02 January 2021

18.உந்து மதகளிற்றன்

உந்து மதகளிற்றன்


நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்





ஆண்டாள் கிருஷ்ணனையும் பலராமனையும் எழுப்புகிறாள். ஆனால், கிருஷ்ணன் உறங்கிக் கொண்டிருக்கும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. அப்போதுதான் ஆண்டாளுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. கிருஷ்ணனின் மனைவியான நப்பின்னை வந்து கதவைத் திறந்தால்தானே, நாம் கூப்பிட்டு எழுப்புவது கிருஷ்ணனுக்கு தெரியும். எனவே முதலில் நப்பின்னையை எழுப்பிவிடுவோம் என்று ஆண்டாள் நப்பின்னையை எழுப்புகிறாள். நப்பின்னை சாதாரண வீட்டுப் பெண்ணா என்ன? பெரிய வீட்டு மருமௐகள் அல்லவா? அவளுடைய புகுந்த வீட்டுப் பெருமையைக் குறித்தும், அவளுடைய சிறப்புகள் குறித்தும் ஆண்டாள் பாடுகிறாள்.


   


உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன் *

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! * 

கந்தம் கமழுங்குழலி! கடைதிறவாய் *

வந்துஎங்கும் கோழிஅழைத்தனகாண் * மாதவிப் 

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் *

பந்தார்விரலி! உன்மைத்துனன் பேர்பாட * 

செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப *

வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். (2)

 

பொருள் -


பெருகி வரும் மதநீரை உடைய பெரிய யானையோடுகூட போராடி வெற்றி கொள்ளும் தோள் வலிமை உடைய நந்தகோபனின் மருமகளே! நப்பின்னையே! என்று அழைக்கிறாள்.

இந்த நப்பின்னை யார் ..... நப்பின்னை, கிருஷ்ணனுக்கு எட்டு பட்டத்து ராணிகள் இருந்தனர். அவர்களில் ஒருத்திதான் நப்பின்னை. இவள் உண்மையில் பகவான் நாராயணனின் மூன்று மனைவியரில் ஒருவளான நீளாதேவியே ஆவாள்.


பகவானின் அவதாரங்களில் கிருஷ்ணனின் அவதாரம் பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்தது. ராமாவதாரத்தில்கூட, மகாலக்ஷ்மி பிராட்டி மட்டுமே சீதையாக அவதரித்தார். பூமி தேவியோ நீளா தேவியோ அவதாரம் செய்யவில்லை. ஆனால், கிருஷ்ணன் அவதரித்தபோது பகவானின் மூன்று தேவியருமே இந்த உலகத்தில் அவதாரம் செய்தனர். 

மகாலக்ஷ்மி ருக்மிணியாகவும், பூமிதேவி சத்யபாமாவாகவும், நீளாதேவி நப்பின்னையாகவும் அவதரித்து கிருஷ்ணனை மணந்துகொண்டனர்.


இந்த மூவரில் நப்பின்னையை மட்டும் ஆண்டாள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், ருக்மிணியும் சத்யபாமாவும் கிருஷ்ணனை மணந்துகொண்ட பிறகுதான் நந்தகோபனுக்கு மருமகள்கள் ஆகின்றனர். ஆனால், இந்த நப்பின்னையோ ஆயர்குலத்தில், யசோதையின் சகோதரனுக்கு மகளாகப் பிறந்தவள். எனவே முன் இருவர்களை விடவும் ஆண்டாள் நப்பின்னையை மட்டும் குறிப்பாக சிறப்பித்து அழைக்கிறாள்.



நப்பின்னையின் தந்தை கும்பன் முரட்டுத்தனமான, அடக்குவதற்கு கஷ்டமான ஏழு எருதுகளை வளர்த்து வந்தான். அந்த ஏழு எருதுகளை அடக்கும் வீரன் எவனோ அவனுக்கே தன்னுடைய மகளைக் கல்யாணம் செய்துகொடுப்பேன் என்று அறிவித்திருந்தான். பலரும் அந்த எருதுகளை அடக்கமுயன்று தோற்றுப் போனார்கள். 

நப்பின்னையை கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்த கண்ணன், தான் அந்த ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக யசோதையிடம் சொல்கிறான். யசோதைக்கு அதில் விருப்பம் இருந்தாலும், எருதுகளால் தன் செல்ல மகனுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமும் ஏற்படுகிறது. கிருஷ்ணன் யசோதையை சமாதானம் செய்துவிட்டு, கும்பனின் நிபந்தனைப்படி ஏழு எருதுகளை அடக்கி, நப்பின்னையை மணந்துகொள்கிறான்.


 ஆண்டாள் தன்னை ஆயர்குலத்தில் பிறந்தவளாகக் கருதிக்கொண்டு, பாவை நோன்பு இருப்பதால், இயல்பாகவே அவளுக்கு ஆயர்குலத்தில் பிறந்த நப்பின்னையின் மீது தனிப் பிரியம் ஏற்படுவது இயல்புதானே?


நப்பின்னை அந்த அறையில் படுத்திருப்பது ஆண்டாளுக்கு எப்படித் தெரிந்தது? நப்பின்னை தன் கூந்தலில் சூடி இருந்த நறுமணம் மிக்க மலர்களின் வாசனையானது, ஆண்டாளுக்கு நப்பின்னை அந்த அறையில் படுத்திருப்பதைத் தெரிவித்துவிட்டதாம். எனவே, நப்பின்னையே, நீ எங்களை ஏமாற்ற முடியாது. நீ இந்த அறையில்தான் படுத்திருக்கிறாய். 

உன் அருகில்தான் கிருஷ்ணனும் படுத்திருக்கிறான். கிருஷ்ணனுடன் பந்து விளையாடும் விரல்களை உடையவளே! உன்னுடைய கிருஷ்ணனின் புகழைப் பாடி அவனுடைய அருளைப் பெறவே நாங்கள் வந்திருக்கிறோம். 

செந்தாமரை மலர்களைப் போன்ற கைகளை உடையவளே! நப்பின்னையே! நீ எழுந்து வந்து உன் கைகளில் அணிந்திருக்கும் வளைகள் ஒலிக்கும்படியாக கதவுகளைத் திறந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தவர்கள் ஆவோம் என்கிறாள் ஆண்டாள்.


(இணையத்திலிருந்து )


வானமாமலை ஸ்ரீ வரமங்கை தாயார்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன்
அனுபிரேம்


2 comments:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய திருப்பாவை பாடலும். அதன் விளக்கமும் அற்புதமாக இருந்தது. கேள்வியுறாத சில விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
    ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் திருவடிகளை போற்றுவோம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. அழகான படங்கள்... அருமை...

    ஆண்டாள் திருவடிகள் போற்றி...

    ReplyDelete