02 January 2022

அஞ்சனை மைந்ததா ... ஸ்ரீ ஆஞ்சநேயா

 இன்று அனுமத் ஜெயந்தி ....


மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்ரன் என்பதால் காற்றை வென்றவர் ஆகிறார்.

 சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர் ஆகிறார். 

பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர் ஆகிறார். 

வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர் ஆகிறார். 

வானத்தில் நீந்திப் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர் ஆகிறார்.

 இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், எங்கும் எதிலும் அடங்குவதில்லை. " ராமா"  என்ற இரண்டு எழுத்தில் கட்டுண்டு கிடக்கிறார். 

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேயர் அயோத்தியை ஆண்ட ராமனின் நெஞ்சத்தையே ஆண்ட பெருமைக்குறியவர். 











லங்கையிலிருந்து திரும்பியதும், அத்தனை கோடி வானர வீரர்களில் தான் ஒருவனே லங்கை சென்று ஸீதையைக் கண்டு வந்திருக்கிறோம் என்று சற்று பெருமிதம் கொண்ட ஹனுமார், ஸந்த்யாகாலக் கடன் கழிக்க வேண்டி ஒரு ஆற்றில் இறங்க வேண்டியிருந்தது.

அன்னையிடமிருந்து கொண்டு வந்திருந்த சூடாமணி மிகவும் பவித்ரமானதால், அதை கீழே வைக்க மனம் வரவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தபோது, ஒரு மரத்தடியில் ஒரு முனிவர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்.

ஹனுமார் மெல்ல அவரை அணுகி நமஸ்கரித்து “ஐயனே! இது விலை மதிப்பில்லாத வஸ்து.

நான் ஸ்நானம் செய்து விட்டு வரும் வரை தங்களிடம் இதை வைத்துக் கொள்ளுகிறீர்களா?” என்று தாழ்ந்து வேண்டினார்.

அந்த முனிவரும் “குழந்தாய் ! இதை உன் கையாலேயே இந்த கமண்டலுவில் போட்டுவிட்டு, பிறகு வந்து நீயே எடுத்துக் கொள்!” என்றார்.

ஆஞ்சநேயரும் ஸ்நானம் முடித்து வந்ததும் முனிவரிடம் சூடாமணியைக் கேட்டார்.

“நீதானே இதற்குள் போட்டாய்? நீயே எடுத்துக் கொள்” என்று முனிவர் சொன்னதும் கமண்டலுவில் கை விட்டால், நாலைந்து சூடாமணிகள் வந்தன!

ஆஞ்சனேயர் திடுக்கிட்டு “ஸ்வாமி ! என்ன இது? எப்படி இத்தனை சூடாமணிகள் வந்தன?” என்றார்.

“எனக்கென்னப்பா தெரியும்?…” என்றார் முனிவர்.

“இது மிகவும் பவித்ரமான வஸ்து.

லங்கையில் இருந்து ஸீதா மாதாவைக் கண்டு, அவளிடமிருந்து ஸ்ரீராமனிடம் ஸமர்ப்பிக்க வேண்டி, கொண்டு வந்தது…” என்று ஹனுமார் முடிக்கவில்லை,

அதற்குள் முனிவர் “என்ன? என்ன? ஸீதையிடமிருந்தா?

உன்னைப் போல் நாலைந்து வானர வீரர்கள் வந்து இதையேதான் சொல்லிவிட்டு, சூடாமணியை கமண்டலுவில் போட்டுவிட்டுப் போனார்கள்!” என்றதும்,

நவவ்யாகரண பண்டிதரான ஆஞ்சநேயரின் ஹ்ருதயத்தில் ஒரு பொறி கிளம்பியது.

கண்களை மூடியபடி ஸ்ரீராமனை த்யானித்து “ப்ரபோ! அனைத்துக்கும் ஸூத்ரதாரியான நீங்கள் இருக்கும்போது,

அத்தனை வானர வீரர்களில் நான் ஒருவனே அன்னையைக் கண்டிருக்கிறேன் என்ற பெருமை என்னை விட்டு நீங்கியது.

கருணாஸாகரா!

என்னை மன்னித்து விடுங்கள்” என்று கண்ணீருடன் வேண்டின அடுத்த கணம், கையில் இருந்த சூடாமணியின் கனம் குறைந்தது.

பார்த்தால், ஒரே ஒரு சூடாமணி மட்டுமே இருந்தது!

எதிரில் இருந்த முனிவரையும் காணவில்லை!

ஸ்ரீ ராமனிடம் சூடாமணியைக் குடுத்துவிட்டு அவர் தனிமையில் இருக்கும்போது தனக்கு நேர்ந்த கர்வபங்கத்தை ஒளிவின்றி கூறி மன்னிப்புக் கோரினார்.

“ஆஞ்சநேயா! ஸர்வ ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவன் நீ!!!

உன்னால் தவறே செய்ய முடியாது.

அப்படியே உன்னையறியாமல் ஏதாவது தவறு செய்தாலும், அதை உடனேயே நிவர்த்தி செய்துகொள்ளும் அறிவும் உனக்குண்டு” என்று ரகுநந்தனன் கூறினார்.

மஹா அரிதான கார்யங்களை ஒரு சிட்டிகை நேரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக, குறையே சொல்ல முடியாமல் முடித்து விட்டு,

மிகவும் வினயமாக நிற்கும் அஞ்சனை மைந்தன், 

நம் தலைக்கு மேல் ஆலவ்ருக்ஷமாக வளர்ந்து கிளை வேர்கள் விட்டுக் கொண்டு ஸதா “நான்! நான்!” என்று ஆர்ப்பரிக்கும் நம் அல்ப புத்தியை அழித்து, வினயத்தோடு கூடிய ராம பக்தியை அருள வேண்டுவோம்.!!!!

(இணையத்திலிருந்து )











அசாத்ய சாதக ஸ்வாமிந் |

அசாத்யம் தவகிம்வத |

ராம தூத க்ருபாசிந்தோ |

மத் கார்யம் சாதய ப்ரபோ|


ஜெய்  ஸ்ரீராம் ...ஜெய்  ஸ்ரீராம் ...ஜெய்  ஸ்ரீராம் ...

ஆஞ்சநேய சுவாமி திருவடிகளே சரணம் ...



அன்புடன் 

அனுபிரேம் 

3 comments:

  1. ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்.
    ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்.
    ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்.

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு. அஞ்சனை மைந்தனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  3. அஞ்சனை மைந்தனை அஞ்சா நெஞ்சம் உடையவனை தஞ்சமென்றோம் ஆஞ்சநேயா! அஞ்சனை மைந்தன் என்ற தலைப்பைப் பார்த்ததும் வந்துவிட்டேன்! சுந்தரனின் படங்கள் சுந்தரம்!!

    கீதா

    ReplyDelete