26 December 2020

11. கற்றுக் கறவை

 கற்றுக் கறவை


"பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? "




ஆண்டாள் இப்போது எழுப்பப்போகும் தோழி மிகவும் பேரழகு கொண்டவள். அவளைப் பெண்ணாகப் பெற்றதால், அவளைப் பெற்றவர்கள் மட்டுமல்ல, கோகுலத்தில் உள்ள அனைவரும் பாக்கியம் செய்தவர்களாம். அப்படி கோகுலத்துக்கே பெருமை சேர்த்த அந்தப் பெண்ணை அவளுடைய தந்தையின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி, அப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்றவரின் பெண்ணே, எழுந்திரு என்கிறாள்.



                                                    கற்றுக்கறவைக் கணங்கள் பலகறந்து *

செற்றார்திறலழியச் சென்று செருச்செய்யும் *

குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! *

புற்றரவல்குல் புனமயிலே! போதராய் *

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும்வந்து * நின் 

முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாட * 

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! * நீ

எற்றுக்குஉறங்கும் பொருளேலோரெம்பாவாய்.

    


பொருள் 

''இளம் கன்றுகளோடு கூடிய பசுக்களின் மடியில் கை வைத்து கறக்கத் தொடங்கும்போதே, வஞ்சனை இல்லாமல் பாலைப் பொழிகிற பசுக்களைப் பெற்றவரும், பொறாமையின் காரணமாக தன்னை அழிக்க நினைக்கும் பகைவர்களை, அவர்களுடைய இடத்துக்கே சென்று போர் செய்து அழிக்கும் வல்லமை பெற்றவரை தந்தையாகப் பெற்ற பொற்கொடியே, நீ பிறந்ததால் உன் பெற்றோர் மட்டுமல்ல, அந்த கோகுலத்தில் உள்ள அனைவருமே பாக்கியம் செய்தவர்கள் ஆனார்கள். 


பொற்கொடியைப் போன்று ஒளி வீசும் அழகிய பெண்ணே! சிறந்த கற்புத் திறம் உடையவளே! காட்டில் தன்னிச்சையாகத் திரிகிற அழகிய மயில் போன்றவளே! உன்னுடைய தோழிகளாகிய நாங்கள் எல்லோரும் உன் வீட்டு முற்றத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கிறோம் எழுந்து வா'' என்று தாங்கள் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்கிறாள் ஆண்டாள்.


ஆண்டாள் இப்படி அழைத்தும் தோழியிடம் எந்த ஓர் அசைவும் இல்லை. 

எனவே, ''பெண்ணே! நாங்கள் வந்து இப்படி காத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தும் நீ இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே. உன் தந்தை எந்த கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டிருக்கிறாரோ, அந்தக் கிருஷ்ணனின் அருளைப் பெற நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே நாங்கள் மார்கழி நீராடி அந்த கிருஷ்ணனின் புகழைப் பாட புறப்பட்டு இருக்கிறோம். நாங்கள் பெற விரும்பும் அந்த பேரின்பத்தை நீயும் பெறவேண்டும் என்று விரும்பித்தான் உன்னை எங்களுடன் அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். 

'நீ உயர்ந்த குடும்பத்தில் பிறந்துவிட்டதால், உனக்கு கிருஷ்ணரின் அருள் எளிதில் கிடைத்துவிடும் என்று நினைத்துக்கொள்ளாதே' என்று ஆண்டாள் கூறுவதாக நினைத்து, அஹோபில மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் தம்முடைய திருப்பாவை விளக்கவுரையில் அற்புதமான ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறார்.

'மோட்சம் தரும் ஏழு க்ஷேத்திரங்கள் இருந்தாலும், அந்த க்ஷேத்திரங்களில் பிறந்துவிட்டதால் மட்டுமே ஒருவருக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. மோட்சம் அடையவேண்டும் என்ற நினைப்பு இருப்பவர்கள் தான் அதற்கான முயற்சி செய்து மோட்சத்தை அடைவார்கள். இல்லாவிட்டால், அந்த க்ஷேத்திரங்களில் பிறந்த எல்லா ஜீவன்களுமே மோட்சம் அடைந்துவிடுமே. 

கிருஷ்ணரிடம் பக்தி கொண்ட பெற்றோர்க்கு பெண்ணாகப் பிறந்துவிட்டதாலோ, உயர்ந்த குலத்தில் பிறந்துவிட்டதாலோ ஒருவருக்கு பகவான் கிருஷ்ணரின் அருளும் மோட்சமும் கிடைத்துவிடாது. பகவானை அடையவேண்டும் என்ற இலட்சியம் இருக்கவேண்டும்' என்று அருளி இருக்கிறார்.


அப்படித்தான் ஆண்டாள் தன் தோழியிடம், ''மார்கழி நீராடி, அந்த முகில்வண்ணனின் புகழைப் பாடி, அவனுடைய அருளைப் பெறுவதற்காக நாங்கள் எல்லோரும் வந்து உன் வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். விரைந்து எழுந்திருந்து எங்களுடன் வா'' என்று அழைக்கிறாள்.

எப்படியோ ஒருவழியாக ஆண்டாள் அந்தத் தோழியை எழுப்பிவிடுகிறாள். அவளையும் அழைத்துக்கொண்டு அடுத்த தோழியை அழைப்பதற்குச் செல்கிறாள்.


(இணையத்திலிருந்து )

திருநாங்கூர் மணிமாட கோவில் - ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார்





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன் 

அனுபிரேம்




1 comment:

  1. சிறப்பான படங்களும் விளக்கமும்.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete