07 January 2021

23. மாரி மலை முழைஞ்சில்

மாரி மலை முழைஞ்சில் 


"நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்!"




                                   

மார்கழி முதல் நாளில் இருந்து தன் தோழிகள் ஒவ்வொருவரையும் பாடுபட்டு எழுப்பிய ஆண்டாள், நந்தகோபனின் மாளிகைக்கு வந்து வாயிற்காவலனை ஒருவழியாகச் சமாதானப்படுத்தி உள்ளே சென்று நந்தகோபரின் அனுமதி பெற்றுவிட்டாள். 

தொடர்ந்து அடுத்த அறையில் இருந்த யசோதையின் அனுமதி பெற்று, கிருஷ்ணனின் அறைக்கும் வந்துவிட்டாள்.


ஆனால், கிருஷ்ணனை யமுனைக்கு அழைத்துச் செல்வதற்கு நப்பின்னையின் சம்மதம் அல்லவா முக்கியம்? அவளைப் பலவாறு புகழ்ந்தும் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.  கடைசியில் ஒருவழியாக நப்பின்னையின் மனமும் ஆண்டாளிடமும் அவளுடைய தோழிகளிடமும் இரக்கம் கொண்டது.


அவளும் கிருஷ்ணனை அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஆனால், கிருஷ்ணனுக்கு உடனே எழுந்திருக்க மனம் வரவில்லை.

 கடைசியில் ஒருவழியாக கிருஷ்ணனும் எழுந்திருக்கிறான். கிருஷ்ணன் எழுந்ததைக் கண்டு ஆண்டாளும் அவள் தோழியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். கிருஷ்ணன் சீக்கிரம் வந்து அவனுக்கு உரிய ஆசனத்தில் அமர்ந்து தங்களுடைய குறைகளைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறாள்.



மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் *

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து *

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி *

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *

போதருமா போலே நீபூவைப்பூ வண்ணா! * உன் 

கோயில்நின்றும்  இங்ஙனேபோந்தருளி* கோப்புடைய 

சீரிய சிங்காசனத்துஇருந்து * யாம்வந்த 

காரியம் ஆராய்ந்தருளேலோ ரெம்பாவாய். (2)


பொருள்- 

'கிருஷ்ணா, நீ எழுந்துகொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நீ எழுந்துகொண்டால் மட்டும் போதுமா என்ன?' என்று கேட்கிறாள். அதற்கு கிருஷ்ணன், 'நீங்கள் சொன்னபடியே எழுந்துகொண்டேன்.. இன்னும் நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்கிறான்.

ஆண்டாள், 'மழைக்காலத்தில் மலைக் குகையில் நீண்ட உறக்கத்தில் இருக்கும் சிங்கம், மழைக்காலம் முடிந்ததை உணர்ந்துகொண்டதும், தீக்கங்கு போல் சிவந்த கண்களை விழித்துப் பார்த்தபடியும், எல்லா அங்கங்களையும் பிடரி முடி சிலிர்க்கும்படியாக உடம்பை உதறிக்கொண்டு, கர்ஜனை செய்துகொண்டு வெளியில் வருவதுபோல், காயாம்பூவின் நிறம் கொண்டவனே, கிருஷ்ணா! உன்னுடைய அறையில் இருந்து புறப்பட்டு, நீ ராஜாங்கம் நடத்தும் ஆஸ்தான மணிமண்டபத்துக்கு எழுந்தருளவேண்டும்' என்கிறாள். 

 

ஆண்டாள் கிருஷ்ணனை சிங்கமாக வர்ணித்துப் பாடியதற்குக் காரணமும் இருக்கிறது. ...

பிரகலாதன் காணும் இடமெங்கும் நீக்கமற நிலைத்திருப்பான் என் நாராயணன் என்று சொன்ன அந்தக் கணமே, எங்குமே நீக்கமற அருவமாக நிலைத்திருக்கும் அந்தப் பரம்பொருளான நாராயணன், நரசிம்ம உருக்கொண்டுவிட்டான். அதுமட்டுமல்ல 'இரண்யன் எந்தத் தூணைப் பிளப்பானோ?' என்ற எண்ணத்தில் காணும் இடமெங்கும் நரசிங்க வடிவம் கொண்டு நிலைகொண்டுவிட்டார். அதேபோல் கிருஷ்ணனும் நாங்கள் காணும் இடமெங்கும் நிலைபெற்று இருந்து தங்களை மகிழ்விக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டாள் இப்படிப் பாடி இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.


'அப்படி கிருஷ்ணன் சிங்கம் போல் எழுந்து நடந்து ஆஸ்தான மண்டபத்தில் உள்ள சிங்காசனத்தில் எழுந்தருளவேண்டும். உனக்கு நாங்கள் வந்திருக்கும் காரியம் நன்றாகத் தெரிந்திருக்கலாம். ஆனாலும், நீ உன்னுடைய ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி எங்கள் விருப்பத்தைக் கேட்பதுதான் சரியாக இருக்கும்' என்கிறாள் ஆண்டாள்.


ஆண்டாள், ஏன் கிருஷ்ணன் உறக்கத்தில் இருந்து எழுந்த அறையிலேயே அவனுடைய குறைகளைச் சொல்லாமல், ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்தருளச் சொல்கிறாள் தெரியுமா? அவனுடைய நடையழகை தரிசித்து மகிழத்தான்.

 அப்படி கிருஷ்ணன் நடந்து வரும்போதுதானே அவனுடைய திருவடிகளின் திவ்விய தரிசனத்தை ஆண்டாளும் தோழியரும் பெற முடியும். எனவேதான் ஆண்டாள் கிருஷ்ணனை ஆஸ்தான மண்டபத்துக்கு நடந்து வருமாறு கேட்டுக்கொள்கிறாள்.


விபீஷணன் ராமபிரானின் நடையழகைக் காண்பதற்கு விரும்பியபோது, ராமபிரான் திருக்கண்ணபுரத்தில் நடையழகு தரிசனம் தருவதாகச் சொல்லி, அதன்படியே இன்றைக்கும் திருக்கண்ணபுரத்தில் அமாவாசைதோறும் விபீஷணனுக்கு நடையழகு சாதிக்கும் வைபவம் நடைபெறுகிறது.


ஆண்டாள் கிருஷ்ணனுடைய நடையழகைக் காண விரும்புவதாகச் சொன்னவுடனே கிருஷ்ணன் எழுந்து வந்துவிடுவானா என்ன..

ஆண்டாளின் தேன்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்ததுபோலும். எனவே அவன் உடனே எழுந்து நடந்து வரவில்லை.


(இணையத்திலிருந்து )


திருக்கடிகை (சோளிங்கர்) - ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. படங்களும் விளக்கங்களும் நன்று. தொடரட்டும் பாசுர அமுதம்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    இன்றைய திருப்பாவை பாடல்களும், அதன் விளக்கங்களும் அருமையாக இருந்தது. ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்களைப் கேட்டு மகிழ்வதற்காக கண்ணன் பிடிவாதமாக எழ மறுப்பதும், அதை ஆண்டாள் உணர்ந்து கொண்டாலும், பாசுரங்களினால் அவனைப் புகழ்ந்து அவன் குலம் உயர்த்தி அவனை எழுப்ப தினம் ஒரு திருப்பாவை பாடலாக பாடி அவனை மகிழ்விப்பதுமான விளக்கங்கள் கேட்பதற்கே ரம்யமாக உள்ளது தொடரட்டும் உங்கள் சேவைகள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. கிருஷ்ணனுக்கு மட்டுமா..நமக்கும்தான்.

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ஒவ்வொரு பாசுர இடுகைக்கும் உற்சாகப்படுத்தி பின்னூட்டம் போடலையேன்னு மனசுல தோணுது. பாராட்டுகள்

    ReplyDelete