14 October 2023

4. ஸ்ரீ நம்பி நாராயண பெருமாள் திருக்கோவில் - தொண்டனுர்

கோவிந்தா ஹரி கோவிந்தா ......








முந்தைய பதிவுகள் 



3. ஸ்ரீ யோக நரசிம்மர்  கோவில்,  மேல்கோட்டை.

முந்தைய பதிவில்  மலை  மேல் அமர்ந்து அருள்  புரியும் யோக  நரசிம்மர் தரிசனம்  கண்டோம் இன்று.... 



 4. தொண்டனுர்  ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில்  தரிசனம் காணலாம்.


 மூலவர்   : ஸ்ரீ  நம்பி நாராயண பெருமாள்

 தாயார்   :  அரவிந்த  நாயகி

 தொண்டனூரில் உள்ள நம்பி நாராயணன் கோயில் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களில் முதன்மையானதும் பழமையானதும் ஆகும்.

  




------ பகவானுடைய சங்கல்பத்தின் படியே ஸ்ரீ பெரும்புதூரிலே அவதாரம் செய்த ஸ்ரீ உடையவர் சோழ ராஜன் பண்ணின

ஹிம்சை காரணமாக மேல் நாட்டுக்கு எழுந்து அருளி தொண்டனூரிலே இருந்து -பெட்டில தேவன் -என்கிற ஜைன ராஜனை

ஞான உபதேசத்தாலும் பஞ்ச ஸம்ஸ்காராதிகளாலும் வைஷ்ணவன் ஆக்கி விஷ்ணு வர்த்தன்-என்ற பெயர் இட்டு

அங்கே எதிரிகளாய் வந்த ஜைனர்களை வாதத்தால் ஜெயித்து விஜய த்வஜம் எடுத்தார் –------



கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். 

அதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தழ்வாரின் ஆலோசனைப்படி சுவாமி இராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார்.

 அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த பிட்டிதேவன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, சுவாமி ராமானுஜர் உதவியால் அது நீங்கியது.

 இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். சுவாமி ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். 

இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான்.

பின் சுவாமி ராமானுஜரின்  வழிகாட்டலில்  சுவாமி முதலியாண்டான்  அவர்கள் பஞ்ச நாராயண ஸ்தலத்தை நிறுவினார் . அதற்கு தேவையான அனைத்து  உதவியையும் விஷ்ணுவர்தன் அளித்தார் . 


அந்த பஞ்ச நாராயண ஸ்தலங்கள் ....


1. ஸ்ரீ நம்பி  நாராயண திருக்கோவில், தொண்டனுர் 

2. ஸ்ரீ கீர்த்தி நாராயணா  திருக்கோவில், தலக்காடு

3. ஸ்ரீ கேசவ நாராயணா திருக்கோயில் (சென்ன கேசவ ), பேலூர்

4. ஸ்ரீ சௌம்யா  நாராயண திருக்கோவில், நாகமங்கலா  

5,.ஸ்ரீ வீர நாராயண திருக்கோயில், சாளக்கிராமம்

இந்த  பஞ்ச நாராயண ஸ்தலங்களில்  ஸ்ரீ  நம்பி நாராயணன்  கோவில் தான் முதன்மையானது.






மூலவர் ஸ்ரீ நாராயணப் பெருமாள் சுமார் 8 அடி உயரத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.

 மூலவர் மேல் கரங்களில் கதையும், கீழ் கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் உள்ளார். 

வலது கரத்தில் சங்கு இடது கரத்தில் சக்கரம் என மாற்றி ஏந்தியுள்ளார் மூலவர். இது நம்பி நாராயண பெருமாளின்  சிறப்பு அம்சமாகும். 


இக்கோயில் கிழக்கு நோக்கியவாறும், கிழக்குப் பக்கத்தில் கருட தோணியுடன் நுழைவாயில் வளைவும் உள்ளது.

 நடைபாதையின் இருபுறமும் இரண்டு கிணறுகள் உள்ளன.

 கருடன் தூண் முன் ஒரு சிறிய படிக்கட்டு கிணறு உள்ளது.

 கோயிலின் நுழைவாயில் கிழக்குப் பகுதியில் மண்டபத்துடன் உள்ளது. மகா மண்டபத்தின் முன் பலிபீடத்துடன் கூடிய த்வஜஸ்தம்பம் உள்ளது. துவாரபாலகர்களான ஜெயன் மற்றும் விஜயன் கருவறையின் நுழைவாயிலில் உள்ளனர்.


தாயார் அரவிந்த நாயகி  வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய தனிக் கோயிலில் உள்ளார்.











 நவரங்கத்தில், நான்கு மென்மையான கல்லில்  ஆன  தூண்கள் உள்ளன. இந்த தூண்களில் பூக்கள் மற்றும் மணிகளின் அலங்கார வடிவமைப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை  பேளூர் மற்றும் ஹலேபீடு கோயில்களில் காணப்படும் தூண்களில்  இருப்பது போல உள்ளது. 

 அஸ்டதிக் பாலகங்களின் உருவங்களும் இங்கு காணப்படுகின்றன.

 அர்த்தமண்டபத்தில் ராமானுஜாச்சாரியாரின் பாதுகைகள் உள்ளன.

 இக்கோயிலின் விமானம் திராவிட பாணியில் சாந்துகளால் கட்டப்பட்டுள்ளது. 

ஐம்பது தூண்கள் மஹாரங்க மண்டபத்தை அலங்கரிக்கின்றன.

 பாதாலங்கானா 40 எண்கோண முகத் தூண்களைக் கொண்டுள்ளது. 45 அடி உயர கருடகம்பா இந்த சன்னதிக்கு எதிரே உள்ளது. 


இங்கு  உள்ள  கட்டிடக்கலை வடிவமைப்பு சோழர்களிடமிருந்து வந்தது. இக்கோயில் ஹொய்சாள மன்னர்களால் (11ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. நுழைவாயிலில் ஹொய்சாளர்களின் பாணியில் ராஜ கோபுரம் இல்லை. ஆனால் முழு உள் பிரகாரமும் வெளிப்புற சுவர்களும் வலுவான கிரானைட் அடித்தள அமைப்பைக் கொண்டுள்ளன. 













813.   

கரண்டம் ஆடு பொய்கையுள்*  கரும் பனைப் பெரும் பழம்,* 
புரண்டு வீழ வாளை பாய்*  குறுங்குடி நெடுந் தகாய்,*
திரண்ட தோள் இரணியன்*  சினங்கொள் ஆகம் ஒன்றையும்,* 
இரண்டுகூறு செய்து உகந்த*  சிங்கம் என்பது உன்னையே   (2)



1470.   

மான் ஏய் நோக்கு நல்லார்*  மதிபோல் முகத்து உலவும்* 
ஊன் ஏய் கண் வாளிக்கு*  உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
கோனே! குறுங்குடியுள் குழகா!*  திருநறையூர்த் 
தேனே*  வரு புனல் சூழ்*  திருவிண்ணகரானே      




1800.   

வாழக் கண்டோம்*  வந்து காண்மின், தொண்டீர்காள்,*
கேழல் செங்கண்*  மா முகில் வண்ணர் மருவும் ஊர்,*
ஏழைச் செங்கால்*  இன் துணை நாரைக்கு இரை தேடி,* 
கூழைப் பார்வைக்*  கார்வயல் மேயும் குறுங்குடியே. 



3006. 

நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச் 
செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,* 
எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?




ஸ்ரீ  நம்பி நாராயண பெருமாள் திருவடிகளே சரணம் ...


தொடரும் ....




அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛

No comments:

Post a Comment