தொடர்ந்து வாசிப்பவர்கள்

05 July 2018

காணி நிலம்


எனது இரண்டாவது சிறுகதை....எங்கள் ப்ளாக் கில் வெளிவந்தது.காணிநிலம்


கேசவன் தன் நிலத்தில் நின்று சுத்தி பார்த்தான்….

எங்கும் பசுமை...எதிலும் பசுமை…

பார்க்க பார்க்க மனம் பூரா சந்தோசம்…

கடவுளே! ரொம்ப நன்றி...எங்களுக்கு இந்த நிலத்தையும் , தண்ணியையும், காத்தையும் கொடுத்தத்துக்கு ன்னு சொல்லி கிட்டே..

நிலத்தில் இறங்கி தண்ணி கட்ட ஆரம்பித்தான்...

அடுத்த வாரம் அறுப்புக்கு ஆளுங்களை வர சொன்னா சரியாய் இருக்கும்...அப்பதான் செல்லாயி அம்மன்னுக்கு பொங்க வைக்கவும் தோதாய் இருக்கும்…..

இப்ப இந்த நிலம் இல்லனா நாங்க என்ன ஆகிருப்போம் ன்னு யோசனை வரும் போது தானேவே அப்பாயி தான் கண்ணுக்குள்ள வருது…

என்ன மனுஷி...வாழ்ந்தா அப்படி தான் வாழனும்…

இந்த வாழ்க்கை போதும் ன்னு..

யாருக்கும் கடைசி காலத்தில் தொல்லை குடுக்க கூடாது ன்னு

அவங்க கடைசி படுக்கையும் தானே முடிவெடுத்து…

சாப்பிடாம இந்த வாழ்வு போதும்ன்னு உண்ணா நோம்பு மாதரி இருந்து…

அந்த நிலைமையிலும் சின்னவன் னா என்ன பார்த்து கை எடுத்து கும்புட்டுசே…

ஏன் கும்புட்டுசுன்னு தெரியாது ..ஆன 

சின்னவன் ஆனா என்னை கூட மதிக்கணும் நினைச்ச அந்த பாங்கு..

அந்த மாதரி  தான் நாம வாழணும் ன்னு சொல்லி குடுத்துச்சு...வார்த்தையால் இல்ல செய்யலால்..

இன்னமும் அப்பாயி கூட இருந்தது எல்லாம் அப்படியே நினைவுக்கு வருது…
…..

அப்பாயி…

அப்பாயி...வண்டி வருது வா  இந்த வண்டி ல போலாம்...

இரு சாமி ...அடுத்த டவுன் பஸ் ல போலாம்...

ஏன் அப்பாயி.....

இதுல 25 காசு கூட சாமி...இரு...

வா சாமி…இத பாரு  டவுன் வண்டி வருது.. வெரசா ...ஏறுய்யா..

அப்பாயி ஒரே நெருக்கடியா இருக்கு...

ஆமா சாமி ...

ஏகாதசி அன்னக்கி ஸ்ரீரங்கத்தில் அப்படி தான் இருக்கு ஐயா...

நீ என் கையை கெட்டியா பிடிச்சுக்கோன்னு அப்பாயி ..என்னை ஒரு கையிலும்..சாப்பாடு பையை ஒரு கையிலும் எடுத்துகிச்சு....

..
அந்த ஆயிரம் கால் மண்டபத்தில் இரண்டு பேரும் உட்காந்து இருந்தோம் ...அப்போ 

அப்பாயி சாமிய எப்ப பாக்குறது..

இப்ப இங்க படுத்துக்க சாமி....

காலையில் வெரசா சாமி பாக்கலாம்..

சரி அப்பாயி ...கதை சொல்லு அப்பாயி...

ம்ம்ம்...

நம்ம தாத்தாக்கள் எல்லாம் சிலோன் லேந்து சம்பாத்தியம் பண்ணிட்டு வந்தாங்க...

அப்போ எல்லாம் நம்ம ஊட்டு கிழவிங்க தான் காடு கரை எல்லாம் பாத்துக்கும்....

என்னா வேலை செய்யுங்க தெரியுமா….

வூட்ட பாத்துக்கறது ஆகட்டும் ..

காடு பாத்துக்கறது ஆகட்டும்…

வேலை ஆளுகளுக்கு வயிறு வாடாம சோறு போடுறது ஆகட்டும்…

அதுங்க காரியம் யாருக்கும் வராது...

தினம் கம்பஞ்சோறு தான்..இட்லி எல்லாம் தீபாவளிக்கு மட்டும் தான் போடுவாக..

அப்புறம் அங்க சம்பாத்தியம் போதும் ன்னு...

நம்ம தாத்தாக்களே காடு கரை பார்க்க ஆரம்பிச்சாங்க...

அப்போ நம்ம ஊட்டு தாத்தா தான் பெரியவரு அவருக்கு பின்னால  நாலு பேரு...

உழவு ஓட்டுறதுல முத ஏறு எப்படியோ அப்படி தான் பின் ஏறும்...

முத ஏறு ஓட்டுறது தான் கடினம் கூட..

நம்ம தாத்தா தானே பெரியவரு அது நாளா அவரு தான் எப்பவும் முத ஏறு ஓட்டுவாரு....

ரொம்ப லாவகமா ஓட்டுவாரு...அவர் மாதரி மத்தவகலால முடியாது..

நல்லா விவசாயம் நடந்தது ...எல்லாம் சிறப்பா போச்சு...

நம்ம தாத்தாக்கு மட்டும் என்னமோ நேரம் சரி இல்லை ..கொஞ்சம் அப்படி இப்படி  போகவும்….எல்லா சிறப்பும் குறைய ஆரம்பிச்சது..

அவருக்கு பின்னால நமக்கு மேக்காடு(வயக்காடு) மத்தவங்க குடுக்கல..

அப்போ ஊருல இருக்குற கிழவி எல்லாம் திண்ணையில உட்காந்து...இனி இவ அரிசி வாங்க மஞ்ச பை தான் தூக்கி போகணும்...மேக்காடு இல்லன்னு எல்லாம் பேசுசுங்க..

காடு ,கரை இல்லாதவங்க தான் மஞ்சப்பை எடுத்து போய் சந்தையில அரிசி வாங்கு வாங்க…

அப்படி காடு இருக்குறவக  சந்தையில போய் அரிசி வாங்குனா அது அசிங்கம்..

இவ்வோளோ நாள் பெரிய பண்ணையத்தில் விவசாயம் பண்ணிட்டு இப்போ நானும்  மஞ்சப்பை தூக்கிட்டு போய் அரிசி வாங்க போறேன்னு அவங்க எல்லாருக்கும் இளக்காரம்...

ம்ம்ம்..


நான் மஞ்சப்பை தூக்கி போனாலும்...

என் மவனுங்க போக கூடாதுன்னு மனசுல வந்துச்சு…

அதுனால   இருந்த ஒரே சொத்தான தாலி கொடிய வித்து ...

காணி நிலம் வாங்குனேன்...

எல்லாம் அந்த  சாமியால தான் இல்லனா ஒத்த பொட்டச்சி யா நா எங்க வாங்கன்னு அப்பாயி சொல்ல சொல் நான் தூங்கிட்டேன்......
.....

இப்பவும் ஒவ்வொரு முறை இந்த வயலுக்குள்ள கால வைக்கும் போது அப்பாயின் நினைப்பு தான் மனசுல ஓடும்..

அப்பாயி அப்போ வைராக்கியமா வாங்கலைனா ஏது எங்களுக்கு இந்த காடுன்னு ...

நாங்க மஞ்சப்பை தூக்க கூடாது ங்கற அப்பாயின்  வைராக்கியத்தோட நினைப்பு தான் இந்த வயல்...

அந்த வைரக்கியத்துக்காக இருந்த கடைசி சொத்தான தாலி கொடி யையும் வித்து எங்களுக்கு வாழ்க்கை உண்டாக்கி இருக்கு...

எங்களுக்காக அப்பாயி வாங்குனது சொத்து இல்ல...மரியாதையை..

…..

வாழ்நாள் முழுக்க இந்த மரியாதையை காப்பாத்த வேண்டியது எங்க கடமை தானே...

இந்த காணிநிலம் தான் எங்களுக்கு சோறு போட்டது...என் தம்பிகளுக்கு படிப்பையும் வாழ்க்கையும் கொடுத்தது...என் கூட பொறந்தவளுக்கு பெருமையை கொடுத்தது…

இது எல்லாம் அப்பாயின் வைராக்கியத்தின் விளைவுகள்….

இந்த  காணி நிலம் தான் எங்களுக்கு சாமி....அதை வாங்குன அப்பாயி தான் எங்க குலசாமி…

 என்று எப்பவும் போல இந்த நினைவுகளுடனே  கேசவன் தன் வேலைகளை பார்த்துட்டு இருந்தான்...தன் காணி நிலத்தில்...

அன்புடன்
அனுபிரேம்...

7 comments:

 1. அருமையான சிறுகதை. எங்களுக்கு அனுப்பி கௌரவித்தமைக்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
 2. நீறு பூத்த நெருப்புப்போல மனதில் மறைந்திருந்தது எங்கள் புளொக்கில் படிச்சபின்.. இப்போ 2ம் தடவை படித்து முழுக்க நினைவாகி விட்டது...

  பாரதித்தாத்தாவின் மனைவி ரொம்ப அழகானவ போல இருக்கு.. அதுசரி கலர் ஃபோட்டோவா அக்காலத்தில ஹா ஹா ஹா நல்லாத்தான் புகுந்து விளையாடுது விஞ்ஞானம்:))

  ReplyDelete
 3. அருமையான கதை அப்பாயி மனதில் நிறைந்துவிட்டார் சகோதரி

  ReplyDelete
 4. அருமை சகோதரி/அனு!!!! மனதை நிறைத்த கதை. அப்போதும் ரசித்தோம் இப்போதும் ரசித்தோம்  ReplyDelete
 5. இந்த காணி நிலம் தான் எங்களுக்கு சாமி....அதை வாங்குன அப்பாயி தான் எங்க குலசாமி//

  முன்பேபடித்து இருந்தாலும் மீண்டும் படிக்கும் போதும் அப்பாயி மனதில் நிற்கிறார்.

  ReplyDelete
 6. எங்கள் ப்ளாக் ல படித்திருந்தேன்.ஆனா மிகதாமதமாக. அப்போ கருத்தும் சொல்ல இயவில்லை. மிகமிக அருமையா எழுதியிருக்கிறீங்க அனு. நல்லதொரு கரு. மீண்டும் படித்தேன். அப்பாயி பாத்திரம் மனதில்.
  உங்களுக்கு எழுதும் திறமை இருக்கு அனு வளர்த்துக்கொள்ளுங்க. நிறைய எழுதுங்க.
  பாரதிபாடல்களில் பிடித்தமான பாடல்.

  ReplyDelete
 7. சிறப்பான சிறுகதை.....

  காணி நிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும்... பாரதி சொன்னது எவ்வளவு பொருத்தம்....

  தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete