆன பிறகு, தனியா எடுத்து நட ஆரம்பிச்சேன். 

கரட்டுல போய் காரை முள்ளை வெட்டிட்டு வந்து, வேலி போட்டு தண்ணி ஊத்தி, கொஞ்சம் கூட சளைக்காம வளர்த்தேன். நாளாக நாளாக ஊரே குடிக்கக் கூடத் தண்ணியில்லாம பஞ்சத்தில் செத்தது. அப்போகூட ஏழு மைலுக்கு நடந்து போயி பக்கத்து ஊரு குட்டையிலிருந்து தண்ணி சுமந்து வந்து ஊத்துவேன். 

  ஒருநாள் பக்கத்து ஊர் குட்டையிலிருந்து இடுப்பில் ஒன்னும் தலையில ஒன்னுமாக ரெண்டு பானையில் தண்ணி தூக்கிட்டு வந்தப்போ, கல் தடுக்கி விழுந்துட்டேன். உதட்டிலும் முழங்காலிலும் சரியான அடி. ஒரே ரத்தம். தேம்பித் தேம்பி அழுதுட்டிருந்தேன். 

'ஏன் இப்படி அழுவுறே..காயத்துக்கு மண்ணைப் போடு. எல்லாம் சரியாயிரும்' என்றார் எஜமான். 'நான் காயத்துக்கு அழவில்லை. பானை ஒடைஞ்சு போச்சு. வேற பானையும் இல்ல. எப்படி தண்ணி கொண்டு வந்து ஊத்தரதன்னு தான் அழுவுறேன்'ன்னு சொன்னபோது அவரும் கண் கலங்கிட்டாரு. 

  அதன்பிறகு ஒரு மாசம் ராப்பகலா கல்லுடைச்சு சேர்ந்த செருவாட்டு காசை முந்தானையில் முடிச்சு வெச்சி, நல்ல பெரிய பானையா நாலு வாங்கினேன். வருஷங்கள் ஓட ஓட என் கன்றுகளும் மெல்ல மெல்ல வளர்ந்து பச்சைப் பசேல்னு பெரிய மரங்களாக வளர்ந்ததைப் பார்த்த போது பட்ட கஷ்டமெல்லாம் பஞ்சா பறந்து போச்சு.

 மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால நான் வீட்ல தனியா இருக்கப் பிடிக்காம மரங்களோடத்தான் இருப்பேன். மரங்களோடத்தான் பேசுவேன். அங்கே படுத்து நிம்மதியாத் தூங்குவேன்.


  ஆடு, மாடு கிட்ட இருந்து காப்பாத்துன மரத்தை சில சமயம் மனுஷங்க கிட்ட காப்பாத்த முடியறதில்ல. ராத்திரியோட ராத்திரியா மரத்தை வெட்டிட்டு போயிடுவாங்க. நாளாக நாளாக மரங்கள் மீது நான் எவ்வளவு பிரியம் வச்சிருக்கேன் என்கிறத புரிஞ்சுகிட்ட ஊர்காரங்க எனக்கு அனுசரணையா இருந்தாங்க. என்னைய கேலி பண்ணுனவங்க, மலடின்னு வாய்கோணாம பேசுபனவங்க எல்லாம், நான் நட்ட மரங்களுக்கு அடியில் இளைப்பாறினதைப் பார்த்தபோது ரொம்ப சந்தோஷமா இருந்தது. 'மரத்தை நட்ட மகராசியே..நீ நல்லா இருக்கணும் தாயி' ன்னு மனசார பாராட்டுனாங்க. பிள்ளையைப் பெத்து வளத்திருந்தாக்கூட இந்த பேரு கிடைச்சிருக்காது. 


   அக்கம்பக்கம் மட்டுமில்ல, கர்நாடகம் முழுவதும் அரசும் தொண்டு நிறுவனங்களும் என்னைய அழைச்சுட்டுப் போயி எவ்வளவோ மரங்கள நடவச்சு இருக்காங்க. 

அவற்றையெல்லாம் தொடர்ந்து  கவனிக்கிறாங்களா, தண்ணி விடறாங்களான்னு கவலையா இருக்கும். மரம் நடறதும் பிள்ளையப் பெத்து வளர்க்கிற மாதிரி தான். 



  1991 ல என் எஜமான் இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாரு. நொடிஞ்சுபோன எனக்கு, என் உசுரக் காப்பாத்துனது இந்த மரங்கள் தான். என் எஜமான் உயிரோடு இருந்த காலம் வரைக்கும் எனக்கு பெருசா எந்த விருது, மரியாதை, அங்கீகாரமெல்லாம் கிடைக்கலை. அப்பறம் நாளாக நாளாக என்னைப் பத்தி பேப்பரில், டிவியிலும் காட்டுனாங்க. பிறகு டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை என எல்லா ஊர்க்கும் விமானத்தில் அழைச்சுட்டுப் போனாங்க. 

  2013 ல முதலமைச்சர்  பெங்களூருல எனக்கு வீடு தருவதாகச் சொன்னார். எனக்கு வீடெல்லாம் வேண்டாம். எங்க கிராமத்துல ஒரு பெரிய ஆஸ்பத்திரி கட்டித்தரனும்னு கேட்டுக்கிட்டேன்.

 2018 ல இன்னொரு முதல்வர் என்னோட மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 10 லட்சம் கொடுக்க வந்தார். அது பட்டியல் வகுப்பினருக்கான நிதியில் இருந்து கோடுக்கப்போறதாச் சொன்னாங்க. ஜாதி பாத்துக் கொடுக்கிற உதவித்தொகை வேண்டாம்னு சொல்லிட்டேன். என்னைய சாதிரீதியாப் பாக்குறது பிடிக்கல. யாரும் எங்கிட்ட ஜாதியப் பார்த்து அன்பு காட்டவில்லை. என்னைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்த மக்களுக்கு ஒரு சர்க்கார் ஆஸ்பத்திரி கட்டித் தரணும். இந்த ஏழையோட குரல் சர்க்கார் காதுல விழ மாட்டேங்குது. 

  எனக்கு இப்போது 108 வயசாகுது. இந்த ஊருல என்னைப் போல வயசானவங்க ஆரோக்கியமா இருக்குறதுக்கு இந்த மரங்கள் தான் காரணம். நான் நினைப்பது ஒன்றே ஒன்று தான், 'மக்களைப் பெற்று வளர்த்திருந்தாக்கூட நான் இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க மாட்டேன். எனக்கு இவ்வளவு பெருமைகளைத் தேடித்தந்த என் ஆலமரங்களுக்கு அடியில் என் உயிர் போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை" என்று சொல்லி சிரிக்கிறார் திம்மக்கா. 

  அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள சூழல் இயல் ஆய்வு மையமொன்று இவரைப் பற்றி ஆய்வு செய்து அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தன் நிறுவனத்திற்கு திம்மக்காவின் பெயரைச் சூட்டியுள்ளது. 

கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சூழலியல் இவரது பங்களிப்பை வாழ்க்கைப் பாடமாக வைத்திருக்கின்றன. எத்தனையோ ஆவணப் படங்கள், நாடகங்கள், ஓவியங்கள் என இவரைப்பற்றி நிறைய வந்திருக்கின்றன. 


  பெங்களூருவில் திம்மக்காவிற்கு 9 அடியில் சிலை நிறுவ 'வனஷ்ரீ' என்ற சுற்றுச் சூழல் அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது. திம்மக்கா இதுவரை நட்டிருக்கும் லட்சக்கணக்கான ஆலமரங்களைக் கணக்கிட்ட ராய்ச்சூர் அரசு கலைக்கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவரான பேராசிரியர் ரவீந்திரன், "திம்மக்கா இதுவரை நட்டுப் பராமரித்த ஆலமரங்களின் இன்றைய மதிப்பு 497 கோடி ரூபாய்" எனக்கூறி வியப்பூட்டுகிறார்.

(.......படித்ததில் பிடித்தது.......... )


அன்பு என்றும் எங்கும் ஆளட்டும்...


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ...💙💚💛💜💙💚💛💜



அன்புடன்
அனுபிரேம்




5 comments:

  1. நான்  இவங்களை பற்றி 2014 இல் ஒரு பதிவு போட்டேன்ப்பா பசுமைவிடியால் மற்றும் என் பிளாகிலும் .அப்போ கிடைத்த தகவல்களைவிட இப்போ அதிகமா நிறைய கிடைச்சிருக்கு உங்க பதிவுமூலம் .நல்ல இருக்கட்டும்  திம்மக்கா பாட்டி . சுயநல மனுஷங்க இவர்களைப்பார்த்து வாழ்க்கைன்னா என்னனு   கற்றுக்கொள்ளனும் .

    ReplyDelete
  2. மகளிர் தினத்தில் சிறந்த பெண்மணி பற்றிய செய்தி . முன்பே இவரை பற்றி படித்து இருக்கிறேன்.
    மருத்துவமனை கட்டி தரட்டும் அவர் ஆசையை நிறைவேற்ற வேண்டும் அரசாங்கம்.

    ReplyDelete
  3. மகளிர் தின வாழ்த்துக்கள்.
    பாரதியின் வரிகளை நீங்கள் சொல்வது அருமை.

    ReplyDelete
  4. மகளிர் தின வாழ்த்துகள்.

    சிறப்பான நாளில் சிறப்பான பெண்மணி குறித்த கட்டுரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  5. மிகச் சிறந்த பதிவு. திம்மக்கா சொல்வதுபோல, பிள்ளைகளைப் பெறுவதைவிட மரங்களை வளர்த்தது மிகப் பெரிய மானுட சேவை.

    ReplyDelete