11 May 2022

சேரகுலவல்லிதாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ..

சித்திரை வளர்பிறை, நவமி (10/05/22)   - ஸ்ரீரங்கம் பெரிய கோயில் வழக்கப்படி ஸ்ரீராமபிரான் அவதார திருநாள்--கோயில் ஸ்ரீராமநவமி நேற்று ...

நேற்று பெரிய கோயிலில்  அரங்கனும் சேரகுலவல்லித் தாயாரும் சேர்த்தி சேவையில்...  









குலசேகராழ்வார்-சேரகுலவல்லி நாச்சியார்

ஸ்ரீராமபிரான் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார். இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான ‘புனர்வசு’ அன்று அவதரித்தவர். 

இவரது இராமபக்தி அளவற்றது. இராமாயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுவார். சில கட்டங்களில் மெய்மறந்து,கொதித்தெழுந்து தன் சேனைகளுடன், இராவண சேனையுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார். 

''இராம” என்னும் நாமம் இவரை மெய்மறக்கச் செய்தது. அனைத்தையும் மறந்து, அவர் ஒருவரை மட்டுமே சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள். இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள். இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்றே அழைக்கப்படுகின்றது.

இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்! மற்ற ஆழ்வார்களுக்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப் பெருமாள்! 

ஆழ்வாரின் திருமகள் சேரகுல வல்லி நம்பெருமாளையே ஸ்ரீராமபிரானாக வரித்து ஆழ்ந்த பக்தியில் லயித்திருந்தார்.

அரங்கனை அநுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை. 

யாரை எண்ணி எண்ணி, அவரும் அவரது மகளான சேரகுலவல்லியும் ஏங்கினார்களோ அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறு பெற்றார். அரங்கன் மனமுவந்து ஏற்ற பக்தை இந்த சேரகுலவல்லி!












நம்பெருமாள்-சேரகுலவல்லித் தாயார் சேர்த்தி

ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தார் அரங்கன். 

இன்று,இருவருக்கும் ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சுன மண்டபத்தில் சேர்த்தி! அரையர்கள் பெருமாள் திருமொழி சேவிக்க, அடியார்கள் சூழ்ந்திருக்க, இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏக ஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள்!

சேரகுலவல்லி நாச்சியார் சந்நிதி அர்ச்சுன மண்டபத்தின் வலது(மேற்குப்) புறத்தில் உள்ளது.

நம்பெருமாள் வருடத்தில் மூன்று சேர்த்தி கண்டருள்கிறார். 

பங்குனி ஆயில்ய நட்சித்திரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி !

பங்குனி உத்திரத்தில் பெரியபிராட்டியாருடன் சேர்த்தி !

 சித்திரை ஸ்ரீராமநவமியில் சேரகுலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி !



பெருமாள் திருமொழி


மன்னு புகழ்க்  கொசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்

கன்னி நன் மாமதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!" 

( 719 / 8-1)



அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்

 அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி

வெங்  கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி

விண்முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னைச்,

செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்  தன்னைத்

தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 

எங்கள் தனி முதல்வனை, எம்பெருமான் தன்னை

 என்று கொலோ ! கண் குளிரக் காணும் நாளே !!

(741 / 10.2 )



பெருமாள் திருவடிகளே சரணம் !!தாயார்  திருவடிகளே சரணம் !!
ஓம் நமோ நாராயணாய நமக !!


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. கண்களுக்கும் மனதிற்கும் சுகம் தரும் அழகான படங்கள்.

    ReplyDelete
  2. குலசேகர ஆழ்வாரின் தந்தை பெயர்தான் திடவிரதன் என்று தெரிகிறது. சரிபார்க்கவும். அழகான படங்களுடன் நல்ல கட்டுரை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் , ஆழ்வாரின் தந்தை பெயர் தான் திடவிரதன் மாற்றி விட்டேன், குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி

      Delete