பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அழகர் மலையில் அமைந்துள்ளது.
அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
"சோலைமலை" என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகின்றார்.
பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள்.
செல்லும் வழி |
திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.
கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகன் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்தார்.
அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில்,முருகன் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.
அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார்.
நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை.
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.
உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.
சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை.
பழத்தில் கூட சுட்ட பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுடாத பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார்.
"சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ" என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன.
அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியே அவ்வையை சிந்திக்க வைத்தது,
அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை,
"குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.
மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.
இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது.
கோபுர தரிசனம் - அவ்வையாரும் முருகரும் |
கோவிலின் உள்ளே மிக அமைதி.
சுத்தமான வெளிப்புறம் என இனிமையான முருகப்பெருமானின் கனிவான சேவை கிடைக்கும் சிறப்பான ஸ்தலம் ...
பழமுதிர்ச்சோலைக்கு வரும் முன்னே கீழே உள்ள அழகர் கோவில் தரிசனம் இங்கு ....
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், மதுரை
பழமுதிர்ச்சோலையை கடந்து மேலே செல்லும் பொது கிடைக்கும் நூபுர கங்கை தீர்த்தம் தரிசனம் இங்கு ....
நூபுர கங்கை தீர்த்தம் ,ராக்காயி கோவில், மதுரை
கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் வியந்து பாடிய ஸ்தலம் .
அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் ,
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் போற்றிப்புகழ்ந்த அழகு மிகு மலையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலமே பழமுதிர்சோலையாகும் .
......... பாடல் .........திருப்புகழ் அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை)
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி
அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி
அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி
அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி
அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி
அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி
அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி
அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி
இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி
வருவோனே ... வருபவனே
இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்
எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக
மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)
மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்
வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே
வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)
அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற
கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)
என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே
திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த
பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
ஏற்கனவே தரிசித்த சில முருகன் ஸ்தலங்கள்--இங்கு
முருகா சரணம் !
கந்தா சரணம்!
கதிர்வேலா சரணம்!
அன்புடன்,
அனுபிரேம்
அனுபிரேம்
அழகான கோவில். படங்கள் அனைத்தும் சிறப்பு.
ReplyDeleteபயணங்கள் தொடரட்டும்.
கந்தஷஷ்டி நடக்கும் இந்நாளில் பழமுதிர்சோலை முருகனின் தரிசனம். பாடசாலையில் மனனம் செய்த திருபுகழ் .அழகான படங்கள்.2வது படம் மிகவுமழகு.முருகனின் அலங்காரம் கண்கொள்ளாக்காட்சி.
ReplyDeleteதிருப்புகழ் பாடலும், படங்களும், வரலாறும் பதிவு அருமை.
ReplyDeleteபோன முறை கந்தஷஷ்டிக்கு ஆறு நாளும் பதிவுகள் போட்டேன் அந்த நினைவு வந்தது.
அழகிய படங்களுடன் கூடிய அருமையான விளக்கங்கள்!
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteமிகவும் அழகான படங்கள், அருமையான கதைகள் என கந்தசஷ்டி பதிவு நன்றாக உள்ளது. கந்தசஷ்டிக்கு முருகன் தரிசனம் நன்றாக தரிசித்துக் கொண்டேன். திருப்புகழ் பாடலும் விளக்கமும் அருமை. நான் பழமுதிர் சோலைக்கு ஓரிரு தடவை சென்றிருக்கிறேன். அழகான முருகன் அனைவருக்கும் நலன்களை அள்ளித் தரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகிய படங்களுடன் முருகன் தரிசனம்.
ReplyDelete