ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 9 ஆம் திருநாள் புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்)
ஆழ்வார்கள்
திருவேங்கடம், தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திருத்தலம்.
ஆழ்வார்கள் இந்த திருமலையைப் பற்றியும், வேங்கடவனைப் பற்றியும், பாசுரங்கள் சமர்ப்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு வகையில் வேங்கடவனின் மகிமைகளைக் கூறி இருப்பதை எழுத்துக்களில் அடக்கிவிட முடியாது.
திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு திருவேங்கடவனுக்கு மார்கழி மாதத்தில் சாத்தப்படுகிறது. ஆண்டாள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்களில் திருவேங்கடமும் ஒன்று.
மொத்தம் 202 பாக்களுக்கு மேல் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. வேங்கடவனுக்கு ஆழ்வார்கள் அருளிய மங்களாசாசன பாக்களை கீழே உள்ளவாறு காணலாம்.
1. பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி 10
2. பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி 11
3. பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி 19
4. திருமழிசையாழ்வார் – நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் 16
5. நம்மாழ்வார் 49
6. குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி 11
7. பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி 7
8. ஆண்டாள் 16
9. திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் 2
10. திருமங்கையாழ்வார் 61
ராமனுச நூற்றந்தாதி
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும், நிறை வேங்கடப் பொன்
* குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் *
உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணை மலர்த்தாள் *
என் தனக்கும் அது, இராமானுச! இவைஈந்து அருளே. (76)
எம்பெருமானரே, நிலை நின்ற பெரும் புகழும், அதிகமான நீர்பெருக்கும் நிறைந்துள்ள, திருவேங்கடம் என்ற பொற்குன்றமும், ஸ்ரீவைகுந்தமாகிய திருநாடும், கொண்டாடத்தக்க திருபாற்கடலும், தேவரீருக்கு எவ்வளவு ஆனந்தத்தை கொடுக்குமோ, அத்தனை இன்பங்களை தங்களுடைய ஒன்றுக்கு ஒன்று இணையான திருப் பாதங்கள், அடியேனுக்கும் விளைவிக்கும். அப்படிபட்ட திருவடிகளை அடியேனுக்கு தந்து அருள வேண்டும் என்று திருவரங்கத்து அமுதனார் வேண்டுகிறார்.
இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம் மாலிருஞ் சோலை என்னும் * பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர்,அவை தன்னொடு வந்து * இருப்பிடம், மாயன் இராமானுசன்,மனத்து, இன்று அவன் வந்து * இருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (106)
சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தலம், பரமபதமும், திருவேங்கட மலையும், திருமாலிருஞ்சோலையும் என்று சொல்வார்கள், இவைகளை இருப்பிடமாகக் கொண்ட சர்வேஸ்வரன் அந்த ஸ்ரீவைகுந்தம், திருமலை, திருமாலிருஞ்சோலை முதலியவற்றோடு எழுந்தருளி இருப்பது, எம்பெருமானின் திருவுள்ளத்தில் ஆகும். அந்த எம்பெருமானார் இப்போது ஆனந்தமாக வந்து எழுந்து அருளி இருப்பது, அடியேனுடைய உள்ளத்தில் ஆகும் என்று திருவரத்து அமுதனார் சொல்கிறார்.
அடியவர்கள்
அனந்தாழ்வான் ஸ்வாமி இராமானுஜரின் சிஷ்யர்;
அவர் இராமானுஜரின் வார்த்தைகளை ஏற்று, அவரிடம் “அங்கிருந்த அனைவரில் அனந்தாழ்வானே ஆண்பிள்ளை’ என்று பாராட்டினை பெற்று, திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்யும் பொருட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து சேர்ந்தவர். திருவேங்கடமுடையானும் அவரது கைங்கர்யத்தில் உவந்தவராய் அவரிடம் அன்பும் பரிவும் காட்டி வந்தார்.
ராமானுஜர் பரமபதம் அடைந்ததை (அவதார ஸமாப்த்தி ) ஒரு பக்தர் அனந்தாழ்வாரிடம் பகிர்ந்து கொண்டபோது, அனந்தாழ்வார் மிகவும் சோகம் அடைந்து சுமார் ஒரு வருட காலம் திருவேங்கடமுடையானுக்கும் கைங்கர்யம் எதுவும் செய்யாமல் வேதனையில் தவித்து வந்தார்.
திருவேங்கடமுடையான் அனந்தாழ்வாரிடம் தாமன்றோ தன்னுடைய இராமானுஜரை இழந்தது, அதற்காக தான் தான் வருத்தப்பட வேண்டும்.
அனந்தாழ்வாருக்கு எந்த குறையும் வராது என்று ஆறுதல் கூறி அவரை கைங்கர்யம் செய்ய அழைத்தார். அனந்தாழ்வாரும் திருவேங்கடமுடையானின் அழைப்பை ஏற்று அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். அதாவது அத்யயனோத்சவத்தில் ஒரு நாள், ராமானுஜ நூற்றுஅந்தாதியை செவி சாய்த்திட வேண்டும் என்பதாகும்.
திருவேங்கடமுடையானும் உகந்து, சடகோபன், கலியன் சொன்ன வார்தைகளை கேட்பதை போல், இராமானுஜரை பற்றிய வார்த்தைகளை நூற்று அந்தாதியில் கேட்போம் என்று அருள, கண்ணினும் சிறு தாம்பு சொல்லி முடித்த பிறகு அடுத்த நாள் இராமானுஜ நூற்று அந்தாதியும் வாசிக்க ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த நாள் இராமானுஜர் ஏற்படுத்திய தண்ணீரஅமுது வழி கைங்கர்யமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியார் ஸ்ரீ அனந்த சூரியார் என்பவருக்கும் தோதாத்திரி அம்மையார் என்பவருக்கும் திவ்ய குமாரராய் காஞ்சி மாநகரில் தூப்புல் என்ற திருத்தலத்தில், திருவேங்கடவன் திருக்கோவிலின் திருமணியின் அம்சமாக கி பி 1268 ஆண்டு புரட்டாசி மாதம் சரவண நக்ஷத்திரத்தில் ஒரு புதன் கிழமையில் அவதரித்தார். வேதாந்த தேசிகன் வேதங்களை, வேத நாதம் என கணீர் என்று எங்கும் ஒலிக்க செய்தார்.
மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை எழுந்தருளியுள்ளார். அவரின் ஆணையின்படி அவரது சிஷ்யர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் பொருட்டு ஸ்ரீ வேங்கடஸ்வர சுப்ரபாதத்தை அருளி செய்தார்.
இந்த சுப்ரபாதத்தினை அருளி செய்தவர் ஸ்ரீ அண்ணங்கராச்சார்யார் அல்லது பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமி அவர்கள். இவர் சுவாமி தேசிகனின் திருக்குமாரரிடம் கற்று பின் மணவாள மா முனிகளின் முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தவர்.
ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தில் நான்கு பகுதிகள் உள்ளன.
அவை சுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்), மங்களாசாசனம் (14 பாடல்கள்) ஆகும்.
ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ச்லோகம் :
“ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே |
ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் ||”
அதாவது ஸ்ரீவைகுண்டத்தில் நித்யனாக இருக்கும் எம்பெருமான், அவ்விருப்பிடத்தை வெறுத்து, தான் வானோர்க்கு மட்டும் தெய்வமில்லை; இந்தப் பூமியில் வாழ்பவர்க்கும் தெய்வம் என்பதை உணர்த்தும் வண்ணம், விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் நடுநாயகமாக இருக்கும் உயர்ந்த மலைகளையும், வராஹ புஷ்கரிணியையும் உடைய இடத்தை இருப்பிடமாகக் கொண்டான்.
வேங்கடேசன் என்ற திருநாமத்தையும் சார்த்திக்கொண்டான். இதனால் இந்த மலையானது திருவேங்கடமலை என்று பிரசித்திபெற்று திகழ்கிறது.
இப்படிப்பட்ட தயை உடைய திவ்யமான திருவேங்கடத்து எம்பெருமானுக்குப் பல்லாண்டு (வாழ்ச்சி) என்பது இந்த ச்லோகத்தின் அர்த்தம்.
தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருமலை கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சம காலத்தவர்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், பல தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
திருவேங்கட அனுபவத்தை இங்கு பகிர ஆரம்பித்து முடிக்க சிறிது கால தாமதம் ஆனாலும் இடையில் ஒரு முறை திரு வேங்கட தரிசனம் கிடைத்தது. அப்பொழுது திருவேங்கடவனை அலிபிரி வழியாக மழையோடு மலை வழியாக சென்று தரிசனம் செய்தோம்.
பல திருவேங்கட விஷயங்களை இங்கே பகிர்ந்த பின்,ஒன்று உறுதியாக புரிந்து கொண்டது, திருவேங்கட அனுபவத்தை சொல்லி முடிக்க முடியாது. இனி மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது எம்பெருமானின் அருளால் இன்னும் பல செய்திகளை அறிந்துக் கொள்வோம்.
அதுவரை தொடர்ந்து வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
1026
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும் *
சொல்லி நின்று பின்னரும் *
பேசுவார் தமை உய்ய வாங்கிப் *
பிறப்பு அறுக்கும் பிரான் இடம் **
வாச மா மலர் நாறு வார் பொழில் *
சூழ் தரும் உலகுக்கு எல்லாம் *
தேசமாய்த் திகழும் மலைத் *
திருவேங்கடம் அடை நெஞ்சமே! 9
1027
செங் கயல் திளைக்கும் சுனைத்*
திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி*
வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்க
வல்லார்கள்* தஞ்சமதாகவே*
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி*
வான்உலகு ஆள்வரே!
ஓம் நமோ வெங்கடேசாய !!
கோவிந்தா!! கோவிந்தா!!
அன்புடன்




No comments:
Post a Comment