18 February 2020

மூன்று வகை களி...


வாழ்க வளமுடன் 


உடலை வலுவூட்டக் கூடிய 3 வகை களி...





1. ராகி களி(  கேப்பைக் களி, கேழ்வரகுக் களி )


 தேவையானவை
ராகி மாவு - 1 கப்
தண்ணீர் - 3 கப்
உப்பு

செய்முறை -

ஒரு பாத்திரத்தில் இருமடங்கு நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, மீதம் உள்ள நீரில் கரைத்து பின்  கொதி நீரில் சேர்த்து , கொஞ்சம் உப்பும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும். இது கொஞ்சம் இளகளாக இருக்கும் .

இன்னும் கெட்டியாக வேண்டும் என்றால் 2 .5 மடங்கு நீர் போதும் ..

     











இங்கு கர்நாடகாவில் நன்கு கெட்டியாக அரிசி சேர்த்து  செய்து... பின் அதை கெட்டியாக  உருட்டி வைத்து குழம்பு சேர்த்து உண்பார்கள். அதன் பெயர் ராகி மொத்தே .

எங்கள் வீட்டில் இளகளாக செய்து குழம்பு மற்றும்  வெல்லம்  சேர்த்து சாப்பிடுவோம் .



2. உளுத்தங்களி  -

 தேவையானவை

 தோல் உளுத்தம் பருப்பு  - 1/2 கப்
அரிசி - 3 ஸ்பூன்

 வெல்லம் - 1/4 கப்
தேங்காய் துருவியது
நல்லெண்ணெய்




செய்முறை -

அரிசி , உளுத்தம் பருப்பை  தனித்தனியாக வறுக்க வேண்டும் . பின் மிக்ஸ்யில் சேர்த்து பொடிக்கவும் .


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம்  சேர்த்து   கலக்கி  கொதிக்க வைக்கவும்  .பின்னர் அதனுடன் பொடித்த  மாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும் ...

தேங்காய் துருவல் ,  நல்லெண்ணெய் அல்லது நெய்  ஆகியவற்றை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளற வேண்டும்.

உளுத்தங்களி தயார் ...அதை உருண்டையாக உருட்டி வைத்து சாப்பிடலாம் ...












3. வெந்தயக்களி -

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1/8 கப்
நல்லெண்ணெய்
வெல்லம்



செய்முறை  -

புழுங்கல் அரிசி, வெந்தயம்  மற்றும் உளுந்தம் பருப்பை தனி தனியாக ஊற வைக்கவும் . முதலில் வெந்தயத்தை நன்கு மைய அரைக்கவும் , பின் உளுந்து சேர்ந்து மசித்த பின் அரிசி சேர்த்து அரைக்க வேண்டும் .


முதலில் தண்ணீர் கொதிக்க வைத்து பின் அதில் அரைத்த மாவை, நன்கு கரைத்து சேர்த்து கிளற வேண்டும் ..


களி போல நன்றாகத் திரண்டு வரும்போது அடுப்பை அணைக்க வேண்டும் ..பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் .






பொதுவாக பெரியவர்கள் அனைவருக்கும் தெரிந்த எளிய உணவு வகைகள்   இவை ...


எங்கள்  வீட்டில்   ராகி களி  அடிக்கடி செய்வேன் ..,.

வெந்தய களி என் சினேகிதி  ஒருவர் கூறிய முறையில் முயற்சித்தேன் ...மிக அருமையான சுவையில் கிடைத்தது. எங்கள் பாட்டி வீட்டில் சாப்பிட்ட ஞாபகம்.  இப்பொழுது இந்த களியும் எங்கள் வீட்டில் அடிக்கடி இடம்பெறுகிறது.

  அடுத்து உளுத்தங்களி இது சமையல் பிளாக் சிலவற்றில் பார்த்து செய்தது. ஆனால் அந்த உளுந்தின் சுவை மற்றும் சிறிது வழவழப்பு  இருந்ததால் பசங்களுக்கு சாப்பிட பிடிக்கவில்லை ...

ராகி களி  மற்றும் வெந்தய களியின் நடுவே வெல்லம்  வைத்து நல்லெண்ணெய்  சேர்த்து சாப்பிடும் போது மிக அருமையாக இருக்கும் ....



 அன்புடன்
அனுபிரேம் 


13 comments:

  1. சுவையான குறிப்புகள். உளுந்தங்களி, ராகி மொத்தே சுவைத்ததுண்டு. வெந்தயக் களி சாப்பிட்டதாக நினைவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வெந்திய களியை நானும் பல நாள் கழித்து இப்பொழுது தான் மீண்டும் செய்ய ஆரம்பித்தேன்...


      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் சார்

      Delete
  2. மூன்று களியும் அருமையா இருக்கு .எனக்கு அரிசி கேப்பை மிக்சிங் செய்து பார்க்கணும் .இதற்கு திக் வெந்தய பூண்டு குழம்பு நல்லா இருக்கும் 

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அஞ்சு , ராகி களி க்கு எல்லா கார குழம்பும் நல்லா இருக்கும்

      Delete
  3. உளுந்தகளிக்கு நாங்கள் கருப்பட்டி சேர்ப்போம். நிறைய நல்லெண்ணய் விட்டு கிண்டி உருண்டையாக உருட்டி கொடுப்பார்கள்.

    மற்ற களிகள் நானும் செய்வேன். என் கண்வருக்கும் ஒரு களியும் பிடிக்காது என்பதால் இப்போது செய்வது இல்லை. யாராவது உற்வைனர் வீட்டில் களி செய்தால் எனக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள்.

    உடலுக்கு பலம் தரும் களிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மா..


      உளுந்த களி மட்டும் இன்னும் நல்லா செய்ய கத்துக்கணும்...

      Delete
  4. படங்கள் செய்முறை அருமை. ஆனால் எனக்குப் பிடிக்காதுன்னு தோணுது. சின்ன வயதில் என் அம்மா கேப்பை மாவு ஜீனி போட்டு அல்வா மாதிரி கேப்பைக்களி கிண்டித் தருவாள். அது மட்டும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. போன மாதம் ராகி அல்வா செஞ்சேன்...அதை சாப்பிட்டு பார்த்துவிட்டு பசங்க.. ஏன் மா களி லையே வெல்லம் போட்டு கிண்டிட்டிங்க் ன்னு கேட்டாங்க..


      இது முதல் முறை சாப்பிடும் போது விருப்பம் வராது சார்...சாப்பிட சாப்பிட பிடிக்கும்..

      Delete
  5. பசங்க இரண்டு களி வகைகளைச் சாப்பிடறாங்கன்னு சொல்றீங்களே. ஆச்சர்யம்தான்

    ReplyDelete
    Replies
    1. பசங்க சின்னதுலந்தே குடுத்து பழக்கியச்சு சார்...

      பிடிச்சா நல்லா சாப்பிடலாம்...பிடிக்கல ன்னா கம்மி யா சாப்பிடலாம்...அவ்வோளோ தான் வேற ஏதும் தனியா செய்ய மாட்டேன்..

      அதுனால் சாப்பிட்டு பழகிட்டாங்க்

      Delete
  6. நான் மோர்க்களி தவிர வேறெதுவும் சாப்பிட்டதில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஓ...ஆனா நான் மோர்களி செஞ்சது இல்ல ஸ்ரீராம் சார்..

      Delete
  7. ஒரு களியில எத்தினி ரகம்? இதையெல்லாம் நான் சாப்பிட்டதே கிடையாது.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete