18 January 2022

தைப்பூசம்

  இன்று தைப்பூசம் நன்னாள்....முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம்,

 அறுவரும் ஒருவர் ஆன நாள்  கார்த்திகையில் கார்த்திகை,

அன்னையிடம் வேல் வாங்கிய நாள்  தைப்பூசம்,

அசுரரை அழித்தாட்கொண்ட நாள் ஐப்பசியில் சஷ்டி,

வள்ளியைத் திருமணம் புரிந்த நாள்  பங்குனி உத்திரம்...

இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் வேல் ஏந்திய நாளே  தைப்பூசம்!..


தர்மபுரி, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச பெருவிழா காட்சிகள் 

வேல் விருத்தம் - அருணகிரிநாதர் 
வேல் விருத்தம் - 2


மோகனம் - கண்ட சாபு

வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன்
   வெற்றிபெறு சுடர் ஆழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன் குலம் கல்லி
   வெல்லா எனக் கருதியே

சங்க்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்
   சதுர்முகனும் நின்று இரப்ப

சயிலமொடு சூரன் உடல் ஒருநொடியில் உருவியே
   தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
   கெளமாரி கமலாசனக்

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
   கெளரி காமாஷி சைவ

சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி
   த்ரியம்பகி அளித்த செல்வ

சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குல அந்தகன்
   செம்பொன் திருக்கை வேலே.


(முருகன் திருக்கை வேலே அறுமுகவன் திருக்கை வேலே) 
கொடிய ஆலகால விஷத்தை அடக்கிக் கொண்டிருக்கும் கழுத்தை உடைய 
சிவ பெருமானின் சூலாயுதமும், 
திருமாலின் வெற்றிச் சின்னமான ஒளி வீசுகின்ற சக்ராயுதமும்,
 தேவர்களின் தலைவனான இந்திரனின் வஜ்ராயுதமும், 
சூரபத்மாவின் சுற்றம் முழுவதையும், 
அடியோடு பெயர்த்து, 
வெற்றி காணும் திறமை உடையன அல்ல, 
என்று நினைத்து, 'சிறந்த போர் வீரனே, நீ ஜெயித்து எங்களுக்கு அருள வேண்டும்' என்று, 

தேவர்களும் பிரம்மனும் வேண்ட, 
கிரவுஞ்ச மலையையும் சூரபத்மாவின் உடலையும் ஒரே நிமிடத்தில் உருவி அழித்து வெளி வந்த ஒப்பற்ற ஆண்மை கொண்ட நெடிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) 

ஊழிகாலத்தில் தேவர்கள் முக்தி அடையும் பொருட்டு அந்த தேவர்களின் எலும்புக் கூட்டை மாலையாக போட்டுக் கொண்டவள்,
 மகிஷாசுரனைக் கொன்று அவனின் எருமைத் தலைமேல் நிற்பவளும், 
சப்த மாதர்களில் ஒருவளான வராக மூர்த்தியின் சக்தியாக இருப்பவள்,
 இந்திரனின் சக்தியானவள், 
குமார மூர்த்தியின் சக்தி,
 தாமரையை ஆசனமாகக் கொண்டிருக்கும் இளமை மாறாத கன்னி, 
காக்கும் சக்தியாகிய விஷ்ணுரூபிணி, 
பால்ய பருவத்தினள், 
மும் மூத்திகளுக்கும் மேலானவள், 
பைரவரின் சக்தி, மலம் அற்றவள், பொன்னிறமானவள், 
அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கண்களை உடையவள், 
சிவனுடைய தேவியாகிய பேரழகி, நீல நிறத்தவள், 
சம்சாரக் கடலை அகற்றுபவள், கார்த்திகை மாதர்களாக வருபவள்,
 யுத்தகளத்திற்கு அதிபதி, முக்கண்ணுடையவள் ஆகிய தேவி, 

பெற்றருளிய உலகுக்கெல்லாம் முத்திச் செல்வத்தை கொடுக்கும் பாலகன் சண்முகன், ஞானசொரூபி, அரக்கர் குலத்தினை அழித்தருளிய கந்த பிரான், 

திருக்கையிலே விளங்கும் பொன்னொளி வீசும் அழகிய வேலாயுதமே அதுவாகும்.


முருகா சரணம் .......
முத்துகுமாரா சரணம் ...அன்புடன்
அனுபிரேம்


2 comments:

 1. படங்களும் விவரங்களும் சிறப்பு. படங்களை ரசித்தேன் அனு

  கீதா

  ReplyDelete
 2. அழகழகான படங்களுடன்
  வேல் விருத்தம்.. இனிமை.. அருமை..
  வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..

  ReplyDelete