05 January 2021

21.ஏற்ற கலங்கள்

ஏற்ற கலங்கள்


"உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!"

நப்பின்னையை புகழ்ந்தும், கிருஷ்ணனைப் புகழ்ந்தும், இருவரையும் சேர்த்தே புகழ்ந்தும் கிருஷ்ணன் எழுந்தபாடில்லை. இப்போது கிருஷ்ணன் யாருடைய பிள்ளை, அவன் தந்தை எப்படிப்பட்ட வள்ளல், அவனுடைய செல்வச் செழிப்புதான் என்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, கிருஷ்ணனை எழுந்திருக்குமாறு சொல்கிறாள்.


 

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப *

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் *

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் *

ஊற்ற முடையாய்! பெரியாய்! * உலகினில் 

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் *

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் *

ஆற்றாதுவந்து உன்னடி பணியுமாபோலே *

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.


பொருள் -

குடங்களை வைத்து பசுவின் மடியில் கை வைத்தாலே, குடங்கள் எல்லாம் நிறையும்படியாக தாராளமாகப் பாலைப் பொழியும் பசுக்களை கணக்கின்றி பெற்றிருக்கும் நந்தகோபரின் பிள்ளையே, அந்தப் பசுக்களுக்கு இருக்கும் வள்ளல்தன்மைகூட உனக்கு இல்லையா? நீ என்ன சாதாரண பிறவியா? என்று ஆண்டாள் கேட்கிறாள்.


ஆண்டாளின் கேள்விக்கு கிருஷ்ணனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த இடத்தில் விளக்கம் சொல்லும்போது அஹோபில மடம் 44-வது பட்டம் ஶ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள், தம்முடைய திருப்பாவைக்கான ஸுபோதினி விளக்கவுரையில் கிருஷ்ணனுக்கும் ஆண்டாளுக்கும் இடையிலான ஓர் உரையாடலாக சுவைபடச் சொல்லி இருக்கிறார். 


ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் கிருஷ்ணனின் தந்தை எப்படிப்பட்ட செல்வந்தன் என்று சொல்லி, உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கச் சொல்லும்போது கிருஷ்ணன் படுக்கையில் இருந்தபடியே பேசத் தொடங்குகிறான். அவன் திருவாய் மலர்ந்தவுடனே ஆண்டாளும் அவளுடைய தோழிகளான கோபிகைகளும், 'ஆஹா, எங்கள் கிருஷ்ணன் பேச ஆரம்பித்துவிட்டான்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.


அவர்களின் மகிழ்ச்சியைப் போக்கடிப்பது போலவே கிருஷ்ணன் பேச ஆரம்பிக்கிறான். 


'அசட்டுப் பெண்களே! கேளுங்கள், நான் இந்த ஊரில் எந்த ஜாதியைச் சேர்ந்தவன்? எந்த விதத்தில் உயர்ந்தவன்? மாடு மேய்த்து ஜீவனம் பண்ணுகிறவன். அவர்கள் சோறு போடாமற் போனால் திருடித் தின்றுகொண்டிருக்கிறேன். படிப்புக் கிடையாது. இந்த ஊரில் எங்கும் எனக்குக் கெட்டபேர்தான் இருக்கிறது. என் அம்மா எத்தனையோ தடவை என்னைக் கட்டிப் போட்டு அடித்திருக்கிறாள். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நல்ல துணி கிடையாது. கந்தல் துணி. என் நகையைப் பார்த்தீர்களா? குன்றிமணிமாலை. தலையில் பாருங்கள்: பெரிய கிரீடம் மயில்தோகை! எனக்கு 'நொண்டி கிருஷ்ணன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


'பகல் திருடன்' என்ற  ஜாப்தாவில் என்னை சேர்த்திருக்கிறார்கள். 

'அந்த இடைப்பையன் எங்கே?' என்று தேடிக்கொண்டு வருகிறார்கள். 

எங்கள் தகப்பனும் ஏழை. 

உங்கள் தாய்தந்தையர் உங்களை வீட்டிற்குள் நுழையவிடாமல், 'உங்கள் இஷ்டப்படி கிருஷ்ணனுடனேயே போய் விடுங்கள்' என்று உங்களைத் தள்ளி வைத்துவிட்டார்களேயானால், உங்களைக் கட்டிக்கொண்டு சோறுபோட எனக்கு என்ன இருக்கிறது? பெண்களே! வேண்டாம் முரட்டுத்தனம். வீடு போய்ச் சேருங்கள்" என்று ஶ்ரீகிருஷ்ணன் அந்தப் பெண்களைப் பார்த்துக் கபடமாகச் சொன்னான்.


அதற்கு அந்தப் பெண்கள், "கிருஷ்ணா! நீ சொல்லுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீ இந்த ஊரில் இருக்கிறவர்களின் வீட்டு ஆண்டாள் மாட்டையா மேய்த்துப் பிழைக்கிறாய்? ஐயோ பாவம்! சுமார் பத்து லக்ஷம் பசுக்களை வைத்துக்கொண்டிருக்கிற மகாராஜனான நந்தகோபன் குமாரன் அல்லவா நீ? யாருக்குத் தெரியாது என்று பொய் சொல்லுகிறாய். 

நீ ஒரு பிள்ளைதானே நந்தகோபனுக்கு? அவ்வளவு சொத்தும் பங்கு போடாமல் உனக்கு மாத்திரம்தானே பாத்தியப்பட்டது? உங்கள் தகப்பனுக்கு உள்ள எல்லாப் பசுக்களும் எங்களுக்குத் தெரியும். அவை எவ்வளவு பால் கறக்கின்றன என்றும் எங்களுக்குத் தெரியும். சொல்லுகிறோம், கேள்; ஒவ்வொரு பசுவையும் கறக்கவேண்டும் என்று நினைத்துப் பெருங் குடங்களைப் பசுவின் மடிக்கு சமீபத்தில் கொண்டுபோனவுடனே பால் சொரிய ஆரம்பிக்கின்றன.


குடங்கள் நிறைந்து மேலே வழிய ஆரம்பிக்கிறது பால். "ஒரு பசுவின் இடத்தில் எத்தனை குடங்கள் வைத்தாலும் நிறைக்கிறது. இப்படியே பத்து லக்ஷம் பசுக்களும் கறக்கிற பெரும் பசுக்கள், நல்ல ஸ்வபாவத்தோடு கூடின பெரும் பசுக்கள். இளம் பெரும் பசுக்கள். பால் விற்கிறவர்கள் இந்தப் பாலை வாங்கிக்கொண்டு அயல் ஊர்களுக்குப் போய் விற்றுப் பெரும் பணக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள். அவ்வளவு பசுக் கூட்டங்களை ஜன்மாந்திர புண்ணியத்தினால் நந்தகோபன் 'படைத்தான்' அடைந்திருக்கிறான். அப்படிப்பட்ட வள்ளலின் பிள்ளையான நீ எங்களுக்கு அருள் செய்யக்கூடாதா? என்கிறார்கள்.


வேதங்கள் எல்லாம் போற்றும், வேதங்களுக்கெல்லாம் நாயகனான கிருஷ்ணனே! 

உன்னுடைய பகைவர்கள் உனக்கு அஞ்சி,  தங்கள் வலிமையைத் தொலைத்து, உன்னுடைய வாசலில் வந்து நிற்பது போல் நாங்களும் வந்து நிற்கிறோம். ஆனால், உன்னுடைய பகைவர்கள் உனக்கு அஞ்சி வந்து உன் திருவடி பணிந்து நிற்கிறார்கள். ஆனால், நாங்களோ உன்னிடம் பிரேமை கொண்டவர்களாக வந்து இருக்கிறோம். எங்களுக்கு அருள் செய்ய எழுந்து வருவாயாக என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

ஆனால், கிருஷ்ணனுக்கு இன்னும் ஆண்டாளின் தெள்ளுத் தமிழ்ப் பாசுரங்களைக் கேட்கவேண்டும் போல் இருக்கிறதோ என்னவோ? அவன் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. 

(இணையத்திலிருந்து )


திருக்காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி)  - ஸ்ரீலோகநாயகி தாயார்

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    படங்கள் அழகு. தரிசித்துக் கொண்டேன். ஆகா.. கிருஷ்ணனுக்கும், ஆண்டாளுக்கும் அருமையான உரையாடல்கள். ஸ்ரீ ஆண்டாளின் பாடல்கள் கேட்க. கேட்க திகட்டாதவை. இன்றைய பதிவும், பாடலும் நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete