01 September 2018

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

கண்ணன் திருஅவதாரச் சிறப்பு












13.
வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்

கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.


அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் வாழும் கண்ணன் கேசவன் நம்பி திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்த போது, அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால், ஆயர்கள் ஒருவர் மீது பூசிய நறுமண எண்ணெயாலும் , ஒருவர் மீது ஒருவர் தூவிய வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளாலும் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது.








14.
ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்

நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்

பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று

ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.

திருவாய்ப்பாடியிலிருக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபருக்குத் திருக்குமரன் பிறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி.




15.
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்

காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்

ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு

வோணத் தானுல காளுமென் பார்களே.


எல்லா சீர்களையும் உடைய இந்த சிறு பிள்ளை கம்சனைப் போன்றவர்களிடம் இருந்து மறைந்து வளர்வதற்காக அந்தப் பெருமைகளை எல்லாம் பேணி/மறைத்து நந்தகோபர் இல்லத்தில் பிறந்தான். அப்போது அவனைக் காண்பதற்காக எல்லா ஆயர்களும் ஆய்ச்சியர்களும் திருமாளிகைக்குள் புகுவார்கள்களும் உள்ளே புகுந்து அவனைக் கண்டு வெளியே வருபவர்களுமாக இருக்கிறார்கள். புகுபவர்களும் புக்குப் போதுபவர்களும் ஒருவருக்கொருவர் கண்ணனின் பெருமைகளைப் பேசிக் கொள்கிறார்கள். 'இவனைப் போன்ற அழகுடைய ஆண்மகன் வேறு யாரும் இல்லை. இவன் திருவோணத்தானாகிய திருமாலால் அளக்கப்பட்ட மூவுலகங்களையும் ஆள்வான்' என்று சொல்கிறார்கள்.







16.
உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்

அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.



பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய், பால், தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள்.





(17)
கொண்ட தாளுறி கோலக் கொடுமழு

தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்

விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்

அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.


இந்த இடையர்கள் தாங்கி வந்த உறிகள் அவர்கள் கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. அவர்களது ஆயுதங்களான அழகிய கூர்மையான மழுவையும் மாடு மேய்க்கும் கோல்களையும் ஏந்தி வந்திருக்கின்றனர். பனைமரத்திலிருந்து பறித்து எடுத்த ஓலையால் செய்த பாயை இரவில் படுக்கப் பயன்படுத்திவிட்டு அதனையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். பறித்தெடுத்த முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களைக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட இடையர்கள் நெருக்கமாகக் கூடி கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக நெய்யால் ஆடினார்கள். 


(பெரியாழ்வார் திருமொழி 1.2)





அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!



அன்புடன்

அனுபிரேம்


7 comments:

  1. ஸ்ரீ பெரியாழ்வார் பாசுரம் அருமை.
    செங்கீரை பருவ பாடல் அருமை.
    கால்களில் பொற்சலங்கை ஒலிக்க ஒடிவரட்டும் கண்ணன் நம் வீடுகளுக்கு.
    அழகான படங்களும் பாடலும் நிறைந்த அருமையான பதிவு.

    ReplyDelete
  2. அழகிய தமிழ் அமுதத்துடன் பதிவு சிறப்பு.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அழகிய பாடல்களுடன் அழகான படங்களையும் பகிர்ந்து ஸ்ரீ கிருஷ்ணனின் பிறப்பை தெளிவான உரையாடல்கள் மூலம் விவரித்து விட்டீர்கள்.
    அமுதமாக இனித்தது தங்கள் பதிவு. அந்த இடத்தில் ஆயர்பாடிகளோடு நானும் கலந்து பகவான் பிறந்த வைபவத்தை கொண்டாடி மகிழ்ந்த உணர்வு வரப் பெற்றேன். மிகவும் அருமை.
    தங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. அமுதினும் இனிய திருப்பாசுரங்கள்...
    அழகழகான படங்கள்...

    வேறென்ன வேண்டும்!... அருமை.. அருமை..

    அன்பின் இனிய நல்வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
  5. சிறப்புப் பதிவு - சிறப்பான பதிவு.

    கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அழகிய பொருத்தமான படங்கள், தேர்ந்த வார்த்தைகள் கொண்டு சிறந்த உரை. மிக்க நன்றி.

    ReplyDelete