08 December 2023

7. மேல்கோட்டை கல்யாணி தீர்த்தத்தின் மஹிமை

 மேல்கோட்டை கல்யாணி தீர்த்தம்  -




முந்தைய பதிவுகள் 





6.சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்

முந்தைய பதிவில்  தொண்டனுர் கெரையில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்மர்  தரிசனமும், சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதார தரிசனமும் கண்டோம்.


இன்று மேல்கோட்டையில்  உள்ள கல்யாணி தீர்த்தம் பற்றி காணலாம். 


இந்த அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித் தருகிறது.

ஈஸ்வர சம்ஹிதையின்படி, பகவான் தனது வராஹ அவதாரத்தில் பூமியை பிரபஞ்சக் கடலில் இருந்து தூக்கியபோது, அவரது உடலிலிருந்து சிதறிய நீர்த் துளிகளிலிருந்து கல்யாணி குளம் உருவானது.

மத்ஸ்ய புராணத்திலிருந்து, பகவான் விஷ்ணுவின் சேவகரான கருடன், இப்பிரபஞ்சத்தினுள் உள்ள விஷ்ணுவின் திருத்தலமான ஸ்வேத-தீபத்திலிருந்து வெள்ளை நிற களிமண்ணைக் கொண்டு வந்து இக்குளத்தை வடிவமைத்தார்.

இங்குள்ள கல்யாணி தீர்த்தத்திலிருந்து 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டை யோகநரசிம்மரைத் தரிசிக்கலாம்.

மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு வருவதாக ஐதீகம்.

தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், இலட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன.








கல்யாணி தீர்த்தத்தின் மஹிமை

ஆதி வராஹன் ஸ்ரீ பூமிப்பிராட்டியை எடுத்து வந்த பொழுது அந்த சிரமத்தால் திரு மேனியில் உண்டான வியர்வையானது -கல்யாணி தீர்த்தமாய் பரிணமித்தது –

ஸ்நாந மாத்ரத்தால் எல்லாருடைய பாவத்தையும் போக்கும் கங்கை எல்லா தீர்த்தங்களோடும் சேர்ந்து வந்து தன்னுடைய சகல பாபங்களையும் போக்கிக் கொள்வதற்காக வருஷம் தொறும் பால்குன மாசத்தில் இந்த கல்யாணி தீர்த்தத்தில் வாசம் செய்கிறாள் –

பின்னும் இந்தத் தீர்த்தத்தின் கரையிலே பண்ணின தபஸ் தானம் முதலான புண்ய கார்யங்கள் எல்லாம் இதர புண்ணிய க்ஷேத்ரங்களில் பண்ணுவதை விட மிகுதியான பலன்களைக் கொடுக்கும் –










ஸூ சரித உபாக்யானம்  --

வயது முதிர்ந்த ஏழையான ஸூ சரிதன் என்னும் ஒரு அந்தணன் தீர்த்த யாத்ர பரனாய் இருந்தான் –

அவன் இந்த யாதவாத்ரியையும் கல்யாணி தீர்த்தத்தையும் பற்றிக் கேட்டது இல்லை –

இரண்டு பிள்ளைகளுடனும் பத்னியுடனும் கங்கா ஸ்நானத்துக்குச் சென்றான் –

ஆனால் கங்கா நதி கண்ணுக்கு இலக்காக வில்லை -கங்கையில் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தவர்கள்

இது தான் கங்கை -என்று சொன்னாலும் கங்கை அவனுக்குத் தென் படாததால் ஸூ சரிதன் மிகவும் வருந்தினான் –

அப்பொழுது ஒரு பெண் வந்து ஐயா அந்தணரே-கல்யாணி தீர்த்தத்தில் குளித்திருப்பீரா என்று கேட்க –

ஸூ சரிதன் அந்த பெயரையே கேட்டு இருந்தது இல்லையே என்றான் –

அங்கே சென்று ஸ்நானம் செய்து விட்டு வாரும் என்றாள் அந்தப்பெண் –

அந்தணர் -எனக்கு அங்கே செல்ல சக்தி இல்லை -அப்படியே சென்றாலும் மறுபடியும் இங்கே திரும்பி வர முடியும்

என்கிற நம்பிக்கையும் இல்லை -என்ன

அந்தப்பெண்ணும் -ஆனால் கல்யாணி என்று நீங்கள் நால்வரும் மூன்று முறை அனுசந்தானம் செய்து

இங்கேயே கங்கையில் ஸ்நானம் செய்யுங்கோள்-என்றாள் –

இப்படி கன்யா ரூபமாகக் கங்கையின் வார்த்தையைக் கேட்ட பிறகு தான் அந்த அந்தணனுக்கு கங்கா நதி கண்ணுக்கு இலக்காயிற்று –

மூன்று தரம் கல்யாணி என்று சொல்லி ச பரிகரமாக கங்கையில் மூழ்கினான் ஸூ சரிதன் –

எழுந்து இருந்து பார்த்ததும் கல்யாணியாய் இருந்தது –

அங்கு இருந்தவர்கள் தீர்த்தத்தில் இருந்து எழுந்து வரும் நால்வரையும் பார்த்து ஆச்சர்யத்தாலே அவர்கள் வரலாற்றைக் கேட்டார்கள் –

ஸூ சரிதன் நடந்த விஷயம் எல்லாவற்றையும் சொல்லி இது என்ன இடம் என்ன தீர்த்தம் என்று கேட்க –

இது யாதவாத்ரி -கல்யாணி தீர்த்தம் -என்று அவர்கள் சொல்ல –

அந்த தீர்த்தத்தின் மஹிமையைக் கண்டும் கேட்டும் விஸ்மிதராய்க் கொண்டு ஸூ சரிதனும் அவன் பார்யா புத்திரர்களும்

அங்கேயே நித்ய வாசம் செய்து கொண்டு இருந்தார்கள்


யாதவாத்ரியில் ஸூ சரிதனுக்கு மூன்றாவது பிள்ளை பிறக்க -நாராயணன் என்று திரு நாமம் சாற்றினான் –

குழந்தையின் ஏழு எட்டு வருஷங்களுக்கு உள்ளாக அந்த தேசத்தில் ஷாமம் ஓன்று ஏற்பட்டது –

கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் பத்னியுடைய நிர்பந்தத்துக்கு இணங்கி ஸூ சரிதன் இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு

தமிழ் நாட்டு அரசனைப் பார்க்கப் போனான் -நான்கு ஆறு மாச காலம் காத்து இருந்து நகர வாசத்தின் கஷ்டத்தை எல்லாம் அனுபவித்து

கடைசியில் பெரிய பிரயத்தனம் செய்து அரசனைப்பார்த்து கொஞ்சம் த்ரவ்யத்தை வாங்கிக் கொண்டு திரும்பினான் –

யாதவகிரியில் ஸூ சரிதனின் மூன்றாவது மகன் நாராயணன் -அம்மா மிகவும் பசிக்கிறது -எனக்குக் கொஞ்சம் பிரசாதம் கொடு –

என்று தாயைக் கேட்டான் -அவள் ஒரு பாத்திரத்தில் பிரசாதம் கொடுத்தாள் –

இது பகவானுக்கு அமுதம் செய்யப்பட்டது அன்று என்று சொல்லி தான் சாப்பிடாமல் திரு நாராயணன் திரு முன்பே சமர்ப்பித்து

பக்தியுடன் நீ இதை அமுது செய் என்று சொல்லிக் கொண்டு வெளியிலே நின்று இருந்தான் –

திரு நாராயணன் பிராட்டியோடே கூட வந்து பிரசாதத்தை அமுது செய்து விட்டான் –


குழந்தை வெறும் பாத்திரத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷத்துடன் தாய் அருகே சென்று –

அம்மா நீ கொடுத்த பிரசாதத்தை பகவான் அமுது செய்து விட்டார் -எனக்கு மிகவும் பசிக்கிறது -வேறு பிரசாதம் கொடு என்று கேட்டான் –

அதற்கு அவள் -அர்ச்சா மூர்த்தியான பகவான் அமுது செய்வானா -பூனைக்குட்டி சாப்பிட்டு இருக்கும் –

இந்த ஷாமத்தில் இப்படிச் செய்தால் மீண்டும் உனக்குத் தர முடியுமா -பிச்சை எடுத்துச் சாப்பிடு போ -என்று சொல்லிக்

கையில் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினாள்-

அக் குழந்தை அங்குள்ள வீடுகளுக்கு எல்லாம் போனான் -அவன் பிச்சைக்காக எங்கு எங்கு போனானோ

அந்த அந்த க்ருஹங்களில் பிராட்டியே வந்து பிச்சையாக பிரசாதத்தைக் கொடுத்தாள் –

குழந்தை தன் அகத்திலே போய் தாய் கையிலே தான் சம்பாதித்த பிக்ஷையைக் கொடுத்தான் –

உடனே அவை ரத்னங்களாக மாறின -அதைப் பார்த்த தாய்க்கு ஆசை பிறந்தது –


மறுபடியும் மறுபடியும் அனுப்பினாள் –இப்படி எட்டுத் தடவை தன் பிள்ளையை பிக்ஷைக்கு அனுப்பினாள் –

உலகிற்கு எல்லாம் தாயான பிராட்டி ஏழு தடவை ரத்ன பிக்ஷை கொடுத்து-எட்டாவது தடவையில் அன்ன பிக்ஷையாகக் கொடுத்தாள் –

இருவரும் அன்னத்தைச் சாப்பிட்டு திருப்தி அடைந்தார்கள் -ஏழு தரம் கிடைத்த ரத்ன பிக்ஷையாலே பிறவாத திருப்தி

இந்த அன்ன பிக்ஷை – பிரசாதத்தாலே – பிறந்தது –

இதுவரையிலும் கவலை இல்லாமல் இருந்த இவர்கள் தனம் கிடைத்ததும் கொஞ்சமும் உறங்க வில்லை –

அந்த தனத்தையே காத்து இருந்தார்கள் -அவ்வளவில் அரண்மனையில் இருந்து

ஸூ சரிதன் கொஞ்சம் த்ரவ்யத்தை எடுத்து க் கொண்டு தன் இரண்டு பிள்ளைகளுடன் வரும் பொழுது வழியில்

திருடர்கள் அவனை அடித்துக் கையில் இருந்ததை எல்லாம் பறித்துக் கொண்டு போனார்கள் –

அப்பொழுது ஸூ தர்சன் திரு நாராயண புரம் திவ்ய தேசத்தில் இருந்து புருஷோத்தமனான நாராயணன் கொடுக்கும்

பரம புருஷார்த்தத்தை விட்டு அனர்த்தத்தை விளைவிக்கும் அர்த்தத்தை ஆசைப்பட்டு புருஷ அதமனான மானிடனை ஆஸ்ரயித்தேனே –

நரக வாசமாகிற நகர வாசத்தைப் பண்ணினேனே-எனக்கு இந்த தண்டனை போதாது -என்று வருத்தப்பட்டுக் கொண்டு வந்து

வீட்டில் பார்த்த போது எல்லாம் ரத்னமயமாக இருக்க -குழந்தையை கேட்டதற்கு -குழந்தை அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லவே –

நிர்ஹேதுகமான பகவானுடைய கடாக்ஷத்தை ஆச்சர்யத்துடன் நினைத்து நினைத்து அந்தப் பணத்தாலே

பகவத் பாகவத கைங்கர்யத்தைப் பண்ணா நின்றான் –


அப்படி நித்ய ததீயாராதனம் செய்யும் இவனுடைய ஐஸ்வர்யத்தைக் கண்டு -சில திருடர்கள் -இவற்றைப் பறிக்க வேண்டும்

என்று வைஷ்ணவ வேஷத்தைப் பூண்டு கல்யாணி தீர்த்தத்தில் ஸ்நானத்தை நித்யமும் செய்து கொண்டு

பன்னிரண்டு திருமண் காப்பையும் சாத்தி -துளசி நளினாக்ஷ மாலைகளையும் தரித்து திரு நாராயணனை

தினமும் சேவித்துக் கொண்டு வந்தார்கள் -இப்படி ஸூ சரிதன் திரு மாளிகையில் பாகவத ஸ்ரீ பாத தீர்த்தத்தையும்

பகவத் பிரசாதத்தையும் ஸ்வீ கரித்துக் கொண்டு -ஐஸ்வர்யத்தை அபகரிக்க சமயம் பார்த்திருந்த திருடர்களுக்கு –

இந்த சத் சங்கத்தாலும் நல்ல வேளையினாலும்-கர்மம் கழிந்து –நல்ல ஞானமும் -ஞானத்தால் பச்சாதாபமும் பிறந்து –

ஸூ தரிசனை தண்டனிட்டு -உம்முடைய பணத்தைப் பறிக்க வந்த மகா பாபிகள் நாங்கள் –

எங்களுடைய பாபத்திற்குத் தகுதியாக ப்ராயச்சித்தத்தை நியமித்து -எங்களைக் காப்பாற்ற வேண்டும் -என்று பிரார்த்தித்தார்கள் –

அப்பொழுது ஸூ தரிசன்-தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்னும்படி திரு நாராயணன் திருவடிகள் என்கிற

அழியாத செல்வம் தான் என்னுடைய ஐஸ்வர்யம்

அது யாராலும் திருட முடியாது -என்று ஞான உபதேசம் செய்து -அவர்களுக்கு எல்லாம் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அனுக்ரஹம் செய்தான் –

இப்படி திருடர்களுக்கே மோக்ஷம் கிடைத்த பொழுது ஸூ சரிதனுக்கும் பகவத் அபிமுக்யம் உள்ளவர்களுக்கும் சொல்ல வேண்டா விறே-









எங்கள்  பயணத்தின் பொழுது இங்கு சிறிது நேரம் பொறுமையாக அமர்ந்து இந்த வண்ண விளக்குகளில் ஒளிரும் கல்யாணி தீர்த்ததின் அழகை கண்டு ரசித்தோம். 


திருவாய்மொழி - ஆறாம் பத்து 

6- 9 ஆழ்வார் எம்பெருமானைக்  கூப்பிடுதல் 


நீராய் நிலனாய்*  தீயாய் காலாய் நெடுவானாய்,* 

சீரார் சுடர்கள் இரண்டாய்*  சிவனாய் அயனானாய்,* 

கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி*  கொடியேன்பால் 

வாராய்,*  ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 

3539




தொடரும் ....




அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛


1 comment:

  1. கல்யாணி தீர்த்தத்தின் மகிமை அறிந்தோம். வண்ணவிளக்குகளின் ஒளியில் அழகாக மிளிர்கிறது.

    ReplyDelete