17 October 2023

அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

  நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

 நவராத்திரி  இரண்டாம் நாள். 

மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி இரண்டாம்  நாளில்   அன்னை மீனாட்சி  அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில் காட்சி தருகிறாள்.....




அர்ஜுனன் பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி  கடும் தவம் செய்தான்.

 அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க  துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான்.

சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக்கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான்.

அந்த  பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. 

விற்போரில் அர்ஜுனின் வில்  முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும்  விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள்.

சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் பாத தீட்சை அளித்தார்.பின்  சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்து அருளினார். 

 இன்று அன்னை   மீனாட்சியை பாசுபதம் அருளிய கோலத்தில்  தரிசனம் தருகிறாள் .













மதுராபுரி அம்பிகை மாலை  

- குலசேகர பாண்டியன் அருளியது - 


நாள் கொண்ட கொங்கைத் துணையும், பொன் மேனியும், நஞ்சு அளித்த

வாள் கொண்ட நாட்டமும், தொண்டைச் செவ் வாயும், மருங்கு உடுத்துத்

தோள் கொண்ட செம் பட்டும், முத்து ஆரமும் கொண்டு தோன்றி எனை

ஆள் கொண்ட நாயகியே! மதுராபுரி அம்பிகையே! 2.


கரும்பும், கணை ஐந்தும், பாச அங்குசமும், கைக் கொண்டு அடியேன்

திரும்பும் திசை தொறும் தோற்று கண்டாய் – இசை தேக்கு மணிச்

சுரும்பு உண்ட காவியும், சோதி நிலாவும், துளிரும் சற்றே

அரும்பும் கனம் குழலாய்! மதுராபுரி அம்பிகையே! 3.





தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

No comments:

Post a Comment