02 December 2025

ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா

 ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-

ஸ்ரீரங்கம் கோவிலில்  "கைசிக ஏகாதசி" அன்று  365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு  இரவு முழுவதும் சாற்றப்படும். 

இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும்.  மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். 


நம்பெருமாக்கு   அர்ஜுன மண்டபத்தில் 365 வஸ்திரம் சாற்றுதல்  








கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று அழைப்பர். இந்த தினத்தன்று நம்பாடுவானின் கைசிக சரித்திரம் திருக்குறுங்குடியில் அரங்கேற்றுவது அனைவரும் அறிந்ததே.

இன்று நம்பெருமாள் இரவு முழுவதுமாக அர்ஜுன மண்டலத்தில் இருந்து பராசர பட்டரின் கைசிக புராணம் படிப்பை செவிமடுத்து கேட்பார்.

 கைசிக புராணம் படிக்கும்போது நம்பெருமாளுக்கு 365 போர்வைகள் சாற்றப்படும். ஒவ்வொரு போர்வைக்கும் ஓரு ஆரத்தி (365 ஆரத்திகள்) காட்டப்படும்.

துவாதசி அன்று அதிகாலை 4.30 மணியளவில் நம்பெருமாளுக்கு கீழப்படி வழியாக கற்பூர படியேற்றம் நடைறும். அப்போது அரையர்கள் தாளம் இசைக்க, நம்பெருமாள் அசைய, திருமுத்து குடை (ஆதிஷேஷன்) அதே திசையில் சுழல, சாமரமும் அசைய, திருஆலவட்டம் சுழல, சாத்தார ஶ்ரீவைஷ்ணவர்கள் பச்சை கற்பூரம் தூவ நம்பெருமாள் படியேற்றம் காணுவார்.

நம்பெருமாள் கற்பூரப் படியேற்ற ஸேவையின் தத்துவம்

கற்பூரம், சென்ற ஜன்மத்தில் எப்படி இருந்ததோ நமக்குத் தெரியாது, ஆனால் இந்த ஜன்மத்தில் , தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் குணத்தைப் பெற்று இருக்கிறது.

அதே போல் ஸ்ரீவைஷ்ணவர்களும் தங்களையே த்யாகம் செய்து (அதாவது கைசிக ஏகாதசிக்கு முன் தான் செய்த பாபங்களை (பழைய வாசனைகளை) நம்பெருமாளின் தரிசனத்தால் போக்கிக் கொண்டு, (புதிய மனிதனாக மாறி)  அதாவது புதிய வாசனை யாகிய கற்பூர நறுமணத்தை பெற்று (இந்தப் பிறவியில் உய்வடைதல்) பகவானாகிய ஸ்ரீமந்நாராயணனின் கைங்கர்யத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளவேண்டுமென்பதை அடியார்களுக்கு நினைவூட்டும் பொருட்டு நம்பெருமாள் கற்பூரப் படியேற்ற ஸேவை கண்டருள்கிறார்.


இதற்கு பிறகு கைசிக புராணம் வாசித்த பட்டருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியுடன் கைசிக ஏகாதசி நிறைவுபெறும்.









நம்பெருமாள் கைசிக ஏகாதசி  முடிந்து மூலஸ்தானம் திரும்புதல்
இன்று அதிகாலையில் 






அரங்கனின் கற்பூர படியேற்றம் காண ஒரு வருடம் காத்திருந்த விஜயரங்க சொக்கநாதர் 

அரசர் விஜயரங்க சொக்கநாதர் நாயக்க மன்னர். இவர் புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் பேரன்.

விஜயரங்க சொக்கநாதர் கைசிக ஏகாதசி சேவையை தரிசிப்பதற்குத் தனது குடும்பத்துடன் திருவரங்கம் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் பெருமாள் சந்தன மண்டபத்துக்குப் புறப்பட்டுவிட்டார். மனம் வருந்திய மன்னர், ஸ்ரீரங்கத்திலேயே ஒருவருடம் தங்கி அடுத்த ஆண்டு இந்த  சேவையைக் கண்டுகளித்தார். ஸ்ரீரங்கத்தில் இவர்களின் நினைவாக இரண்டாம் திருச்சுற்றில் இவர்களின் சிலைகள் இருக்கின்றன.

இவர் திருவரங்கம் கோயிலுக்கு சமர்ப்பித்த தங்க குடம் இன்று வரை உபயோகத்தில் உள்ளது.



பெரியாழ்வார் திருமொழி

4-8 எட்டாம் திருமொழி - மா தவத்தோன் 

திருவரங்கத்தின் பெருமை 



406

பெருவரங்கள் அவைபற்றிப்
      பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்கப் பொருது அழித்து இவ்
      உலகினைக் கண்பெறுத்தான் ஊர்
குரவு அரும்பக் கோங்கு அலரக்
      குயில் கூவும், குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே
      என் திருமால் சேர்விடமே     (5)



406

கீழ் உலகில் அசுரர்களைக்
      கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய
      கரு அழித்த அழிப்பன் ஊர்
தாழை- மடல் ஊடு உரிஞ்சித்
      தவள வண்ணப் பொடி அணிந்து
யாழின் இசை வண்டினங்கள்
      ஆளம் வைக்கும் அரங்கமே (6)
 

407

கொழுப்பு உடைய செழுங்குருதி
      கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களைப்
      பிணம் படுத்த பெருமான் ஊர்
தழுப்பு அரிய சந்தனங்கள்
      தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து
      அடிதொழும் சீர் அரங்கமே    (7)



ஓம் நமோ நாராயணாய நமஹ!!!!!

நம்பெருமாள்  திருவடிகளே சரணம்!!!!!



அன்புடன்
அனுபிரேம்💜💜💜

No comments:

Post a Comment