24 October 2023

ஸ்ரீ பூதத்தாழ்வார்

 ஸ்ரீ பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று .... ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...











பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ் சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே

எழில்  ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே

பொன்புரையும்  திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணை இப் பூதலத்தில் வாழியே  !





பிறந்த ஊர் - மகாபலிபுரம்

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்   - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை   - புதன்

எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள்  - 100

சிறப்பு     -  குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

மஹாவிஷ்ணுவின் கதையான கெளமோதகியின் அம்சமான பூதத்தார் கடல்மல்லையில் (மாமல்லபுரம்), கடலுக்கருகில் உள்ள குளக் கரைத் தோட்டத்தில் ஒரு குருக்கத்தி (நீலோத்பவ) மலரில் அவதரித்தார். 


இவர் திருமாலையே எந்நேரமும் நினைத்து, அவர் கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டே-வேறு எதிலும் நாட்டமில்லாமல் , ஒரு அசாதாரண மனிதராக இருந்ததால்,
பூதத்தாழ்வார் என்றழைக்கப்பட்டார்.


வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள்.


எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால், பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும், பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. 

அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமை  செய்யப் பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்  பெரியவர்கள் வாக்கு.

 இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.





ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி

         

   46

பயின்றது அரங்கம், திருக்கோட்டி,*  பல் நாள்-
பயின்றதுவும்*  வேங்கடமே பல்நாள்,*  - பயின்றது-
அணி திகழும் சோலை*  அணி நீர் மலையே* 
மணி திகழும் வண் தடக்கை மால். 

2227  

          

   47

மாலை அரி உருவன்*  பாதமலர் அணிந்து,* 
காலை தொழுது எழுமின் கைகோலி,*  - ஞாலம்-
அளந்து, இடந்து, உண்டு, உமிழ்ந்த*  அண்ணலை, மற்று அல்லால்*
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து.   

2228

          

   48

உணர்ந்தாய் மறை நான்கும்*  ஓதினாய் நீதி* 
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே!*  - மணந்தாய் போய்-
வேய் இரும் சாரல்*  வியல் இரு ஞாலம் சூழ்,* 
மா இரும் சோலை மலை.
2229

          

   49

மலை ஏழும்*  மா நிலங்கள் ஏழும் அதிர* 
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்,*  - முலை சூழ்ந்த-
நஞ்சு உரத்துப் பெண்ணை*  நவின்று உண்ட நாவன் என்று*
அஞ்சாது என்நெஞ்சே! அழை. 

2230  

          

   50

அழைப்பன் திருமாலை*  ஆங்கு அவர்கள் சொன்ன,*
பிழைப்பில் பெரும் பெயரே பேசி,*  - இழைப்பு அரிய-
ஆயவனே! யாதவனே!*  என்றவனை யார் முகப்பும்,*
மாயவனே என்று மதித்து.  

2231

          

   51

மதிக் கண்டாய் நெஞ்சே!*  மணிவண்ணன் பாதம்,* 
மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை,*  - மதிக் கண்டாய்- 
பேர் ஆழிநின்று*  பெயர்ந்து கடல் கடைந்த*
நீர் ஆழி வண்ணன் நிறம்.       

2232

          

   52

நிறம் கரியன் செய்ய*  நெடு மலராள் மார்வன்,* 
அறம் பெரியன் ஆர் அது அறிவார்?*  - மறம் புரிந்த-
வாள் அரக்கன் போல் வானை*  வானவர் கோன் தானத்து,*
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி.       

2233 

          

   53

நெறியார் குழல் கற்றை*  முன்நின்று பின் தாழ்ந்து,*
அறியாது இளங் கிரி என்று எண்ணி*  - பிரியாது- 
பூங்கொடிக்கள் வைகும்*  பொரு புனல் குன்று என்னும்*
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு.         

2234






உபதேசரத்தினமாலை


6.   
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்







ஸ்ரீ பூதத்தாழ்வார்  திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..



அன்புடன்
அனுபிரேம்...


No comments:

Post a Comment