02 September 2018

கண்ணனை பாடேலோ ...









(18)
கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்

ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட

வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.

கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!




(19)
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்

ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்

பாய சீருடைப் பண்புடைப் பாலகன்

மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.


குழந்தை கண்ணபிரானின் நாவினை நல்ல மஞ்சளால் வழித்துவிட, அவன் வாயை அங்காந்திட்ட போது, யசோதை குழந்தையின் வாயினுள்ளே வையம் ஏழினையும் கண்டாள். அவ்வருங்காட்சியை, உடனிருந்த ஆயர்குலப் பெண்களிடம் யசோதை காட்டிய போது, அவர்கள், ''இவன் ஆயர்குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானுடப் பிள்ளையே அல்லன்; காண்பதற்கும், பெறுவதற்கும் அரிதான தெய்வமிவன்; எல்லாராலும் விரும்பத் தகுந்தவனும், மேன்மையான புகழும், சிறந்த குணங்களுமுடைய இந்த குழந்தை நம் குலத் தெய்வமான மாயோனே தான்" என்று கூறி பெரும் மகிழ்ச்சி கொண்டனர் ஆயர் குலப் பெண்கள்.





(20)
பத்து நாளும் கடந்த இரண்டாநாள்

எத்தி சையும் சயமரம் கோடித்து

மத்த மாமலை தாங்கிய மைந்தனை

உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.

கண்ணன் பிறந்து பன்னிரண்டாம் நாள் அந்தக் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்தத் திருவிழாவிற்காக எல்லா திசைகளிலும் கொடிகளும் தோரணங்களும் தாங்கிய வெற்றித் தூண்கள் நடப்பட்டிருக்கின்றன. அந்தத் திருவிழாவில் யானைகள் நிறைந்த கோவர்ந்தன மலையைத் தாங்கிய மைந்தனாம் கோபாலனை கைத்தலங்களில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர் ஆயர்கள்.





(21)

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.

'கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ இடுப்பை முறிக்கும் அளவிற்கு ஆடுகிறான். இறுக்கி அணைத்துக் கொண்டால் வயிற்றின் மேல் பாய்கிறான். தேவையான வலிமை இல்லாததால் நான் மிகவும் மெலிந்தேன் பெண்ணே' என்று யசோதைப் பிராட்டியார் தோழியிடம் முறையிடுகிறார்.





(22)
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை

மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தஇப்

பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே

செந்நெல் ஆர்க்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் நிலைத்து வாழும் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பிய நாரணன் திருவாய்ப்பாடியில் பிறந்த சரிதத்தை திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடுபவர்களுக்கு இறைவனைச் சிந்திக்கவும் அடையவும் தடையாக நிற்கும் பாவங்கள் நீங்கும்.



(பெரியாழ்வார் திருமொழி 1.2)






ஓம் நமோ நாராயணா 

கண்ணன் திருவடிகளே சரணம்..




அன்புடன்
அனுபிரேம்












6 comments:

  1. சிறப்பான வரிகளைத் தேர்ந்தெடுத்து இங்கே பகிர்ந்தது சிறப்பு.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இன்றே இரண்டாவது பதிவா? பலே... குழந்தைக் கண்ணன் ரசிக்க வைக்கிறான். ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையாக இருக்கிறது பதிவு அனு.
    பெரியாழ்வார் திருமொழி, ஸ்ரீ குலசேகராழ்வார் பாடல் எல்லாம் படித்து இன்புற்றேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. படங்கள், பாடல்கள், உரை அத்தனையும் அழகு. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. படமும் பாடல்களும் கொள்ளை அழகு :)

    ReplyDelete
  6. பாடல்களும், அதற்கான விளக்கமும், படங்களும் அழகு

    ReplyDelete