11 September 2018

மகாகவி பாரதியார் சில நினைவுகள்....

வாழ்க நலம்...


இன்றைக்கு  மகாகவி பாரதியாரின் நினைவு நாள்...

ஆகவே கவியின் நினைவுகள் சில..








சொற்களைக் கோர்த்து பொழுது போக்காகக் கவிதைகள் புனைந்தவனில்லை மகாகவி. ஒவ்வொரு கவிதையின் பின்னாலும் ஒரு பெருங்கதை மறைந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அதன் சிறப்பினை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.



புதுச்சேரியில் அந்தக் காலத்தில் புழக்கத்திலிருந்தது புஷ் வண்டி எனப்படும் பயண சாதனம். அதில் புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்த ஒரு புஷ்வண்டியோட்டி மகாகவிக்கு அடிக்கடி சவாரி வருவது வழக்கம்.

அப்படியொரு நாள் அந்த மனிதர் பாரதியிடம், ஐயா நான் உப்பளம் பகுதியில் வசிக்கிறேன். தாங்கள் ஒருநாள் எங்கள் பகுதிக்கு வரவேண்டும். வந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் முத்துமாரியம்மனை தரிசித்து அங்கு ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.

 இவனைப் போல உள்ளத்தில் உண்மை அன்பு கொண்ட ஏழைகள் யார் அழைத்தாலும் மறுக்காமல் போகும் குணமுடைய பாரதி அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

மறுநாளே தன் இளைய மகள் சகுந்தலாவையும் அழைத்துக் கொண்டு அந்த புஷ்வண்டிக்காரனின் வண்டியிலேயே பயணம் செய்து உப்பளம் சென்றார்.

அங்கு தேசமுத்துமாரி எனும் பெயரால் ஒரு ஆலயம் இருந்தது.

அந்த ஆலயத்தில் பூஜைகள் செய்து வந்தவன் ஒரு வள்ளுவ இளைஞன்.

அந்த இளைஞன் மாரியம்மனுக்கு முறைப்படி வழிபாடுகள் நடத்தி தீபாராதனை செய்து வைத்தபோது, அதனைக் கண்டு பரவசமடைந்த பாரதியார் அருகிலிருந்த தன் மகளிடம் "பாப்பா! அதோ பார், அந்த இளைஞன் அந்தணத் தொழிலை எத்தனை அழகாகச் செய்கிறான் பார்!" என்று சொல்லி வியந்து போனார்.

அவனுடைய அந்த ஈடுபாட்டைக் கண்டு அவனைத் தன் இல்லத்துக்கு அடிக்கடி வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு, அவனுக்கும் கனகலிங்கத்துக்கு பூணூல் அணிவித்ததைப் போன்றே பூணுல் அணிவித்தார்.

இவர் செய்யும் காரியத்தை அதிசயமாகப் பார்த்தவர்களிடம் பாரதி சொன்னார், அவன் செய்யும் அந்தணத் தொழிலுக்கு இது தேவை என்றார்.

அந்த ஒருநாள் உப்பளம் விஜயம் அந்தப் பகுதி மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டது. பாரதி தங்கள் ஆலயத்துக்கு வந்ததைப் பலரும் அறியவில்லை என்பதால் அதே புஷ் வண்டிக்காரன் பாரதியை மீண்டும் ஒருமுறை தங்கள் ஆலயத்துக்கு வரவேண்டுமென்றும், அந்தப் பகுதி மக்கள் அவர் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அவன் வேண்டுகோளை ஏற்று பாரதி மீண்டும் மறுநாளே உப்பளம் சென்றார். அங்கு வாழுகின்ற மக்கள் தங்கள் வீதிகளை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலமிட்டு, தோரணங்கள் கட்டி அவர்களும் தலை முழுகி ஈரத் தலையுடன் இவரை வரவேற்றனர்.

ஆலயத்தில் வழிபாடு முடிந்ததும் பாரதியை ஒரு பாட்டுப் பாடவேண்டுமென்று கேட்க, அவரும் சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டிருந்து விட்டு "உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா" எனும் பாடலையும் "தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி" எனும் பாடலையும் உரத்த குரலில் பாடினார்.



உலகத்து நாயகியே!-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண்புகுந்தோம்,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்து 
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

......


தேடியுனைச் சரணடைந்தேன்,
தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய்,
கேட்டவரந் தருவாய்.


பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய்,
குறைகளெல்லாம் தீர்ப்பாய்.


எப்பொழுதும் கவலையிலே
இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன்
உனதருளால் வாழ்வேன்.


சக்தியென்று நேரமெல்லாந்
தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால்
பயமனைத்துந் தீரும். 

ஆதாரம் சக்தியென்றே
அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;
யாதுமவள் தொழிலாம்.


துன்பமே இயற்கையெனும்
சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;
யாவுமவள் தருவாள்.


நம்பினார் கெடுவதில்லை;
நான்கு மறைத் தீர்ப்பு ;
அம்பிகையைச் சரண்புகுந்தால்
அதிகவரம் பெறலாம். 


உடனே அருகிலிருந்த அந்தப் பகுதி ஆண்கள் தாரை தப்பட்டை ஒலியோடு தாளமிட்டுக் கொண்டு ஆடத் துவங்க, பாரதியும் ஆடிக்கொண்டே அந்தப் பாடலைப் பாடி முடிக்கிறார். தன்னை மறந்து தேசமுத்து மாரி மீது பாடிய அந்தப் பாடலின் இந்தப் பின்னணியைத் தெரிந்து பாடினால் தான் அதே உணர்வு நமக்கும் ஏற்படும்.

உப்பளம் சென்று வீடு திரும்பும்போது தந்தையும் மகளும் ஈஸ்வரன் தர்மராஜா கோயிலினுள் நுழைகின்றனர். அங்கிருந்த சிலைகளையெல்லாம் காட்டி இவர் யார், இது என்ன என்று பாப்பா எனும் சகுந்தலா கேள்வி கேட்டுக் கொண்டு வருகிறாள்.

அது தருமன், இது பீமன், இது அர்ஜுனன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்த பாரதி, திரெளபதியின் உருவச்சிலையைக் காட்டி இவர் யார் என்று கேட்டதும் மெளனமாகிவிட்டார்.

மகளும் தந்தையின் மனநிலையைப் புரிந்து கொண்டு மவுனமாக வீடு திரும்பிவிட்டனர்.

வீடு திரும்பிய பாரதி யாருடன் பேசாமல் அங்கும் இங்குமாக நடந்து நிறைவில் காலைத் தரையில் உதைத்துக் கொண்டு தன் கவிதை வரிகளை உதிர்க்கத் தொடங்கினார்.

 அப்போது பிறந்ததுதான் அழியாக் காவியமான "பாஞ்சாலி சபதம்".


(இணையத்திலிருந்து )


வாழ்க கவியின் புகழ்..





அன்புடன்
அனுபிரேம்

8 comments:

  1. 'உலகத்து நாயகியே' பாடலை பித்துக்குளி முருகதாஸ் குரலில் கேட்டிருக்கிறேன் என்று ஞாபகம்.

    மகாகவி நினைவைப் போற்றுவோம்.

    ReplyDelete
  2. பாடல் எனக்கு பிடித்த பாடல்.
    இந்த பாடலுக்கு கும்மி அடித்து பள்ளியில் ஆடி இருக்கிறோம்.
    கிராமத்து மாரியம்மன் கோவில்களில் இந்த பாடல் பாடி கும்மி கொட்டுவார்கள்.
    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  3. மனதை நெகிழ்ச்சியாக்கும் ஒரு நிகழ்வு. பாரதியார் நினைவு நாளில் அவருக்கு நல்லதொரு சமர்ப்பணம்.

    ReplyDelete
  4. அழகிய பாடல்கள்.. கோயில்களில் ஸ்பீக்கரில் போனபோது கேட்டிருக்கிறேன்ன்..

    ReplyDelete
  5. நன்னாளில் நினைவுகூர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  6. மகாகவியைப் பற்றி சிறப்பான பதிவு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  7. காக்கையும் குருவியும் எங்கள் ஜாதின்னு சொன்னவர். நல்லவர். பிழைக்கதெரியாதவர்

    ReplyDelete
  8. சிறப்பான பதிவு.

    தொடரட்டும் பகிர்வுகள்.

    ReplyDelete