21 December 2023

5. மாயனை மன்னு

5. மாயனை மன்னு

வடமதுரையில் அவதரித்தவனும், யமுனைத் துறை தலைவனும், திருவிளக்கைப் போன்று ஒளி உடையவனுமான தாமோதரனை தூய புஷ்பங்கள் கொண்டு தூவி, அவன் நாமங்களைப் பாடினால் நம் பாவங்கள் தீயிலிட்ட தூசு போன்று உருத் தெரியாமல் போகும்.



 ஐந்தாம் பாசுரம் - நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே தீர்க்கும்படி செய்கிறான்.


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை

    தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

    தீயினில் தூசாகும், செப்பு ஏலோர் எம்பாவாய்


ஆச்சர்யமான செயல்களை உடையவனும், விளங்கிகொண்டிருக்கும் வட மதுரைக்கு மன்னனும், பரிசுத்தமானதும், 

ஆழம் மிக்கிருப்பதுமான நீரை உடைய யமுனைக்கரையிலே விளையாடுபவனும், 

இடையர் குலத்தில் அவதரித்த மங்கள தீபம் போன்றவனும்,

 யசோதைப் பிராட்டியின் திருவயிற்றுக்குப் பெருமை சேர்த்தவனுமான தாமோதரனை, 

நாம் பரிசுத்தர்களாகக் கிட்டி,

 நல்ல மலர்களைத் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனதாலே த்யானிக்க, முன் செய்த வினைகளும், 

பிற்காலத்தில் வரும் பாபங்களும் நெருப்பிலே பட்ட பஞ்சு போலே உருவழிந்து போகும். ஆகையால் அவனைப் பாடு.













ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment