04 December 2025

திருமங்கையாழ்வார் - கார்த்திகையில் கார்த்திகை

  கார்த்திகையில் கார்த்திகை ....திருமங்கை ஆழ்வார் அவதார நன்நாள் இன்று !












திருமங்கையாழ்வார்  வாழி திருநாமம்!



கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே

காசினியில் ஒண் குறையலூர்க் காவலோன் வாழியே

நலந்திகழ் ஆயிரத்து எண்பத்துநாலு உரைத்தோன் வாழியே

நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே

இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே

இம்மூன்றில் இருநூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே

வலந்திகழும்  குமுதவல்லி மணவாளன் வாழியே

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .




திருமங்கையாழ்வார் 

பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில்)

தந்தை              : ஆலிநாடுடையார்

தாய்                  : வல்லித்திரு அம்மையார்

பிறந்த காலம்   : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்

நட்சத்திரம்       : கார்த்திகை (பவுர்ணமி திதி)

கிழமை             : வியாழன்

அம்சம்              : திருமாலின் சாரங்கம் என்ற வில்லின் அம்சம் 

அருளியவை    :பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம்,    திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய  திருமடல், சிறிய திருமடல்.


திருமங்கை ஆழ்வார் வைபவம்-

திருமாலின் வில்லான ஸார்ங்கத்தின் அம்சமாய், சோழ நாட்டில் திருமங்கை என்னும் பகுதியில், திருவாலி என்ற (இப்போது, திருநகரி என்று வழங்கப்படுகிறது) திவ்யதேசத்தின்  அருகே உள்ள திருக்குறையலூரில் கள்ளக்குடியில், கலியுகத்தில் 398ஆவதான நள வருடத்தில் பௌர்ணமி திதி அன்று, வியாழக்கிழமை, கிருத்திகை நட்சத்திரம் ஆகியவை பொருந்திய கார்த்திகை மாதத்தில் ஒருவர் அவதரித்தார்.  சோழ அரசனின் சேனைத் தலைவர்களில் ஒருவருக்கு மகனாகப் பிறந்த இவர் "நீலன்" என்று நிறம் கொண்டு பெயரிடப்பட்டார்.  

குடிப்பிறப்புக்கு (தோன்றிய குலம்) ஏற்றவாறு, போர்த் தேர்ச்சி பெற்று அரசனுக்காகப் பல போர்களில் வெற்றி பெற்று, மகிழ்வுற்ற  அரசனால் திருமங்கை நாட்டின் அரசனாக "பரகாலன்" என்ற பெயருடன் மகுடம் சூட்டப்பட்டார்  சிற்றரசன் என்ற முறையில் சோழ அரசனுக்குக் கப்பம் (வரி) செலுத்தி வந்தார்.

  அந்நாட்டில் திருவெள்ளக்குளம் என்னும் திருப்பதியிலுள்ள தாமரைப் பொய்கையில் நீராட வந்த தேவ மாதர்களில் ஒருத்தி, மற்றவர்களை (தேவ கன்னிகைகள்)  விட்டு மனித உருக்கொண்டு, குமுத மலர் கொய்து (பறித்து) நின்றாள். அப்போது அந்த வழி வந்த, மலடனான வைணவ வைத்தியன் ஒருவனைத் தன்னைப் பாதுகாக்க வேண்டினாள்.  அவனும் அவள் கூறியதை ஏற்றுக்கொண்டு, அவளைத் தன வீட்டிற்கு அழைத்துச் சென்று "குமுதவல்லி" என்று பெயரிட்டு வளர்த்தான். 

ஒற்றர்கள் மூலம் குமுதவல்லியின் சிறப்பினையும் அழகையும் பற்றி அறிந்த "திருமங்கை" மன்னன், வைத்தியனிடம் சென்று அவளைத் தனக்குத்  திருமணம் செய்து தருமாறு வேண்டினார். 

   குமுதவலல்லியோ, "பஞ்சஸம்ஸ்காரம்" (ஸமாஸ்ரயனம்) என்ற ஐந்து வகைச் சிறப்புடைய வைணவர் ஒருவரைத் தான், தன் துணைவனாக ஏற்றுக்கொள்வேன் அன்றி, மற்றோவருக்குத் துணையாகமாட்டேன்  என்று மறுத்துவிட்டாள். 


திருநறையூருக்குச் சென்று அந்த ஊரில் கோயில் கொண்டுள்ள "நம்பி"  எம்பெருமானிடமிருந்து (திருநறையூர் நம்பி) , திருவாழி திருச்ச்சங்கு ஆகியவற்றைத் தன் தோள்களில் பொறித்துக்கொண்டு, திருக்கண்ணபுரம் என்னும் திவ்ய தேசத்தில் கோயில் கொண்டுள்ள பெருமானிடம் "மந்திர" உபதேசம் பெற்றும், பன்னிரு (12) திருமண்காப்புகள் அணிந்து, திருமங்கை மன்னன் குமுதவல்லியிடம் மீண்டும் சென்று, தன்னை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். 

அப்போது, 1008 திரு வைட்டணவர்களுக்கு (ஸ்ரீ வைஷ்ணவர்) நாள்தோறும், ஓராண்டு காலம் அமுது செய்வித்து (உணவளித்து) , அவர்கள் உண்ட மிச்சத்தை உண்டு, அவர்கள் திருவடிகளை விளக்கிய (கால்களை அலம்பி) நீரை உண்டு வாழ்ந்தால் தான், மங்கை மன்னனை மணம்புரிய ஒத்துக் கொள்வதாக குமுதவல்லி கட்டளை இட்டாள்.

அவளைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசையால், திருமங்கை மன்னன் அதற்கும் சம்மதித்து, உறுதி அளிக்க திருமணம் நிறைவேறியது.    "மங்கை மடம்" என்ற இடத்தில், வைணவர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்து,  பெருந்தோட்டம் என்ற இடத்தில் வாழை முதலிய காய் கனிகளுக்குத் தோட்டம் அமைத்து, திருமங்கை மன்னன் வைணவ அடியார்களின் பூசனையை (பூஜையை) சிறப்புற நடத்திவந்தார்  

இதற்காகப் பொருள் மிகவும் வேண்டியிருந்தமையால், திருமங்கை மன்னன் சோழ அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரியை செலுத்த முடியாமல் போனது.  அரசனின் ஊழியர்களிடம் தவணை கேட்டுத் தாமதித்ததால், அரசன் தன சேனைத்தலைவனை அனுப்ப, அவன் இவரைப் பிடிக்க முயற்சி செய்கையில், இவர், "ஆடல்மான்" என்ற தன் சிறந்த குதிரையின் மீது ஏறி, அவனைத் துரத்தி துரத்தி ஓடச் செய்தார்.  பிறகு, அரசனே சேனையுடன் நேரில் வந்து இவரை வளைத்துப் பிடிக்க, இவரும் முன்போல் அவர்களை எதிர்த்துப் போரிடத் தொடங்கினார்.

அதுகண்டு அரசன் சூழ்ச்சியால் இவர் வலிமையைப் பாராட்டுபவன் போல் இவரைத் தன் அருகில் அழைத்து, தன் அமைச்சனிடம் ஒப்படைத்து, வரிப்பணம் தந்தால்தான் இவரை விடுதலை செய்வேன் என்று கூறிச்சென்றான்.  "கச்சியம்பதி" (காஞ்சி தேவபெருமாள்) இவர் கனவில் தோன்றி, காஞ்சியில் செல்வம் கிட்டும் என்று கூற, இவரும் அமைச்சனிடம் கூறி, அவனுடன் சென்று, மீண்டும் அந்த எம்பெருமானாலேயே "வேகவதி" என்னும் ஆற்றங்கரையில் புதையலாய் இருந்த நிதி (செல்வங்கள்) காட்டப்பட்டு, நிதியைத் தோண்டி எடுத்தார். 

அந்தப் புதையலிலிருந்து கிடைத்த நிதியில், தான் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, மீதம் இருந்ததைக் கொண்டு, அடியார்களின் ததீயாராதனத்திர்க்குப் பயன்படுத்தினார். 

   அரசனும், "திருமங்கை மன்னன்" செய்யும் இந்த மகத்தான சேவையைப் பற்றி அறிந்து, அவர் செலுத்திய வரிப்பணத்தைத் திருப்பித்தந்து, அவர் செய்யும் சேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினான்.  இவற்றை எல்லாம் கொண்டு, அவர் தான் ஏற்றுக்கொண்ட சேவையைச் செய்து வந்தாலும், ஒரு கால கட்டத்தில், அவர் கையில் இருந்த நிதியெல்லாம் கரைந்துவிட, மேலும் அவர் செய்ய வேண்டிய சேவைக்கு நிதித்தேவை அதிகமாய் இருந்தது.  இதனால், அவர் தன் தோழர்களான "நீர்மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோலா வழக்கன்" என்ற நால்வரின் துணைகொண்டு, வழிப்பறி செய்து அடியார்களைப் பூசிக்க (அவர்களுக்கு உணவளித்து உபசரிக்க) பொருள் சேர்க்க  முயன்றார்.

இவருடைய அடியார்க்கடிமையைக் (அடியவர்களுக்குத் தொண்டு செய்யும் அடிமைத்தனம்) கண்டு அளவிலா இன்பமுற்ற எம்பெருமான், இவர்க்குத் தன் இன்னருளைக் காட்ட எண்ணி, திருமணக்கோலத்தில் சிறந்த, உயர்ந்தரக அணிகலன்களுடன் தானும் தன் மனையாளுமாக, இவர் வழிப்பறி செய்வதற்காகப்  பதுங்கி இருக்கும் வழியாக வந்தான். 

 திருமணங்கொல்லையில், திருவரசின் அடியில் பதுகியிருந்த "பரகாலர்" (திருமங்கை  மன்னன்) அவர்களைத் தன் தோழர்களைக் கொண்டு வழிப்பறி  செய்தார்.  அபோது, மணமகன் (எம்பெருமான்) காலில் இருந்த மோதிரம் கழற்ற முடியாமல் போக, பரகாலர் அதைக் கழற்ற, தன் பல்லால் கடித்து வாங்க, மணமகனான எம்பெருமான் இவரைப் பார்த்து, என்ன தைர்யம் உமக்கு என்று மெச்சும் (பாராட்டும்) வகையில், "மிடுக்கனோ நீர்" என்ற அர்த்தத்தில் இவருக்குக் "கலியன்" என்று பெயரிட்டான்.  


பெருமானிடம் வழிப்பறி செய்த பொருள்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு, அதைத் தூக்க முயன்ற பொது, மூட்டையின் கனம் மிகவும் அதிகமாக இருந்ததால், அவரால் அதைத் தூக்கமுடியாமல் போயிற்று.  இப்படி, மூட்டை தூக்கமுடியாமல் இருப்பதற்கு என்ன மந்திரம் செய்தாய்? என்று அவர் மணமகனை மிரட்டிக்கேட்டு, தன்  கையிலிருந்த வாளை வீசி மிரட்டினார்.

மணமகனான எம்பெருமான் மந்திரத்தைக் கூறுவதாக இவரை அருகில் அழைத்து, "பெரிய திருமந்திரம்" (ஓம் நமோ நாராயணாய) என்னும்  அஷ்டாக்ஷர மந்திரத்தை இவருக்கு உபதேசித்து, பெரிய திருவடியின் (கருடன்) மேல், பிராட்டியுடன் இவர்முன் தோன்றி அருளினான்.  பெருமானின் தரிசனம் கிட்டியபின்,  மெய்ஞானத்தைப் பெற்ற பரகாலர், எம்பெருமானை நோக்கி,

 "வாடினேன் வாடி வருந்தினேன்” என்று தொடங்கிப் பாசுரங்கள் இயற்றி, வடமொழி வேதங்கள் நான்குக்கு  ஒப்பான நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்களுக்கு  ஆறு அங்கங்கள் போன்று "(1) பெரிய திருமொழி, (2) திருக்குறுந்தாண்டகம், (3) திருவெழுக்கூற்றிருகை, (4) சிறிய திருமடல் (5) பெரிய திருமடல் மற்றும் (6) திருநெடுந்தாண்டகம்" ஆகிய ஆறு திவ்ய நூல்களை அருளி, "திருமங்கை ஆழ்வார்" என்ற திருநாமத்தைப்  பெற்றார்.  








*கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே !*

இன்று திருமங்கையாழ்வார் திருநக்ஷத்திரம். *ஆழ்வார்களில் செல்லப்பிள்ளை, கடைக்குட்டி நம் திருமங்கையாழ்வார்.

* வேறு எந்த ஆழ்வாருக்கும் இல்லாத ஒரு ஏற்றம் நம் கலியனான திருமங்கை மன்னனுக்கு ! 

அது என்னவெனில், பகவானின் திருவடியைத் தாயார் கூட பிடித்து சரணசேவைதான் செய்கிறாள். 

*ஆனால் நம் திருமங்கையாழ்வாரோ, பகவானின் திருவடியில் உள்ள மிஞ்சியை எடுக்க, தன் தொடை மீது அவர் திருவடியை வைத்து, 
தன் இருகையால் திருவடியைப் பற்றி, தன் வாயால் அவர் கால் விரலைக் கடித்தார் !*

உலகில் யாரும் இப்படி பரப்ரும்மத்தை கடித்து, ருசித்ததே இல்லை.

 ஆண்டாளும் கண்ணனின் வாயமுதம் எப்படி இருக்கும் என்று கேட்டாள், ஆனால் கண்ணனைக் கடித்ததில்லை. எத்தகைய பெரிய பாக்கியம் நம் திருமங்கைமன்னனுக்கு. 









பெரிய திருமொழி -  முதல்  பத்து 

1-1 வாடினேன் வாடி 

பெரிய திருமந்திரத்தின் மகிமை 
  



950

சேமமே வேண்டி, தீவினை பெருக்கி*  
தெரிவைமார் உருவமே மருவி* 
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்*  
ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்* 

காமனார் தாதை நம்முடை அடிகள்* 
 தம் அடைந்தார் மனத்து இருப்பார்* 
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*
 நாராயணா என்னும் நாமம்.  3



951

வென்றியே வேண்டி, வீழ் பொருட்கு இரங்கி*
  வேல்கணார் கலவியே கருதி* 
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்*
  என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*

பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட*  
பாழியான் ஆழியான் அருளே* 
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  
நாராயணா என்னும் நாமம்.  4













ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

8

பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
ஏதுபெருமை இன்றைக்கென்றியேல் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள்காண்
 
9
மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே! வாழ்த்து.
 


முந்தைய பதிவுகள் ...





ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!



அன்புடன்,
அனுபிரேம் 🌻🌻🌻

No comments:

Post a Comment