3. ஓங்கி உலகளந்த...
மூன்றாம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்
உயர வளர்ந்து திருவுலகளந்தருளின புருஷோத்தமனுடைய திருநாமங்களை நாங்கள் பாடி எங்கள் நோன்புக்காக என்ற காரணத்தைச் சொல்லி நீராடுவோம்.
அவ்வாறு செய்தால் தேசமெங்கும் ஒரு தீமையும் இல்லாமல்,
மாதந்தோறும் மூன்று முறை மழை பெய்திட,
அதனாலே உயர்ந்து நன்றாக வளர்ந்திருக்கும் செந்நெற்பயிர்களின் நடுவே கயல் மீன்கள் துள்ள,
அழகிய புள்ளிகளை உடைய வண்டுகள் அழகிய கருநெய்தல் பூக்களிலே உறங்க,
அவ்வூரில் இருக்கும் வள்ளல் தன்மையை உடைய பெருத்திருக்கும் பசுக்களைத் தயங்காமல் சென்றடைந்து, நிலையாக இருந்து,
அவற்றின் பருத்த முலைகளை அணைத்துக் கறக்க, குடங்கள் பாலாலே நிரம்பி வழியும்.
இப்படிப்பட்ட அழியாத செல்வம் நிறைந்து இருக்கும்.
No comments:
Post a Comment