30 December 2021

பதினைந்தாம் பாசுரம் - எல்லே! இளங்கிளியே!

 பதினைந்தாம் பாசுரம் - இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.




எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!

     சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்

வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்

     வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!

ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?

     எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்

வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க

      வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய்


வெளியே இருப்பவர்கள்: இளமை பொருந்திய கிளி போன்றிருப்பவளே! என்னே உன் பேச்சின் இனிமை! இங்கு எல்லோரும் வந்த பின்பும், நீ உறங்குகிறாயோ?

உள்ளே இருப்பவள்: பரிபூர்ணைகளான பெண்களே! இப்படிக் கோபத்துடன் அழைக்காதீர்கள். இப்பொழுதே புறப்பட்டு வருகின்றேன்.

வெளியே இருப்பவர்கள்: நீ பேச்சில் சிறந்தவள். உன்னுடைய கடும்வார்த்தைகளையும் உன்னுடைய வாயையும் நெடுங்காலமாகவே நாங்கள் அறிவோம்.

உள்ளே இருப்பவள்: நீங்களே பேச்சில் வல்லவர்கள்! நான் செய்வதே தவறாக இருக்கட்டும். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.

வெளியே இருப்பவர்கள்: நீ விரைவில் எழுந்திரு. உனக்கு மட்டும் என்ன வேறு ஒரு தனிப் பலனா?

உள்ளே இருப்பவள்: வரவேண்டியவர்கள் எல்லோரும் வந்தாயிற்றா?

வெளியே இருப்பவர்கள்: எல்லோரும் வந்தாயிற்று. நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்.

உள்ளே இருப்பவள்: நான் வெளியில் வந்து என்ன செய்ய?

வெளியே இருப்பவர்கள்: வலிய ஆனையைக் கொன்றவனும், எதிரிகளை வலிமை அற்றவர்களாகச் செய்ய வல்லவனும் ஆச்சர்யமான செயல்களையும் உடையவனான கண்ணனை பாடுவதற்காக எழுந்திருந்து வெளியே வா.


நன்றி - Upasana Govindarajan Art



ஸ்ரீ கோதை நாச்சியார், அஹோபிலம்.



ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. பாசுரம் நன்று. உபாசனா கோவிந்தராஜன் அவர்கள் வரைந்த ஓவியமும் வெகு அழகு.

    ReplyDelete
  2. வல்லானை கொன்ற வல்லான் திருவடிகள் போற்றி.

    ReplyDelete