17 July 2018

கோபுர தரிசனம்..



வாழ்க வளமுடன்..






சமயபுரம் கோவில் கோபுர தரிசனம் ஆடி மாத சிறப்பாக....




















ஆடிவெள்ளிக் கிழமையிலே அன்னை வந்தாள் தேரினிலே

அண்டமெலாம் ஆளும் சத்தி அசைந்து வந்தாள் ஊரினிலே

கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா

வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா!



அழகுமிகு தொம்பைகளும் அந்தரத்தில் ஆடிவர

வாழை, தெங்கு குலைகளுமே அடுக்கடுக்காய் அசைந்துவர

குழைந்திருக்கும் பக்தர்கூட்டம் வடமெடுத்து இழுத்துவர

அழகுமயில் ஆடுதல்போல் அம்மன் தேர் ஓடுதம்மா!



ஓரசைவில் பார்த்திருந்தால் சிறுகுழந்தை தவழுதல்போல்

மறுபக்கம் பார்த்திருந்தால் சின்னப்பெண் நடப்பதுபோல்

இன்னொருபுறம் பார்த்தாலோ பருவப்பெண் குலுங்குதல்போல்

சிலநேரம் வயதான மூதாட்டி தளர்நடைபோல்.......

காட்டியிங்கே ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!



அன்னையிவள் பெருமையினைச் சொல்லிடவும் முடியாது

என்னமொழி சொன்னாலும் எடுத்துரைக்க இயலாது

கண்ணெழிலைக் காட்டியிவள் கேட்டவரம் தந்திடுவாள்

பண்ணெடுத்துப் பாடுபவர் பாவங்களைப் போக்கிடுவாள்!



சமயபுரத்தினிலே மாரியென வீற்றிருப்பாள்

கண்ணபுரத்தினிலே கண்ணாத்தா இவளேதான்

மதுரையிலே மீனாக்ஷி காஞ்சியிலே காமாக்ஷி

காசி விசாலாக்ஷி வேற்காட்டில் கருமாரி

திருவாரூர் கமலாம்பா திருக்கடவூர் அபிராமி

ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா

சிதம்பரத்தில் சிவகாமி நாகையிலே நீலாயி

உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி

புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா

முண்டகக்கண்ணி மாரியம்மா, அங்கையற்கண்ணி அகிலாம்பா

பொற்கூடை மகமாயி பொலிவுதரும் பொன்னாத்தா

என்றுன்னைப் போற்றுகின்ற பக்தருக்கு அருளிடம்மா!



இப்படியே கோயிலிலே இருப்பதிலே மகிழாமல்

தாயாக நீவந்து வீடெல்லாம் குடியிருப்பாய்

தாயன்பே தெய்வமென தரணிக்குக் காட்டிடுவாய்

தங்கமே நின்பெருமை எளியேனால் சொல்லப்போமோ!



ஊரிருக்கும் இடமெல்லாம் தாயாரே நீயிருப்பாய்

உன்பிள்ளை கணபதியை உன்னுடனே வைத்திருப்பாய்

தடையேதும் வாராமல் உனைக்காண அவன் அருள,

தயவெல்லாம் தந்திடவே நீயென்றும் அருளிடுவாய்!



ஆற்றங்கரை மணலெடுத்து ஆடியிலே தவமிருந்தாய்

கூற்றுவனை உதைத்திட்ட இடக்காலாய் நீயிருந்தாய்

குற்றமிலா பட்டருக்கு நிலவொளியாய் நீ வந்தாய்

ஏற்றிடுவாய் என் துதியை! எல்லார்க்கும் அருளிடுவாய்!



தேரோட்டம் கூட்டிவந்து ஊர்நிலையைக் காட்டுகின்றோம்

வேறோட்டம் இல்லாது கூழூற்றிக் குளிர்கின்றோம்

ஏரோட்டம் நடப்பதற்கு நீர்நிலையைத் தந்திடுவாய்

பாரெட்டும் புகழ்பாடும் பத்தினியே பொழிந்திடுவாய்!



ஆதவனைக்கண்டதுபோல் என்மனமும் மலர்கிறது

திங்களைக் கண்டதுபோல் என்னுள்ளம் குளிர்கிறது

செவ்வாயில் சிரிப்பெல்லாம் காட்டியெனை மகிழ்த்திடுவாய்

பொன்புதனாய் என்வாழ்வில் புத்தொளியை ஊட்டிடுவாய்

குருவாக நீவந்து திருவருளைக் காட்டிடுவாய் - விடி

வெள்ளியென நம்பிக்கை எனக்கூட்டி நிறைத்திடுவாய் -

சனிக்கும் கவலைகளை நீ விரட்டிக் காத்திடுவாய்

நின்னடியில் என்காலம் நிறைவுபெறச் செய்திடுவாய்!






அன்புடன்

அனுபிரேம்

10 comments:

  1. அடடா! இப்படி ஒரு பதிவை தேத்தலாமோ?! இருடி இரு.. நானும் இதேமாதிரி ஒரு பதிவை தேத்துறேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ராஜி க்கா..தேத்தி தேத்தி போடுங்க..

      பெண்மை.com ன்னு ஒரு பெண்கள் தளம் இருக்கு க்கா அங்க கோபுர தரிசனம் ன்னு தினம் ஒரு பதிவு வரும் அதான் எனக்கு வழிகாட்டி..

      Delete
  2. ஹயோ அனு ஹைஃபைவ்! நானும் இப்படி கோபுரங்களாக எடுத்து வைச்சுருக்கேன்....கோபுர வாசலிலே அப்படினு தலைப்பிட்டு ட்ராஃப்ட்ல இருக்கு நிறைய...

    சூப்பரா இருக்கு அனு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. போடுங்க க்கா சீக்கிரமா...என்னட்ட இன்னும் இரண்டு கோவில் படம் இருக்கு...விரைவில் வரும்

      Delete
  3. பலமுறை சென்றுள்ளேன். பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று. ஆடி மாத முதல் நாளன்று சிறப்பான பதிவு.

    ReplyDelete
  4. கோபுரதரிசனம் கோடி புண்ணியம்!
    அழகான படங்கள். .
    ஆடி மாத சிறப்பு பதிவு நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    ஆடிப் பண்டிகையில் அருமையான பதிவிது. அழகான கோபுர தரிசனங்கள். கோடி பாவங்களை போக்கும் அழகான கோபுர தரிசனங்களை கண்டு களித்தேன். பாடல் வரிகளும் அற்புதம். அம்மனை நினைத்து பாடி மகிழ்ந்தேன். அருமை சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    ஆடிப் பண்டிகையில் அருமையான பதிவிது. அழகான கோபுர தரிசனங்கள் கண்டேன். கோடி பாவங்களை போக்கும் அழகான கோபுர தரிசனங்களை கண்டு களித்தேன். பாடல் வரிகளும் அற்புதம். அம்மனை நினைத்து பாடி மகிழ்ந்தேன். அருமை சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete