07 May 2022

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே




 கேரளத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்று திருவல்லா என்ற திருப்பதி. அங்கே பிணங்களைத் தின்று வாழக்கூடிய ஒருவன் இருந்தான். அவன் பெயர் கண்டாகர்ணன்.

அவன் சிறந்த சிவ பக்தன். 

சதா சர்வ நேரமும் சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பவன். 

அது மட்டுமின்றி, தனது செவிகளில் வேறு ஒரு தெய்வத்தின் நாமம்கூட விழுவதைச் சகியாதவன். எனவே, தனது இரண்டு காதுகளிலும் இரண்டு வெண்கல மணிகளைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான்.

கண்டா என்றால் மணி என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள்.

 மணிகட்டிய காதை உடைய பிசாசு.

அதனால் அதற்குப் பெயர் கண்டாகர்ணன். 

நடக்கும்போது காதில் தொங்கவிட்ட மணி ‘டங் டங்’ என்று சத்தம் போடும். அப்போது யாராவது நாராயணா என்று சொன்னால் அதன் காதில் அது விழாது அல்லவா ?.

இந்தக் கண்டாகர்ணன் ஒரு நாள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, தனக்கு மோக்ஷம் கிடைக்கவேண்டும் என்று அவனுக்குள் ஓர் ஆசை உண்டானது. 

சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இயற்றினான்.

பிரத்தியட்சமான சிவ பிரான், ''என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். 

கண்டாகர்ணன் தனக்கு முக்தி வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு சிவபெருமான், ''அப்பனே! அது என்னால் இயலாது. முக்தி அளிக்கக்கூடியவர் நாராயணன் ஒருவரே. அவரிடம் சென்று கேள்!' என்று சொல்லிவிட்டார். 

அதோடு கண்டாகர்ணனுக்கு ஒன்று பரிந்துரைத்தார், 

"நீ ஒரு காரியம் செய். நாராயணன் இப்போது பூமியில் கிருஷ்ணராக அவதாரம் செய்துள்ளார். என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று முன்பு அவரிடம் வேண்டியிருந்தேன். அதனால் கிருஷ்ணர் என்னிடம் பிள்ளை வரம் வேண்டி இங்கே வருவார். வரும் சமயம், நீ அவரை வணங்கி ”வைகுண்டம் போக வேண்டும்” என்று கேள் என்றார்.

அவ்வாறே கிருஷ்ணனை பார்த்தமாட்டிலேயே கண்டுகொள்ளும் வகையில் கண்ணனின் ரூபத்தை வர்ணித்தும் கூறினார்.

சிவபெருமானுக்கு நன்றி செலுத்திவிட்டு தன் காதினில் தொங்கும் வெண்கல மணிகளை அகற்றி, கண்டாகர்ணனும் நாராயணனைப் பார்க்கக் கிளம்பினான்.

ஒருநாள், போகும் வழியில் கிருஷ்ணன் எதிர் திசையில் வருவதைக் கண்டான். 

சாதாரணமாகவே ஒருவரின் இல்லத்துக்குச் செல்வதென்றால், கொஞ்சம் இனிப்போ, பழங்களோ வாங்கிச் செல்வது வழக்கம். இவனோ எம்பெருமானைப் பார்க்கச் செல்கிறான். வெறுங்கையுடன் போகலாமா? எதைக் கொண்டு போவது? அவனோ அகோரி. 

அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பிணங்கள் மட்டும்தான்.

எனவே, 'போவதுதான் போகிறோம், ஒரு நல்ல அந்தணரின் பிணமாக எடுத்துக்கொண்டு போவோம்’ என்று ஓர் அந்தணரின் பிணத்தைத் துண்டங்களாக்கி, எடுத்துச் செல்கிறான், கண்டாகர்ணன். 

கிருஷ்ணனை நிறுத்தி, "பிரபு, தாம்தான் எனக்கு மோக்ஷம் நல்க வல்லவர் என்று என்பெருமானிடம் கேட்டு தெரிந்தேன். சற்று முன்னர் இந்த அந்தணரை கொன்று உங்களுக்காகவே கொண்டு வந்தேன். தயைகூர்ந்து இதை சுவீகரியுங்கள்!" என்று கூறி முழுமனதாக வேண்டினான்.

கிருஷ்ணன் அங்கே கண்டாகர்ணன் தனக்கே தனக்காக கொண்டு வந்த பிணத்தைப் பார்க்கவில்லை, அவனுடைய பக்தியைத்தான் பார்த்தார். அவர் அந்தப் பிணத்தை சுவீகரித்து அவனுக்கு மோக்ஷத்தை அளித்தார். 

கண்டாகர்ணனின் சகோதரனுக்கும் அவனது பிரார்தனைக்கிணங்க மோக்ஷத்தை வழங்கியதாக கதை உண்டு. 

அதோடு, கண்டாகர்ணன் கொன்று தன்னிடம் அர்ப்பணித்த அந்தணருக்கும் மோக்ஷம் வழங்கினார் கிருஷ்ணர்.

எம்பெருமானுக்கு, அமுது அளிப்பவன், பிண விருந்து அளிப்பவன் என்ற பாரபட்சம் எல்லாம் கிடையாது.

 அவனுக்குத் தெரிந்தது, பக்தனின் தூய மனம் மட்டுமே! இதை நடைமுறையில் செய்து காட்டியவன் கண்டாகர்ணன்.




அந்த ஞானம்கூடத் தனக்கு இல்லையே என்கிற தன்னிரக்கத்தின் காரணமாகத்தான், 'கண்டாகர்ணனைப் போல மனமார இறைவனைப் பிரார்திக்கக்கூடியவளா நான்?’ என்று கேட்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்


ஏழாம் பாசுரம் -  இந்த ஸாமானாதிகரண்யம், சரீராத்மபாவ ஸம்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்.


திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம்  இவைமிசை

படர் பொருள் முழுவதும் ஆய், அவை அவை தொறும்

உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

சுடர் மிகு சுருதியுள்  இவை உண்ட சுரனே


2905 / 1.1.7


நிலையாக நிற்கும் ஆகாசமும், அக்னியும், வாயுவும், நீரும், பூமியும், இவைகளை இருப்பிடமாகக் கொண்டு பரந்த எல்லாப் பொருள்களும் தான் என்று சொல்லும்படி அவைகளுக்கு உபாதான காரணமாய், அவை எல்லாவற்றிலும் சரீரத்தில் ஆத்மா வ்யாபித்து இருப்பதைப் போலே, மறைந்து வ்யாபித்து இருக்கிறான். ஒளி மிகுந்து இருக்கும் வேதத்தின் உட்பொருளாகத் தோற்றுபவன் ப்ரளயம் வரும்பொழுது இவை எல்லாவற்றையும் விழுங்கிய “சுரன்” (தேவன்).






7 .திருக்கண்டியூர்

ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ அரன்சாபந்தீர்த்த ஸ்வாமிநே நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


1 comment:

  1. படங்கள் நன்று அனு.

    கதை புதியது இதுவரை அறிந்ததில்லை. சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

    கீதா

    ReplyDelete