19 October 2019

உலகளந்த பெருமாள் திருக்கோயில்,காஞ்சிபுரம்


காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள 22 திவ்ய தேசங்களில் (தொண்டை நாட்டு தலங்கள்) இத்தலம் கச்சி ஊரகம் எனப்படுகிறது. 

கச்சி என்றால் காஞ்சிபுரம். 

ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்களும் , காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கின்றன.

அதாவது, 108 திவ்யதேசங்களில் நான்கை, இந்த ஒரே கோயிலுக்குள் தரிசித்து விடலாம். இந்த திவ்ய தேசப் பெருமாள்கள் தொண்டை மண்டலத்தின் எப்பகுதியில் இருந்து இங்கு வந்தனர் என்பதைக் கண்டறிய முடியவில்லை. வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த இத்தல பெருமாள்கள், ஏதோ ஒரு காலகட்டத்தில் இங்கு வந்து சேர்ந்ததாகக் கூறுகின்றனர்.

 1. திரு ஊரகம்

மூலவர்   - உலகளந்தபெருமாள், திரிவிக்ரமன்

உற்சவர் - பேரகத்தான்
தாயார்   - அமுதவல்லி நாச்சியார், அம்ருத வல்லி

தீர்த்தம்  -  சேஷ தீர்த்தம்
விமானம்  - ஸாரஸ்ரீகர விமானம்

தல வரலாறு: 

மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய அஸ்வமேத யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். பலியும் சம்மதித்தான். 

அப்போது அவர் திருவிக்ரம மூர்த்தியாக உயர்ந்து, ஓரடியால் மண்ணையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்துவிட்டு மூன்றாவது அடியை பலியின் சிரசில் வைத்தார். அவன் பாதாளலோகத்தைச் சென்றடைந்தான். 

தானம் வாங்க வந்த பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தைத் காணமுடியாமல் போய்விட்டதே என எண்ணி வருந்தினான். அங்கேயே தவத்தில் ஆழ்ந்தான். அவனுடைய தவத்திற்கு இணங்கி சத்தியவிரத க்ஷேத்திரம் என்னும் காஞ்சியில், உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று காட்சியளித்தார். அத்தலமே ஊரகம்  உலகளந்தபெருமாள் கோயிலாகும். 
உலகளந்த பெருமாள்

கருவறையில்  மேற்கு நோக்கிய திருமுகத்துடன் உலகளந்தபெருமாள் அருள்பாலிக்கிறார். இடக்கரத்தில் இரு விரல்களையும், வலக்கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டி நிற்கிறார். இரண்டடியால் மண்ணையும், விண்ணையும் அளந்தபின் ‘மூன்றாவது அடி எங்கே?’ என்று கேட்கும் விதத்தில் வீற்றிருக்கிறார். 

இவருக்கு திருவிக்ரமன் என்ற பெயரும் உண்டு. 

தாயாருக்கு அமுதவல்லி நாச்சியார் என்பது திருநாமம். பேரகம் உரகத்தான்: 

சாதாரண மனிதனாக இருந்த மகாபலி  உலகளந்த பெருமாளின் நெடிய கோலத்தை முழுமையாகக் காணமுடியாமல் பதை பதைத்து நின்றான். பெருமாளும் மனமிரங்கி, எளிமையாக ஆதிசேஷன் வடிவத்தில் காட்சி அளித்தார். 

இந்த இடத்தை ‘பேரகம்’ என்பர். இங்கு  ஐந்து தலை நாகமாக  பெருமாள் வீற்றிருக்கிறார். 

‘உரகத்தான்’ என்பது அவரின் திருநாமம். ‘உரகம்’ என்றால் ‘பாம்பு’. அப்பெயரே மருவி நாளடைவில் ‘ஊரகத்தான்’ ஆகி விட்டது என்றும் கூறுவர்.

சுதை சிற்பமாக  இவரும் அங்கிருந்து அருள்புரிகிறார் .

2.திரு நீரகம்


மூலவர்   -   ஸ்ரீநீரகத்தான்

உற்சவர்- ஜகதீஸ்வரர்

தாயார்    - நிலமங்கைவல்லி
தீர்த்தம்   -அக்ரூர தீர்த்தம்
விமானம் -ஜகதீஸ்வர விமானம்"நீரகத்தாய்" என்று பாடலில் முதற்சொல்லாகவே கொண்டு திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த "திருநீரகம்' முற்காலத்திலே எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. 

உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். 
பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன்.

 பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். 

ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று  சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.

2059
நீரகத்தாய் நெடுவரையினுச்சிமேலாய்!
நிலாத்திங்கள்துண்டகத்தாய்! நிறைந்தகச்சி 
ஊரகத்தாய்! * ஒண்துறைநீர்வெஃகாவுள்ளாய்! 
உள்ளுவாருள்ளத்தாய்! * உலகமேத்தும் 
காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா! 
காமருபூங்காவிரியின்தென்பால்மன்னு 
பேரகத்தாய்! * பேராதுஎன்னெஞ்சினுள்ளாய்! 
பெருமான்!உன்திருவடியேபேணினேனே. (2) 


3.திருக் காரகம்

மூலவர் -  கருணாகரபெருமாள்

உற்சவர் -  கருணாகரபெருமாள்
தாயார் -  பத்மாமணி நாச்சியார், ரமாமணி நாச்சியார்

தீர்த்தம் -  அக்ராய தீர்த்தம்
விமானம் -  வாமன விமானம்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 53 வது திவ்ய தேசம் ஆகும். 
 கார்ஹ மகரிஷி தவம் இருந்து இப்பெருமானிடம் இருந்து ஞானப் பொக்கிஷத்தை பெற்றார்.

இத்தல இறைவனை நல்லறிவு , ஆற்றல் , நற்குணங்களை அருள்வார் . இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம் ஆகும்.4.திருக் கார்வானம்

மூலவர் - கார்வானப் பெருமாள்

உற்சவர் - கார்வானர்
தாயார் - கமலவல்லி  நாச்சியார்

தீர்த்தம்- கௌரி தடாகம்
விமானம் - புஷ்கல விமானம்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 54 வது திவ்ய தேசம் ஆகும். 

'கார்வானத்துள்ளாய் கள்வா' என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.

பக்தர்களுக்கு வான்மழை போல் தன் கருணை மழையை அளிக்கிறார் இப்பெருமான்.
      


எங்களின் காஞ்சி பயணத்தில் சேவித்த ஸ்தலம் ...


814

நன்றிருந்துயோகநீதி நண்ணுவார்கள்சிந்தையுள் * 
சென்றிருந்துதீவினைகள் தீர்த்ததேவதேவனே! *
குன்றிருந்தமாடநீடு பாடகத்தும்ஊரகத்தும் * 
நின்றிருந்து, வெஃகணைக்கிடந்தது என்னநீர்மையே?


815

நின்றதுஎந்தைஊரகத்து இருந்ததுஎந்தைபாடகத்து * 
அன்றுவெஃக ணைக்கிடந்தது என்னிலாதமுன்னெலாம் * 
அன்றுநான்பிறந்திலேன் பிறந்தபின்மறந்திலேன் * 
நின்றதும்இருந்ததும் கிடந்ததும்என்நெஞ்சுளே.ஓம் நமோ நாராயணா..


அன்புடன்
அனுபிரேம்

10 comments:

 1. வணக்கம் சகோதரி

  காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோவிலைப் பற்றிய செய்திகளை ரசித்துப் படித்தறிந்து கொண்டேன். படங்கள் அருமையாக உள்ளது.

  கோபுர தரிசனங்களும் விமான தரிசனங்களும், பெருமாளின் திவ்ய தரிசனங்களும் பார்க்கப் பார்க்க திகட்டாதவை. கோவிலைப்பற்றிய ஸ்தல புராணங்கள் தெரிந்து கொண்டேன். பொறுமையாக, அழகாக கோவிலைப்பற்றி விமர்சித்து உள்ளீர்கள். தங்கள் பதிவு மூலம், இந்தக் கோவிலுக்கு சென்று வந்த திருப்தி எழுகிறது. எனினும் காஞ்சிபுரம் சென்று அங்குள்ள கோவில்களை தரிசிக்கும் ஆசையும் வருகிறது. நாராயணன் அந்த சந்தர்ப்பத்தை தர வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் உங்கள் ஆசை நிறைவேறட்டும் கமலா அக்கா ...

   சில முறை படிக்கும் போது எனக்கு மிக குழப்பம் அதனாலே நேரம் எடுத்து கொஞ்சம் தெளிவாக கூற முற்பட்டேன் ..இறைவன் அருளால் சிறிது எளிமையாகவும் வந்துள்ளது .

   Delete
 2. காஞ்சிபுர உலகளந்த பெருமாள் திருக்கோவில் தரிசனம் பெற்றேன்.
  முன்பு காஞ்சிபுரத்தில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, பாடல் பெற்ற சிவன் கோவில்கள், திவ்ய தேசங்கள் பார்த்தது நினைவுக்கு வருது.
  உலகளந்த பெருமாள் கோவில் பெருமாளின் ஆடை மடிப்பு எப்படி கலைந்யத்தோடு செய்து இருக்கிறார்கள் !

  ஓம் நமோ நாராயணா!

  ReplyDelete
  Replies
  1. ஆமா கோமதி மா ...பெருமாளின் ஆடை மடிப்பை சிறிது நேரம் நின்று வியந்து தரித்தேன் ..எத்துனை அழகு

   Delete
 3. //நன்றிருந்துயோகநீதி // பாடல் சந்தமே இது திருமழிசையாழ்வார் கைவண்ணம் என்று காட்டுகிறது.

  அங்கு 14 திவ்யதேசங்களும் சேவித்தீர்களா? நான் சில மாதங்களுக்கு முன்பு தரிசித்தேன். திரும்பவும் அத்திவரதர் சேவையின்போதும் தரிசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அத்திவரதர் தரிசனத்தின் போது இங்கும் , காமாட்சியம்மன் கோவிலுக்கும் மட்டுமே போக முடிந்தது ...நேரம் இன்மை யே காரணம் ...அடுத்த விடுமுறையில் அங்குள்ள எல்லா கோவிலுக்கும் செல்ல ஆசை ...

   ஆனால் நேரம் எப்பொழுது அமையுமோ ...தெரியவில்லை

   Delete
 4. படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன. தலத்தைப் பற்றிய தகவல்களும் ஆனால் என் மண்டையில் நிற்க வேண்டுமே ஹிஹிஹி...

  கீதா

  ReplyDelete
 5. படங்கள் அருமை. தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 6. அழகழகான கோவில்கள். தலங்கள் எல்லாமே சிறப்பு. காஞ்சி செல்லும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. அழைப்பு வர வேண்டுமே!

  ReplyDelete
 7. காஞ்சிபுர உலகளந்த பெருமாள் திருக்கோவில் கண்டு மகிழ்ந்தோம்.அழகியபடங்கள்.நல்லதொகுப்பு.

  ReplyDelete