பதினான்காம் பாசுரம் -- இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய்
எங்களை முன்னதாக வந்து எழுப்புவதாக வாயாலே சபதம் செய்த பரிபூர்ணையே!
வெட்கமற்றவளே! நன்றாகப் பேசக் கூடியவளே!
உங்கள் புழைக்கடையில் இருக்கும் தோட்டத்தில் இருக்கும் குளத்தினுள் செங்கழுநீர் புஷ்பங்கள் மலர்ந்து கருநெய்தல் புஷ்பங்கள் குவிந்துகொண்டன பார்!
காவி உடையை அணிந்தவரும் வெளுத்த பற்களையும் உடைய தபோ வேஷத்தை உடைய ஸந்யாஸிகளும் தங்களுடைய தெய்வ ஸந்நிதிகளில், சங்கு ஊதுகைக்காகப் போகின்றனர்.
திருவாழியையும் திருச்சங்கையும் அழகாக தரிக்கும் பெரிய கைகளை உடையவனாய்,
அழகிய செந்தாமரைக் கண்களை உடையவனான ஸர்வேச்வரனை பாடுவதற்காக எழுந்திரு.
மார்கழி மாதம் பதினான்காம் நாள் பரமபத நாதர் சந்நிதியில்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ,
உற்சவர் - சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் திருக்கோலத்தில்

வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இன்றைய திருப்பாவை பாசுரமும், அதன் விளக்கமும் எப்போதும் போல் அருமை. ஒவ்வொரு பாசுரத்திற்கும், நன்றாக பொருளுணர்த்தி வருகிறீர்கள் . படிக்கும் போது மனதிற்குள் மகிழ்ச்சி வருகிறது.
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ரங்கத்து உற்சவரை சங்கு சக்கர கோலத்தில் தரிசித்துக் கொண்டேன். கோதை நாச்சியாரின் பாதம் பணிந்து அனைவரையும் நலமுடன் வைத்தருள வேண்டிக் கொண்டேன்.
தங்கள் அழகான குரலும் இனிமை. இதுநாள் வரை படிக்காமல் விட்ட பாசுர பதிவுகளை இன்று ஒருசேர படித்து மகிழ்வடைந்தேன்.
தங்களுக்கு நாளைய தினமாகிய வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துகள். தினமும் தவறாமல் இறைநாமம் சொல்லும் உங்களுக்கு இறைவன் தன் நல்லாசிகளை குறைவில்லாது தந்தருள பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.