தொடர்ந்து வாசிப்பவர்கள்

20 July 2018

அருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்
குமரியம்மன் திருக்கோவில்
“கன்னிப் பெண் ஒருத்தியைத் தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது”; என்ற வரத்தைப் பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் பாணாசுரன் என்னும் கொடிய அசுரன்.

 ஒரு கன்னிப் பெண் தன்னை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தினால்,அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் படாதபாடு படுத்தினான்.

தேவர்களும், முனிவர்களும், தங்கள் துன்பங்களை துடைத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.

அவரோ, 'பாணாசுரன், கன்னிப்பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான்.

ஆகையால் உங்களுக்கு அந்த மகேசனின் அருகில் அமர்ந்துள்ள மகேஸ்வரியால்தான் உதவ முடியும்' என்று உபாயம் கூறினார்.

இதனால் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் நிறைவில் ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சியளித்தனர்.

அம்மையப்பன் இருவரையும் கண்டதும் ஆனந்தக்கூத்தாடினர் தேவர்களும், ரிஷிமுனிவர்களும். அவர்களைப் பார்த்து, அன்பர்களே! தங்களின் குறையை நான் அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் வேளை வந்து விட்டது.

எனது தேவியானவள்,தென் பகுதியான குமரியில் ஒரு கன்னியாக வடிவெடுத்து, பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள்; என்று ஆசி கூறினார் சிவபெருமான்.

அவ்வாறு கன்னியாக வந்துதித்தார் அன்னை பார்வதி தேவி.
அவர் ஈசன் மேல் பற்று கொண்டு அவரை நோக்கி கடுமையாக தவம் இருந்து வந்தார். அப்போது தேவியின் அழகில் மயங்கிய சுசீந்திரம் தாணுமாலயன், தேவியை மணம் புரியவேண்டி தேவர்களை அழைத்துப் பேசினார். ஆனால் தேவர்கள் கலக்கம் கொண்டனர்.

ஈசன், தேவியை மணம் புரிந்து விட்டால், அவர் எப்படி கன்னியாக இருப்பார். பாணாசுரனை அழிக்க ஒரு கன்னியால் அல்லவா முடியும்?' என்று எண்ணிய தேவர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயினர். அவர்களின் கலக்கத்தை நாரதர் போக்கினார்.

எல்லாம் நல்லபடியாக நடைபெறும். பாணாசுரன் அழிவு என்ற உங்களின் நோக்கம் நிறைவேறும். அதற்கான முதற்படிதான் இது' என்று தேவர்களுக்கு நாரதர் ஆறுதல் கூறினார். எனவேதான் சிவபெருமான் தேவியை மணம் முடிக்கப் பேசி கவனத்தைத் திருப்பி, ஏதாவது காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டால் தேவியின் கோபம் உச்சத்தை எட்டும்.அப்போது அங்கு வரும் பாணாசுரன் நிச்சயமாக அழிந்துபோவான். அதற்காகத் தான் சிவபெருமான் திருமண திருவிளையாடலைக் கையில் எடுத்திருந்தார்.

அந்தத் திருவிளையாடல் விதிப்படி திருமணப் பேச்சின் போது சிவபெருமானிடம், தேவர்கள் சார்பில் நாரதர் ஒரு கோரிக்கை வைத்தார். 'சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விட வேண்டும் என்பதுதான் அது.

தேவியிடமும், இந்தக் கோரிக்கை கூறப்பட்டது. சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்பு மாப்பிள்ளை வரவில்லை என்றால் திருமணம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மணநாள் வந்தது. சுசீந்திரத்தில் இருந்து அனைத்துச் சீதனங்களுடன் குமரி நோக்கி புறப்பட்டுச் சென்றார் ஈசன். அப்போது குறித்த நேரத்திற்கு முன்பாகவே நாரதர் சேவலாக மாறி உரக்கக் கூவினார். சேவல் கூவிவிட்டதால் சூரிய உதயத்திற்கு முன்பாக எப்படியும் குமரியை அடையவழியில்லை என்பது ஈசனுக்குப் புலப்பட்டது.எனவே அவர் மீண்டும் சுசீந்திரம் திரும்பிச் சென்று விட்டார். இதுபற்றி அறிந்ததும் ஈசனுக்காகக் காத்திருந்த தேவியின் காதல் கலந்த கண்கள், கோபத்தில் சுட்டெரிக்கும் சூரியனைப் போல் தகதகக்கத் தொடங்கியது. திருமணத்திற்காகச் சமைத்த அனைத்துச் சாதங்களையும் கடலிலும், கரையிலும் வீசி, மண்ணாய் போக சபித்தார் தேவி.


பின்னர் கோபம் அடங்காமல், தவத்தை மேற்கொள்ள எண்ணினார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினான். மேலும், தேவியைத் தொடும் எண்ணத்தில் நெருங்கியவனை, அவள் பார்த்த பார்வை நெருங்கவிடாமல் அனலில் தகிக்கச் செய்தது.

ஓங்கி உயர்ந்து, வீராவேசமாய் சிரித்த தேவி, பாணாசுரனை தன் காலால் மிதித்து வதைத்தார். தேவர்கள் அனைவரும் வானுலகில் இருந்து தேவிக்கு பூமாரி பொழிந்தனர். இதனால் தேவி கோபத்தை விடுத்து மனம் குளிர்ந்தாள்.

பகவதி இன்றும் ஈசனை வேண்டி, உலகம் உய்ய தவம் செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே தேவியிடம் வேண்டும் அனைத்தும், ஈசனிடம் கொண்டு சேர்க்கப்படும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.


கன்னியாகுமரியில் கன்னியாய் அமர்ந்திருக்கும் இந்தத் தேவி பகவதி அம்மனிடம் தங்கள் குறைகள் நீங்கி நன்மை விளைய எண்ணுவோர், பூச்சொரிதல் நடத்தினால், அவர்கள் வேண்டிய வரங்கள் எளிதில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

குமரி பகவதியிடம் வேண்டியவை அனைத்தும் கிடைக்கும்.மிக அழகிய அமைதியான கோவில்...வெளியில் அத்துனை சத்தம் இருப்பினும்  கோவிலின் உள் அமைதி நிலவுகிறது.. மனதிற்கு மிக இதம்...

11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி

12.கரையோரம்..

13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி  படகுத்துறை...

14.மாத்தூர் தொட்டிப் பாலம் 1

15. மாத்தூர் தொட்டிப் பாலம் 2

16.   விவேகானந்தர் பாறை

17.திருவள்ளுவர் சிலை


தொடரும்...அன்புடன்
அனுபிரேம்...

5 comments:

 1. சுவாரஸ்யமான புராணக்கதை.

  ReplyDelete
 2. பாணாசுரன் நல்ல கில்லாடியான ஆள்தான் போல, ரசிக்கும்படியான இடங்கள்.

  ReplyDelete
 3. அருமையான கன்னியாகுமரி தரிசனம்.புராணக் கதை அருமை.
  அழகான படங்கள் மூலம் அன்னையை தரிசனம் செய்தேன்.

  ReplyDelete
 4. பார்த்து ரொம்ப நாள் ஆச்சுது

  ReplyDelete
 5. தலவாரலாறு அறிந்துகொண்டேன். படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete