14 December 2023

10.திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி”

  





 முந்தைய பதிவுகள் 






6.சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்

7. மேல்கோட்டை கல்யாணி தீர்த்தம் 

8. மேல்கோட்டை   ராயகோபுரம்

9.அக்கா தங்கை குளம், மேல்கோட்டை  


10.திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி”

இராமானுஜரின் திருமேனிகள் மைசூர், மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்திலும், ஸ்ரீபெரும்புதூரிலும், திருவரங்கத்திலும்  இருக்கின்றன. 

திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி” என்றும்.

 ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” என்றும்,

 ஸ்ரீரங்கத்தில் “தானான திருமேனி” என்றும்  சொல்கிறார்கள். 






மேல்கோட்டையில்  தமர் உகந்த திருமேனி

 சுவாமி  இராமானுசர் தன் 80 ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். 

அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள். இது கண்டு துயருற்ற இராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார்.பின் தம்  திவ்ய சக்தியை அந்த  அர்ச்சாவிக்ரகத்தில் ஆவிர்ப்பவிக்க   செய்தார்.

இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. 

 விடைபெறும் போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.’ என்று அவர்களை அமைதிப்படுத்தினார். 

இந்தச் சிலை தமர் உகந்த திருமேனி என்றழைக்கப்படுகிறது.

 இன்றும் மேல்கோட்டையில் இச்சிலை வழிபடப்படுகிறது.







 ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” 

இராமானுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள்.

 சிலைக்கு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுசர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார்.

 திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார். 

பின்பு இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை உருவாக்கினார்கள்.

 இராமானுஜர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அளித்தார்.

 இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. 

இதன் பொருள் இராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. 

இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது. 










தானான திருமேனி மூன்றாவது திருமேனி 

 இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள். 

இராமானுஜர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.

 அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். 

உயிர் பிரிந்த உடனே: தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். 

அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள். 

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும்,  சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். 

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுஜரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். 

பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். 

இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.

 இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு திவ்ய விமானத்தில் அமர்த்தப்பட்டு அவருடைய முக்கிய சீடர்களும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. 

திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். 

தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

 ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது.

 மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர்.

 மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்கள். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தது: எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.

 வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுஜரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி.









இன்னும் சில  வைரமுடி சேவை திருவிழா காட்சிகள் ....










திருவாய்மொழி - ஆறாம் பத்து 

6- 9 ஆழ்வார் எம்பெருமானைக்  கூப்பிடுதல் 


ஞாலத்தூடே நடந்தும் நின்றும்*  கிடந்து இருந்தும்,* 

சாலப் பலநாள்*  உகம்தோறு உயிர்கள் காப்பானே,* 

கோலத் திருமா மகளோடு*  உன்னைக் கூடாதே,* 

சாலப் பல நாள்*  அடியேன் இன்னும் தளர்வேனோ?   

3541



தொடரும் ....




அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛

2 comments:

  1. தமர் உகந்த திருமேனியில் தன் சக்தியைப் பாய்ச்சினார் எனப் படித்ததில்லை. இராமானுசர் தான் உலகைவிட்டுப் பிரியும் காலம் வந்தபோது சீடர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஶ்ரீபெரும்பூதூரில் நிறுவுவதற்காகப் பண்ணிய உற்சவ விக்ரஹத்தை அணைத்துக்கொண்டு தன் சக்தியை (இதை இந்த வார்த்தையை உபயோகித்துச் சொல்லமாட்டார்கள்) அளித்தார். பிறகு மூன்று நாளில் பிரிந்தார் என்றுதான் படித்திருக்கிறேன். (தன் சக்தி விக்ரஹத்துக்குச் சென்றவுடன் தளர்வுற்றார்)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ...பதிவில் சில மாற்றங்கள் செய்துவிட்டேன்

      Delete