01 October 2019

ஒத்தக்கடை யோக நரசிம்மர் திருக்கோயில்

மதுரை அருகே உள்ள யானை மலை  என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம்.




 மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.




போன பதிவில் திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோயில் தரிசனம் கண்டோம் , இன்று அக்கோவில் செல்லும் வழியில் உள்ள ஒத்தக்கடை யோக நரசிம்மர் திருக்கோயில் தரிசனம் காணலாம் .






மூலவர்: யோக நரசிம்மர்
தாயார்: நரசிங்கவல்லி தாயார்
தீர்த்தம்: சக்கரத்தீர்த்தம்

இது ஒரு குடவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே, மிகப்பெரிய உருவத்தை கொண்ட ஆலயம் இது.




தல வரலாறு:


உரோமச முனிவர், தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி, இந்த யானை மலை தலத்திற்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். மேலும் நரசிம்மரை, அவரது நரசிம்ம அவதார கோலத்திலேயே தரிசிக்கவும் விரும்பினார்.

இறைவனும் உரோமச முனிவரின் விருப்பப்படியே, உக்கிர நரசிம்மராக தோன்றி காட்சி தந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிர கோல வெப்பத்தால் உலகமே தகித்தது.

இதனை தாங்கிட முடியாமல், தேவர்களும், முனிவர்களும் பிரகலாதனிடம் சென்று முறையிட்டனர்.

 பிரகலாதனும் இத்தலத்திற்கு வந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர, வெப்பம் முற்றிலும் நீங்கவில்லை.

இதையடுத்து அன்னை மகாலட்சுமியிடம் அனைவரும் முறையிட்டனர். மகாலட்சுமியும் இத்தலத்திற்கு வந்தார். அதன்பிறகே நரசிம்மரின் உக்கிரம் முழுமையாக மாறி தணிந்தது. மேலும் அன்னை மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்தபடி, யோக நரசிம்மராக, கேட்டதை வழங்கும் வள்ளலாக இத்தலத்தில் நரசிம்மர் அருள்புரிகிறார்.

இணையத்திலிருந்து


இத்தலத்தில் இருக்கும் யோக நரசிம்மர், தன் மார்பினில் மகாலட்சுமியை தாங்கியபடி மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை.

இதற்குக் காரணமாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. பொதுவாக கொடி மரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீளம், அகல அளவைப் பொறுத்ததே.

ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு மேல், யானை மலை மிகவும் உயர்ந்து காணப்படுவதால் கொடி மரம் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.








கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகளில் அடர்ந்த காடாக இருந்தது இப்பகுதி. இதனை மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி என்பவர் செப்பனிட்டு கோயில் திருப்பணி தொடங்கினார். அவருக்குப் பின் அவரது தம்பி மாறன் எயினர் என்பவர் கி.பி.770இல் கோயிலை முழுதாக்கி குடமுழுக்கிட்டதாக இங்குள்ள கல்வெட்டு தகவல் தெரிவிக்கிறது.

சிவன் கோயில்களைப் போல இங்கும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. நரசிம்மர் அவதாரம் எடுத்தது பிரதோஷ காலத்தில்தான். அந்த நேரத்தில் யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும்.



தாயார் புன்னகை தவழும் அழகில் அருள் புரிகிறாள் ....தெய்வீக அழகு ...

 குடைவரை கோவில் என்பதால் கருவறை மிக சிறியது , நரசிம்மரை மிக அருகில் இருந்து காணும் பொழுது மிக பரவசமாக இருந்தது ,   அத்தைகைய அழகிய உருவில் , அமைதியான இடத்தில் அருள் புரிகிறார் .



திருக்குளம் 



அங்கண்ஞாலம்அஞ்ச அங்கு ஓராளரியாய் * அவுணன் 
பொங்கஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் * 
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச் 
செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.

1 1008


அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் * அவுணன் 
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம் * 
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப * 
சிலைக்கைவேடர்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே.

2 1009



 ஓம் நமோ நாராயணா..


அன்புடன்
அனுபிரேம்


8 comments:

  1. பல முறை பார்த்துள்ளேன். மிகவும் அருமையான மூலவர்.

    ReplyDelete
  2. சிங்கப் பெருமாள் கோவில் நரசிம்மரும் குடவரைக் கோவில்தான். அளவிலும் பெரிது. அதைவிடப் பெரிதா ஒத்தக்கடை நரசிம்மர்?

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கோவில் இதுவரை நாங்கள் சென்றதில்லை ...

      அதனால் அறியவில்லை ..படித்த அளவில் கிடைத்த செய்திகளை கொண்டே இத்தகவல்களை பகிர்கிறேன் ...

      Delete
    2. தங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி ....

      Delete
  3. மேற்கு நோக்கி அமைந்த யோகநரசிம்மர் பார்க்கவே பிரமிப்பா இருக்கு. தகவல்களும் படங்களும் அருமை.

    ReplyDelete
  4. அழகிய படங்களுடன் பதிவு அருமை.
    பல முறை சென்று வந்து இருக்கிறோம்.

    ReplyDelete
  5. குடைவரைக் கோவில். அந்த வழியே பேருந்தில் சென்றிருந்தாலும் கோவிலுக்குச் சென்றதில்லை. உங்கள் தளம் வழி தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete