15 March 2018

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்

 (Stephen William Hawking, 8  ஜனவரி1942 -  14 மார்ச் 2018) 


.

ஸ்டீஃபன் ஹாக்கிங்,அவர் ஆக்ஸ்ஃபோர்டில் இயற்பியல் பட்டம் பயின்றார்.

 இளவயதிலேயே அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ் என்ற நரம்பியக்க நோயால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
கேம்பிரிட்ஜில் நியூட்டன் வகித்த பதவியான லூக்காசியன் கணிதவியல் பேராசிரியர் பதவியினை வகித்தார்.
 நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஹாக்கிங் வைக்கப்பட்டு போற்றப்படுகிறார்.

ஹாக்கின்  மிகப்பிரபலமான நூல் "காலம்-ஓர் வரலாற்றுச் சுருக்கம்" (A brief history of Time)ஆகும். விற்பனை பட்டியல் வரிசையில் முன்னிலை வகித்த நூல்.

பெருவெடிப்புக் (Big Bang) கொள்கைக்கான கணிதப்பூர்வ நிரூபணத்தை அளித்ததன் மூலம் இயற்பியல் உலகில் புகழின் உச்சிக்கு வந்தார், ஸ்டீஃபன் ஹாக்கிங். இம்முழு பேரண்டமும் ஒரு சிறு புள்ளியிலிருந்து வெடித்து வெளிப்பட்டது என இக்கொள்கை கூறுகிறது.

அப்புள்ளியானது முடிவற்ற சிறிய புள்ளியாகவும், முடிவற்ற அடர்த்தியுடனும், முடிவற்ற நிறையீர்ப்பு கொண்டதாகவும் இருந்தது.

ரோஜர் பென்ரோஸ்(Roger Penrose) என்பவருடைய கணித நுணுக்கங்களை பயன்படுத்தி தன்னுடைய நிரூபணங்களை ஹாக்கிங் நிறுவினார்.

இந்நுணுக்கங்கள் அண்டப்பிறப்பினை பற்றி ஆராய்வதற்காக மேம்படுத்தப்பட்டவை அல்ல, மாறாக கருந்துளைகளை (Black holes) பற்றி ஆராய்வதற்காக வளர்த்தெடுக்கப்பட்டவை.




போதியஅளவு பெரிய விண்மீன்கள் தன்னுடைய இறுதி காலத்தின்போது வலுவிழந்து அதனுள் இருந்த அனைத்து விஷயங்களும் நசுக்கப்பட்டு முடிவற்ற சிறுபுள்ளியாக முடிவற்ற நிரையீர்ப்பு, அடர்த்தி கொண்ட ஒற்றையாக சுருக்கப்படுகின்றன என விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. ஆனால் பேரண்டத்தின்பிறப்பு என்பது கருந்துளையின் மறுதலை என ஹாக்கிங் உரைத்தார்.


பொருட்கள் நசுக்கப்பட்டு ஒற்றைப்புள்ளியாக ஆவதற்கு மாறாக, இப்பேரண்டத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்தும் ஓர் ஒற்றை புள்ளியிலிருந்து பிரவாகமெடுத்தவை தான். இப்பேரண்டத்தை (Universe) முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டுமானால் கருந்துளைகள் பற்றிய ரகசியம் முடிச்சவிழ்க்கப்பட வேண்டும் என்றார் ஹாக்கிங்.



கருந்துளைகள்:



கருந்துளைகளோடு நட்பாடுவதற்காக ஹாக்கிங் மற்றும் சக இயற்பியலாளர்கள் அறிவுப்பூர்வ இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்கினார்கள். 1970 களிலிருந்து 80 வரையான காலம் கருந்துளைகளைப் பற்றிய ஆய்வுகளின் பொற்காலமாக திகழ்ந்தது.

தெளிவற்றிருந்து மீண்டும் தெளியவந்திருந்த இந்த பிம்பத்தில் ஏதோவொன்று தவறிப்போயுள்ளதை ஹாக்கிங் உணர்ந்தார். பேரளவிலான அண்டப்பொருள் இயற்பியலை மட்டுமே கருந்துளை ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டது. நிறையீர்ப்பின் இயற்பியல் நியூட்டனால் முதலில் வளர்க்கப்பட்டு ஐன்ஸ்டீனுடைய பொது மற்றும் சிறப்பு சார்பியல் மூலம் பின்னர் வார்த்தெடுக்கப்பட்டது.

கருந்துளைகளை பற்றி முழுவதும் அறிந்துகொள்ள சிறிய அளவிளான அண்டப்பொருள் இயற்பியலையும் பயன்படுத்தவேண்டும் என்றார் ஹாக்கிங்.

 சிறிய அளவிலான அண்டப்பொருள் இயற்பியல் என்பது அணு, அணுக்குள் நிகழும் இயக்கங்களைப் பற்றி விளக்ககூடிய குவாண்டம் இயங்கியல் ஆகும்.

இதற்கு முன் யாரும் இவ்விரு இயற்பியல் களங்களை இணைத்துப் பார்த்ததில்லை. கருந்துளையின் அடர்நிறையீர்ப்புக்குள் குவாண்டம் இயங்கியலையும் ஐன்ஸ்டீனுடைய சார்பியலையும் ஒரே சமயத்தில் நிலைநிறுத்தக்கூடிய புதிய வழியைப் பற்றி ஹாக்கிங் சிந்தித்தார்.

ஹாக்கிங் கதிரியக்கம்:



சில மாதங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த முடிவுடன் ஹாக்கிங் வந்தார். கருந்துளையிலிருந்து ஏதோ சில வெளிவருகின்றன என அவருடைய சமன்பாடுகள் காட்டின. இது நடக்கவியலாத ஒன்று என யூகிக்கப்பட்டது.

கருந்துளைகளைப் பற்றி அறிந்திருந்த அனைவரும் அனைத்து விஷயங்களும் கருந்துளைக்குள் விழுந்துவிடும், ஒளி கூட தப்புவதில்லை என்றே கருதினார்கள்.

ஆதலால் ஹாக்கிங் மேலும் பரிசோதித்தார், மேலும் அதிகமாக அவருடைய கருத்து சரி என அறிந்துகொண்டார். கருந்துளையிலிருந்து கதிரியக்கம் வெளிப்படுவதை கண்டார். கருந்துளைகள் ஆவியாகி மறைந்துபோவதற்கு இக்கதிரியக்கம் தான் காரணம் என ஹாக்கிங் மெய்ப்பித்தார். இது "ஹாக்கிங் கதிரியக்கம்" என அழைக்கப்படுகிறது.

கருந்துளைகளின் ஆவியாதல் குறித்த ஹாக்கிங் கொள்கை புரட்சிகரமானதாகவும், வினோதமானதாகவும் இருந்த போதிலும் பெருமளவில் எற்றுக்கொள்ளப்பட்டது.

அடிப்படை முக்கியத்துவத்திலிருந்து இவை வெகுதொலைவில் இருப்பதை ஹாக்கிங் அறிந்திருந்தார். 1976ல் "The breakdown of predictability in garaviational collapase" என்ற ஆய்வுத்தாளை அவர் வெளியிட்டார்.

அவ்வாய்வுத் தாளில் "அங்கு கருந்துளை மட்டும் மறைந்துபோவதில்லை, அதனுள் உறிஞ்சப்பட்ட அனைத்து விஷயங்களும் மறைந்து போய்விடுகின்றன" என அவர் வாதிட்டார்.



சான் பிரான்ஸிஸ்கோ வில் நடைப்பெற்ற இயற்பியல் சந்திப்பு நிகழும் வரை ஹாக்கிங்கின் யூகங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. உலகின் முன்னனி இயற்பியலாளர்கள் முன்னிலையில் ஹாக்கிங் தன்னுடைய ஆய்வுகளை வெளியிட்டார். ஜெராட் ஹூஃப்ட் (Gerad t' Hooft)மற்றும் லியோனர்ட் சஸ்கின்ட் (Leonard Susskind) ஆகிய இருபெரும் இயற்பியலாளர்களும் அங்கிருந்தனர்.

ஹாக்கிங்கின் கருத்துக்கள் கருந்துளைகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல, மாறாக இயற்பியலின் அனைத்து செயல்களுக்கும் பொருந்தக்கூடியது என இருவரும் உணர்ந்தனர்.

"ஹாக்கிங் கருத்து மெய்யாக இருக்குமானால் அது இயற்பியல் முழுவதையும் பாதிக்கும்; காரணத்திற்கும் காரியத்திற்கும் நேரடி தொடர்பற்று போகும்; இயற்பியல் வலுவிழந்து போகும்" என சஸ்கின்ட் கூறினார்.

சான்பிரான்ஸிஸ்கோ சந்திப்பிலிருந்து "தகவல் முரண்மெய்மை" யானது இயற்பியலின் மிகவும் அடிப்படையான மிகவும் கடினமான பிரச்சினையாக உருவெடுத்தது. விவாதங்கள் சூடுபிடித்தன, சஸ்கின்ட்ன் மற்றும் ஹாக்கிங்கின் கருத்தினை தவறென்போர் ஒர் அணியாகவும் ஹாக்கிங் மற்றும் அவரது சகாக்கள் மற்றோர் அணியாகவும் வாதிட தொடங்கினர்.

தொடர்ந்து 20 ஆண்டுகள் அனல் பறக்கும் விவாதத்திற்கு பிறகும் கூட இரு அணியினரும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.

ஜூவன் மால்டசீனா (Juan Maldacena), அர்ஜென்டினாவின் இளம் கணித மேதையுடைய ஆய்வுத்தாள் வெளியானது. கருந்துளையினுள் இருந்த விஷயங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய மிகக்கண்டிப்பான கணிதப்பூர்வ விளக்கத்தை அளித்தது அவ்வாய்வுத்தாள். ஆம், மால்டசீனாவின் வெளியீடு கருந்துளையினுள் உள்ள விஷயங்களுக்கு ஒன்றும் நேர்வதில்லை என உரைத்தது. ஆனாலும் ஹாக்கிங் சமாதானமடையவில்லை.

கிறிஸ்டோப் கால்ஃபர்ட் என்ற இளம் ஆராய்ச்சி மாணவருடன் இணைந்து மால்டசீனாவின் நிரூபணங்களை உடைக்க ஹாக்கிங் முனைந்தார். 2 ஆண்டுகளாகியும் அதனை முறியடிக்க இயலவில்லை.

அச்சமயம் ஒர் பேரிடர் நேர்ந்தது. ஹாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாக்கிங் மரணமடைந்துவிடுவார் என அனைவரும் கவலையடைந்தனர். ஆனால் அதன் பின் பல ஆண்டுகளாகியும் ஜீவித்துக்கொண்டு இருந்தார்.

இன்றுவரை முழுவதும் நிரூபிக்கப்பட்ட நிருபணங்களை ஹாக்கிங்கினால் கொடுக்கமுடியவில்லை.


அவர் சக்கரநாற்காலியில் அமர்ந்துக்கொண்டு, கண்களின் அசைவால் கண்ணியோடு உறவாடி தன்னுடைய கருத்தினை நிரூபிக்க முனைந்துக்கொண்டிருந்தார்....




மிக மன உறுதிமிக்க ...நம்பிக்கையின் மறு உருவமாக வாழ்ந்த
அப்பெரும் மேதைக்கு எனது வணக்கங்களும்....அஞ்சலிகளும்....



“விண்மீன்களைப் பார்க்கவும், அது உங்கள் காலடியில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும் வேலையை விட்டுவிடாதீர்கள் இங்கு வேலை என்பது உங்களுக்கு அர்த்ததையும் நோக்கத்தையும் தருகின்றது. இவைகள் இல்லாத வாழ்கை வெறுமையானதொன்றாகும்.’’ ஸ்டீபன் ஹவ்கிங்









(  தகவல்கள் அனைத்தும்  இணையைத்திலிருந்து...)


அன்புடன்

அனுபிரேம்

5 comments:

  1. இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் பற்றி நல்லதொரு நினைவஞ்சலி.

    ReplyDelete
  2. மிக மிக அருமையான பதிவு அனு....மிகப்பெரிய ஒரு விஞ்ஞானி...பல அண்டவியல் முடிச்சுகளை அவிழ்த்தவர் என்றும் கூடச் சொல்லலாம்....ஆங்கிலத்தில் வாசித்ததுண்டு. அதில் சில இயற்பியல் புரியவில்லை ஹிஹிஹி சரி நீங்கள் அழகாகத் தமிழில் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்...இதில் சில தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் புரியவில்லை ஹிஹிஹிஹி....ஆனால் இரண்டிலுமே சாராம்ஸம் புரிந்தது.

    இவரது கட்டுரைகள் பல விவாதத்தைக் கிளப்பினாலும், அதுதானே ந்ல்லது...பல விடைகள் கிடைக்கும் இல்லையா...சிறந்த மனிதர்....

    இவை நமது தத்துவங்களில் உள்ளது....தில்லை ரகசியம் என்பது ஆகாசத்தத்துவம்....அணுவிலும் அணுவாய் இறைவன்...அவனிடமிருந்துதான் பிரபஞ்சமெ விரிகிறது என்றெல்லாம் சொல்லியிருக்காங்கள் இல்லையா...

    அப்புறம் சுஜாதா கூட இயற்பியல் மற்றும் இறைவனை பற்றிய தத்துவசாரம் அவர் தன் சகோதரருடன் சேர்ந்து எழுதினார்...அது நெட்டில் இருக்கு. கிடைத்தது...வாசித்தேன்...முழுவதும் வாசிக்கவில்லை. அதில் எளிதாகச் சொல்லியிருப்பார்...


    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் இத்தகைய விஞ்ஞானியை பற்றி எழுதும் அளவிற்கு ஏதும் தெரியாது...

      இருப்பினும் சில வரிகள் லாவது எழுத வேண்டும் என தேடி தான் இங்கு பதிவிட்டேன்...அதிலும் அறிவியல் வார்த்தைகளில் தவறு நேர்ந்து விடக்கூடாது என நினைத்தே ..இணணயத்தில் கிடைத்த கட்டுரையையை இங்கு பதிவிட்டேன் ..

      Delete
  3. நல்ல தகவல்களைத் திரட்டி நலதொரு பதிவு.. ...ஸ்..ரீவன் ஆராலும் மறக்க முடியாத ஒரு விஞ்ஞான மேதை.

    ReplyDelete
  4. Stephen Hawking பற்றி விரிவான தகவல்களை திரட்டி நல்லதொரு பதிவாக தந்தமைக்கு நன்றி அனு. அவரைப்பற்றி கூடுதலாக அறிய முடிந்தது.

    ReplyDelete