இருபத்தொன்பதாம் பாசுரம் - இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.
சிற்றஞ்சிறு காலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்
கோவிந்தா! அதிகாலையிலே இங்கு வந்து உன்னை வணங்கி உன்னுடைய பொன்போன்ற விரும்பத்தகுந்த திருவடித்தாமரைகளை மங்களாசாஸனம் செய்ததற்குப் பலன் என்ன என்பதைக் கேட்டருளவேண்டும்.
பசுக்களை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ எங்களிடத்தில் அந்தரங்க கைங்கர்யத்தைக் கொள்ளாமல் இருக்கக் கூடாது.
நீ இன்று கொடுக்க இருக்கும் பறை என்னும் வாத்யத்தைப் பெற வந்தவர்கள் அல்ல நாங்கள்.
காலம் உள்ளவரை எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னோடு உறவுடையவர்கள் ஆகவே இருக்க வேண்டும்.
உனக்கு மட்டுமே நாங்கள் தொண்டு செய்ய வேண்டும்.
அப்படிக் கைங்கர்யம் செய்யும் காலத்தில் அது எங்களுக்கு ஆனந்தம் என்கிற எண்ணத்தையும் போக்கி அருள வேண்டும் – அது உனக்கே ஆனந்தம் கொடுக்கும் செயலாக இருக்கும்படி செய்தருள வேண்டும்.
நன்றி - Upasana Govindarajan Art |
ஸ்ரீ கோதை நாச்சியார் - சென்னை அமிஞ்சிக்கரை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சன்னதி |
அன்புடன்
அனுபிரேம்
No comments:
Post a Comment