9.தூமணி மாடத்து
வீடு முழுக்க விளக்கு எரிய பஞ்சணை மீது படுத்துறங்கும் மாமன் மகளே! தாழ்ப்பாளை திறந்து விடு, அவளுடைய தாயைப் பார்த்து, உன் மகள் ஊமையா? செவிடா? மீளா உறக்கம் கொண்டாளா? நாங்கள் மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று ஆயிரம் நாமங்களும் சொல்லி விட்டோம். அவள் எழுந்திருக்கவில்லையே.
ஒன்பதாம் பாசுரம் - இதில் எம்பெருமானே உபாயம் என்ற விச்வாஸத்துடன், எம்பெருமானுடன் சேர்ந்து பல ரஸங்களை அனுபவிக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் ஸீதாப் பிராட்டி ஹனுமானிடம் “ஸ்ரீராமனே வந்து என்னைக் காப்பார்” என்று உறுதியுடன் இருந்ததைப் போலே இருப்பவள்.
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்
இயற்கையிலே தோஷம் இல்லாத ரத்னங்களால் இழைக்கப்பட்ட மாளிகையில்,
சுற்றிலும் மங்கள விளக்குகள் ஒளிவிட,
வாஸனை மிக்க புகை மணம் வீச,
ஸௌகரியமான படுக்கையின் மேல் துயில்பவளான மாமன் மகளே!
மாணிக்கக் கதவுகளின் தாள்களைத் திறந்து விடு.
மாமியே! நீங்கள் உங்கள் மகளைத் துயிலெழுப்புங்கள்.
உங்கள் மகள் வாய் பேசாத ஊமையா? அல்லது காது கேளாத செவிடியா? அல்லது களைப்பாக இருக்கிறாளா? காவலில் வைக்கப்பட்டாளா? நெடுநேரம் தூங்கும்படி மந்த்ரத்தால் கட்டப்பட்டாளா?
நாங்கள் மாமாயன் (ஆச்சர்யமான செயல்கள உடையவன்), மாதவன் (லக்ஷ்மீபதி), வைகுந்தன் (ஸ்ரீவைகுண்டநாதன்) என்று எம்பெருமானின் திருநாமங்கள் பலவற்றைச் சொல்லிவிட்டோம். இருந்தும் அவள் எழவில்லையே!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment