22 November 2018

திருவண்ணாமலையில்



 திருவண்ணாமலையில் இருக்கும்  அருணாசலேசுவரர் திருக்கோவில்.



மற்ற இடங்களில்  மலைமேல் சுவாமி இருப்பார், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம்.

இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர்.

இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது.

இறைவன் - அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்.

இறைவி - அபீதகுஜலாம்பாள், உண்ணாமுலை அம்மன்.

தலமரம் - மகிழம்.

தீர்த்தம் - பிரமதீர்த்தம்.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற ஸ்தலம்.



 ஸ்தல வரலாறு :

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்பு பிழம்பாக சிவன் தோன்றி,   தம்மில் யார் இதன் அடியையும், முடியையும் கண்டறிபவரே நம்மில் பெரியவரென உரைத்தனர்.

அதன் அடியை காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியை காண இயலாமல் திருமால் திரும்ப,

அன்னவடிவமெடுத்து முடியை காணச்சென்ற பிரம்மர்,

 வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம்

நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புபிழம்பாக நின்ற சிவனின் முடியை கண்டுவிட்டேன் எனக்கூறும்படி கேட்டார் பிரம்மர்.

தன்னால் அடியை கண்டறிந்தளக்க முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், பிரம்மன் நான் பகிரதனுக்காக ஆகாயகங்கையை தனது செஞ்சடையில்தாங்கி சிவகங்கை என பெயர்மாற்றிய சிவபெருமானின் முடியை கண்டுவிட்டதாகவும்,

அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என உரைத்தும்

 நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளிநகையாடியதால்,

ருத்திரமுற்ற சிவன், பத்மகற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாரெனவும், தாழம்பூ சிவபூசையில் இனி பயன்படாயெனவும் உரைத்தார்.

தாழம்பூ தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய சிவன் நான் புவியில் எனது பக்தைக்காக குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கையெனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாயெனவும் அருளினார்.

திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், பிரம்மா கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாக தோன்றினர்.

தன்னை நோக்கி தவமியற்றிய பார்வதியை தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம் ஆகும். "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம்.






இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது.

அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம்.




இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன.

ஒவ்வொரு பிரகாரத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது.

முதல் பிரகாரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது.

மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.

 மற்ற பிரகாரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது.







இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம்.








இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பம்சம்  66 அடி உயரம் கொண்ட கோவிலின் கோபுரம். இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் உள்ளன.

 பதினைந்தாம்  நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவது கோபுரமாக விளங்குகிறது.

கிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது.

அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர்  நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.

மற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.

இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் உள்ளது. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவாகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.



 (இரவில் எடுத்த காட்சிகள் )




 மகா தீபம், கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும்.

மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது.

அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது






கடந்த ஜூன் மாதம் எங்களுக்கு கிடைத்த தரிசனத்தில் எடுத்த படங்கள் இவை ...

இரவு அர்த்தஜாம பூஜை யும் , பள்ளியறை பூஜை யும் காண கிடைத்தது.. அத்துனை சிறப்பு  பாடல்கள் பாடி ,அம்பாளையும் சிவனையும்  ஊஞ்சலில் வைத்து ஆட்டி  என  மிக அழகு ..

மீண்டும் காலையில்  மிக அமைதியான தரிசனம் ..

இன்றைய கார்த்திகை தீப பதிவாக திருவண்ணாமலை கோவில்  தரிசன படங்கள் ..

திருஞானசம்பந்தர் திருப்பதகம்

"உண்ணாமுலை உமையாளடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார் வினைவழுவா வண்ணம் அறுமே."

உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.



அன்புடன்
அனுபிரேம்




7 comments:

  1. சொல்ல சொல்ல நீண்டுக்கிட்டே போகும் திருவண்ணாமலையின் அற்புதங்கள்.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான விவரங்கள்.

    ஒவ்வொரு படமும் மேகங்களின் பின்னணியில் அற்புதமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. படங்களும் விபர்ங்களும் மிகவும் அழகு!

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு அனு.

    ReplyDelete
  5. படங்கள் எல்லாம் அழகு , செய்திகள் அருமை.
    திருக்கார்த்திகை நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  6. அழகான படங்கள்.

    எனக்கு மிகவும் பிடித்த கோவில். மூன்று நான்கு முறை சென்றதுண்டு.

    ReplyDelete