03 January 2021

19. குத்து விளக்கெரிய

 குத்து விளக்கெரிய


"நப்பின்னையே! க்ஷணகாலமும் நீ கிருஷ்ணனை பிரிய மாட்டாயோ? இது தகுமோ?"




ஆண்டாள் கிருஷ்ணன் படுத்திருக்கும் அறையின் வாசலில் நின்றுகொண்டு, கிருஷ்ணனை உறக்கம் நீங்கி எழுந்திருக்குமாறு சொல்கிறாள். ஆனால், கிருஷ்ணன் எழுந்து வருவதாகத் தெரியவில்லை. ஆண்டாளுக்கு அப்போதுதான் கிருஷ்ணன் எவ்வளவு சொகுசாகப் படுத்து உறங்குகிறான் என்பது நினைவுக்கு வருகிறது. 


 


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் *

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி *

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் *

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் *

மைத்தடங்கண்ணினாய்! நீஉன்மணாளனை *

எத்தனைபோதும் துயிலெழ வொட்டாய்காண் *

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் *

தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.


பொருள் -

நான்கு பக்கங்களிலும் குத்துவிளக்குகள் மெல்லிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும் அறையில், யானையின் தந்தங்களால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலின் மேல், மென்மையும் குளிர்ச்சியும் பொருந்தியதும், தூய வெண்மை நிறம் கொண்டதும், நறுமணம் நிறைந்த பஞ்சு மெத்தையின்மேல் கிருஷ்ணன் படுத்து உறங்குகிறானாம். 


அதுவும் எப்படி? அன்றுதான் மலர்ந்த கொத்து கொத்தான மலர்களைச் சரங்களாக்கி கரியமேகம் போன்ற கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் நப்பின்னையின் மார்பில் தலைவைத்து உறங்குகிறானாம் கிருஷ்ணன். 

அப்படி உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன் எழுந்திருக்கவில்லை என்றாலும் வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா என்ற ஆதங்கம் ஆண்டாளுக்கு. எனவே, 'கிருஷ்ணா, நீ எழுந்து வராவிட்டாலும் பரவாயில்லை; வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா?' என்று கேட்கிறாள்.

கிருஷ்ணனுக்கும் ஆண்டாள் அழைப்பது கேட்டு வாய் திறந்து பதில் சொல்ல ஆசைதான். ஆனால், பாவம் கிருஷ்ணனால் நப்பின்னையை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. ஆண்டாளோ, 'கிருஷ்ணா, நீ வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, நப்பின்னை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பும் வேளையில், உன் கைகளை அசைத்து அபயம் என்று சொன்னாலே போதுமே' என்று கெஞ்சுகிறாள். 

 கிருஷ்ணன் அதற்கும் அசையவில்லை. உடனே ஆண்டாள் வேறு முடிவுக்கு வருகிறாள்.

 இனி நாம் நப்பின்னையிடமே வேண்டிக் கொள்வோம். அவள் மனது வைத்தால் முடியாத காரியமும் இருக்கிறதா என்ன என்ற எண்ணம் ஆண்டாளுக்கு வந்துவிடுகிறது.


தாயாரின் கடாக்ஷம் இருந்துவிட்டால் பெருமாளின் கடாக்ஷம் கிடைத்துவிடும் என்பது உலக இயல்பு..

ஆண்டாள் நப்பின்னையிடம் வேண்டுகிறாள். 'மை தீட்டிய அகன்ற அழகிய கண்களை உடையவளே! நாங்கள் இத்தனை அழைத்தும் கிருஷ்ணன் எழுந்து வரவில்லையே. 

ஒருவேளை நீதான் அவனை எழுந்திருக்க விடாமல் செய்கிறாயோ? ஒரு நொடிப் பொழுதும் கிருஷ்ணனுடைய பிரிவை நீ தாங்கமாட்டாய் என்பது எங்களுக்கும் தெரியும்தான். 

ஆனாலும், எங்கள்மீது இரக்கம் காட்டக்கூடாதா? ஆண்டாள் எங்கள் குலத்தில் பிறந்தவளான உன்னிடம் தவிர நாங்கள் வேறு யாரிடம் போய் ஆதரவு கேட்க முடியும்? கிருஷ்ணனை யமுனைக்கு அழைத்துச் சென்று மஞ்சன நீராட்டி, அவனுடைய புகழைப் பாடி, அவனுடைய அருளைப் பெறவே நாங்கள் விரும்பி வந்திருக்கிறோம். 

எங்களிடம் இரக்கம் காட்டி, நீ உன் மணாளனை எழுப்பி அனுப்பு. 

எங்களுடைய குலத்திலேயே பிறந்து எங்களுடனே ஆடியும் பாடியும் திரிந்த நீ, நாங்கள் வேண்டி விரும்பிக் கேட்டும் கிருஷ்ணனை எங்களுடன் அனுப்பாவிட்டால், அது உன்னுடைய மேன்மைக்கு இழுக்கு ஆகாதா?' என்று கேட்கிறாள்.


தன்னுடைய மேன்மைக்கு இழுக்கு ஆகாதா என்று ஆண்டாள் கேட்டதுமே நப்பின்னைக்கு சற்று இரக்கம் வந்துவிட்டது. இரக்கம் மட்டுமல்ல எங்கே தன்னுடைய மேன்மைக்கு இழுக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் வந்துவிட்டது. 


(இணையத்திலிருந்து )

 திருநறையூர் (நாச்சியார் கோவில்) -  ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. தெய்வத் திருப்பாசுரம்...
    ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அழகான பதிவு. அழகான படங்கள். தாமரையில் அமர்ந்துள்ள வஞ்சுளவல்லி தாயாரை நமஸ்கரித்து கொண்டேன். இன்றைய திருப்பாவை பாடலும், அதன் விளக்கமும் அருமையாக இருந்தது. படித்து மகிழ்ந்தேன். இன்று காலையில் வர இயலவில்லை. தங்களின் இந்த சிறப்பான மார்கழி பக்திப் பதிவை படிக்க மனதுக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete