08 January 2021

24.அன்றிவ்வுலகம்

அன்றிவ்வுலகம் 

"கிருஷ்ணா, நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்"











ஆண்டாளின் விருப்பப்படி கிருஷ்ணன் சிங்கத்தைப் போலவே கம்பீரமாக நடந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொள்கிறான். அவன் பின்னே ஆஸ்தான மண்டபத்துக்கு வந்த ஆண்டாளையும் அவளுடைய தோழிகளையும் பார்த்து, 'நீங்கள் என்ன காரியமாக வந்தீர்கள்?' என்று கேட்கிறான். ஆண்டாள் தாங்கள் கேட்கப் போவதை அவன் தரவேண்டும் என்பதால், முதலில் கிருஷ்ணன் புரிந்த லீலைகளைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி அவனுடைய புகழ் பாடுகிறாள். அரசனிடம் பரிசு பெறச் செல்லும் புலவர்கள், அரசனுடைய புகழைப் பாடுவதில்லையா? அதேபோல் ஆண்டாளும் கிருஷ்ணனின் புகழைப் பாடுகிறாள்.

ஆண்டாள், கிருஷ்ணனுக்கு முந்திய அவதாரங்களான வாமனன், ராமபிரான் ஆகிய இருவரும்கூட கிருஷ்ணன்தான் என்று சொல்கிறாள்.  

 


அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி *

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி *

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி *

கன்றுகுணிலா எறிந்தாய்! கழல்போற்றி *

குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி *

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி *

என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் *

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய். (2)


பொருள்-

மகாபலி சக்கரவர்த்தி பக்த பிரகலாதனின் பேரன். அதனால், அவன் அசுரனாக இருந்தாலும், தர்ம சிந்தனை உள்ளவனாக இருந்தான். இல்லை என்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவன். அதனால் அவனுக்கு கர்வமும் இருந்தது. அவன் ஒரு யாகம் செய்ய விரும்பினான். அந்த யாகம் நிறைவேறிவிட்டால், இந்திரனின் பதவிக்கே ஆபத்து வந்துவிடும். 


எனவே, தேவர்களின் வேண்டுகோளின்படி, பகவான் நாராயணன் வாமனனாக அவதாரம் செய்தார். தந்திரமாக மகாபலியிடம் மூன்றடி தானம் கேட்டான். மகாபலியும் தாரை வார்த்து, 'கொடுத்தேன்' என்று சொன்னதும், வாமனனாக வந்த பகவான், ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்க, மகாபலி தன்னுடைய தலையில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு சொன்னான். பகவானின் திருவடியை தாங்கும் பெரும்பேறு அவனுக்கு வாய்த்தது. எல்லாம் பிரகலாதனின் பேரன் என்ற காரணத்தினால்தான்.


அடுத்ததாக பகவான் ராமபிரானாக அவதரித்து, ராவணனை சம்ஹாரம் செய்ததைக் குறிப்பிடுகிறாள். ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்வதற்கு தன்னுடைய மனைவியான சீதாபிராட்டியையே பிரிந்திருக்க நேரிட்டது. அசுரனான ராவணனிடம் இருந்து உலக மக்களையும் தேவர்களையும் காப்பாற்றுவதற்காக ராவணனை வதம் செய்யவேண்டி இருந்தது. அதற்கு ஒரு காரணமே ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது. இந்த இரண்டு அவதாரங்களும் கிருஷ்ணன்தான் என்று குறிப்பிடும் ஆண்டாள், இந்த அவதாரத்தில் கிருஷ்ணன் புரிந்த லீலைகளைப் புகழ்கிறாள்.


'பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி' என்ற வரியில், கிருஷ்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய சகடாசுரனை வதம் செய்த லீலையைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். வாமனன் தந்திரமாக யாசகம் பெற்று மகாபலியை ஒடுக்கினார்; 

ராமபிரானோ இளைஞராகி, சீதையை மணம் செய்துகொண்ட பிறகு ராவணனை சம்ஹாரம் செய்தார்.


ஆனால், கிருஷ்ணனோ தான் பச்சிளம் குழந்தையாக இருந்தபோதே பூதனையைக் கொன்றான்; சிறு பிள்ளையாக ஆனதுமே சகடாசுரனைக் கொன்றான். பின்னும் கம்சன் அனுப்பிய வத்சாசுரன் கன்றின் வடிவம் கொண்டு வந்தபோது அவனையும் அழித்தான் என்று கிருஷ்ணனின் லீலைகளைக் குறிப்பிட்ட ஆண்டாள், இப்படி கிருஷ்ணனின் சம்ஹார லீலைகளை மட்டுமே சொன்னால், அவனுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமே என்று அச்சம் கொண்டவளாக, கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து, இடிமின்னல், அடைமழையில் இருந்து கோகுலத்து வாசிகளைக் காப்பாற்றிய லீலையையும் குறிப்பிட்டுப் புகழ்கிறாள்.


இப்படியெல்லாம் லீலைகள் புரிந்தவனே, கிருஷ்ணா! உன்னைப் போற்றுகிறோம். பகைவர்களை வெர்றி கொள்ளும் உன்னுடைய ஆயுதமான சுதர்சனத்தையும் போற்றுகிறோம். நாங்கள் இப்படி உன்னைப் பாடிப் புகழ்வது எதற்கு என்பது உனக்குத் தெரியாதா என்ன? நாங்கள் எதை வேண்டி வந்திருக்கிறோமோ அதைத் தட்டாமல் எங்களுக்குத் தரவேண்டும் என்கிறாள் ஆண்டாள்.


திருக்கூடல் - ஸ்ரீ மதுரவல்லி தாயார்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய பாசுரம் அருமையானது.தாயாரின் படங்களையும் தரிசித்து கொண்டேன். ஸ்ரீ ஆண்டாள் முதலில் கிருஷ்ணனின் புகழ் பாடி, பின்பு தாங்கள் வந்த காரணங்களை கூற ஆரம்பிப்பது அழகு. பாடலுக்கு விளக்கங்கள் மிக அருமையாக இருந்தன. மிகவும் பக்தியுடன் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே போற்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. இனிய காலை வணக்கம்.

    இன்றைய பாசுரமும் விளக்கமும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  3. அருமை. ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete